பொறியியல் கல்வி! ஒளிமயமான எதிர்காலத்துக்கு மின்னியல்!

பொறியியல் கல்வியில் ஒளிமயமான எதிர்காலத்துக்கு மின்னியல் துறை பற்றி
மின்னியல் துறை
மின்னியல் துறை
Updated on
2 min read

சர்வதேச அளவில் மின்சார உற்பத்தி, விநியோகம், பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகின்றன. மின்உற்பத்தியிலும் அணுமின்சாரம், அனல் மின்சாரம், புனல் மின்சாரம், சூரியமின்சக்தி, காற்றாலை என பல்வேறு பிரிவுகள் மேம்பட்டுள்ளன. வேலைவாய்ப்பில் ஒளிமயமான எதிர்காலம் கொண்ட படிப்பாக மின்னியல் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மின்னியல் துறையின் கீழ் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் இளநிலை (பி.இ.-EEE), மத்திய அரசின்கீழ் இயங்கும் ஐஐடிகளில் பி.டெக் மின்னியல் தனியாகக் கற்பிக்கப்படுகிறது. பிளஸ்-2 படிக்கும்போது கணித உயிரியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இப் படிப்பில் சேரலாம்.

வேலைவாய்ப்புகள்

மின்னியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. என்.டி.பி.சி. (National Thermal Power Corporation), பெல் (BHEL), பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் பல்வேறு மாநில மின்சார வாரியங்கள் உள்ளிட்ட மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன. ABB, Siemens, Schneider Electric, L&T போன்ற நிறுவனங்கள், மின்சார உபகரண உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

தென் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் மிகவும் வளர்ச்சி பெற்று வருகிறது. டாடா நிறுவனம் உள்பட ஏராளமான நிறுவனங்கள் சூரியமின்சக்தி உபகரண உற்பத்தி தொழிற்சாலைகளையும், சூரியமின்சக்தி உற்பத்தி மையங்களையும் உருவாக்கியுள்ளன. இதுதவிர கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பணகுடி, ராதாபுரம் சுற்றுவட்டாரங்களில் காற்றாலை மின்உற்பத்தி தனித்துவம் பெற்றுத்திகழ்கிறது. ஆகவே, மின்னியல் துறை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் அரசு மற்றும் பொதுத்துறைகளுக்கு நிகராக தனியார் துறையிலும் அதிகரித்துள்ளது.

மின்னியலுடன் நேரடியாக தொடர்புடைய துறைகள் தவிர்த்து, பிற துறைகளிலும் மின்னியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. மென்பொருள் உருவாக்குநர்கள், உள்பொதிக்கப்பட்ட சிஸ்டம்ஸ் என்ஜினியர்கள் (Embedded system engineers) மற்றும் ஆட்டோமேஷன் நிபுணர்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு பெற முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ, டிஆர்டிஓ, பிஏஆர்சி, சிஎஸ்ஐஆர் போன்ற முதன்மை நிறுவனங்களிலும், தனியார் ஆய்வகங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களிலும் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ONGC, BEL, SAIL, GAIL,IOCL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் எஅபஉ மதிப்பெண்கள் மூலம் மின்னியல் துறை பட்டதாரிகள் வேலைக்கு சேர முடியும். UPSC, SSC, State PSCs உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் மின்னியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளிலும், இந்திய ரயில்வே, பிஎஸ்என்எல் நிறுவனங்களில் பணியில் சேர முடியும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணியிலும் சேரலாம். எலெக்ட்ரிக் வாகனங்கள், ஸ்மார்ட் கிரிட்கள், ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் போன்ற வளர்ந்து வரும் துறைகள் மின்னியல் படிப்புக்கான தேவையை அதிகரித்துள்ளது.

உயர்கல்வி வாய்ப்புகள்

மின்னியல் துறையில் இளநிலையில் பி.இ., பி.டெக். முடித்தவர்களுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. பவர் சிஸ்டம்ஸ் (Power Systems), பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ஸ் (Power Electronics and Drives), எம்பெடட் சிஸ்டம்ஸ் (Embedded Systems), விஎல்எஸ்ஐ டிசைன் (VLSI Design), ரெனிவபிள் எனர்ஜி (Renewable Energy), ரோபோட்டிக்ஸ் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் (Robotics and Control Systems) ஆகியவற்றில் எம்.இ./எம்.டெக் போன்ற முதுநிலை படிப்புகளில் சேரலாம்.

மின்னியல் முடித்தவர்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டுக் கல்விநிறுவனங்களில் தகுதித்தேர்வுகளை எழுதி எம்.எஸ். (Master of Science)படிப்பிலும், பிஹெச்டி படிப்பிலும் சேரும் வாய்ப்புகள் உள்ளன.

மின்னியல் படிப்பு குறித்து திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லதா கூறியது: மின்னியல் துறை படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இளநிலையில் சர்க்யூட் தியரி, எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ், டிரான்ஸ்பார்மர், டிஜிட்டல் எலக்ட்ரிக் சர்க்யூட், பவர் சிஸ்டம் உள்ளிட்டவை குறித்து அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இக் கல்வியில் செயல்முறைக் கல்வி மிகவும் அவசியம். ஏசி, டிசி மின்வகைப்பாடு இயந்திரங்களுக்கான தனியாகவும், மாற்றுஎரிசக்திதுறைக்கான சூரியஒளி மின்சக்தி, காற்றாலை மின்சக்திக்கு தனியாகவும் ஆய்வகங்கள் உள்ளன. பிரத்யேகமாக ரூ.40 லட்சம் மதிப்பில் பிரஷர் மற்றும் டெம்ப்ரேச்சர் அளவீடு செய்யும் கெலிபிரேட்டிங் எக்யூப்மென்ட்ஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் மின்சாதன கன்ட்ரோல் அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த ஆய்வகத்தின் மூலம் பரிசோதிப்பதை மாணவர்கள் அறிந்து கொள்கிறார்கள். மின்னியல் துறையில் ஆய்வக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனை கவனமுடன் கற்றுத்தேர்ந்தால் வேலைவாய்ப்பு பெறும்போது பணி எளிதாக இருக்கும். மின்னியல் படிப்பை பொருத்தவரை வாய்ப்புகள் மிகுந்த படிப்பாகவே தொடர்ந்து வருகிறது என்றார் அவர்.

About the Department of Electronics for a Bright Future in Engineering Education

மின்னியல் துறை
பொறியியல் கல்வி! காலத்தின் தேவை கட்டடப் பொறியியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com