பொறியியல் கல்வி! காலத்தின் தேவை கட்டடப் பொறியியல்

புத்துலகைக் கட்டமைக்கும் பொறியியல் கல்வியின் முக்கியத்துவத்தில் காலத்தின் தேவை கட்டடப் பொறியியல்.
file photo
கட்டடப் பொறியியல் துறைANI
Updated on
2 min read

தஞ்சை பெரியகோயில், கரிகாலனின் கல்லணை, தாஜ்மஹால் போன்ற உலகப் புகழ்பெற்ற கட்டடங்களில் தொடங்கி தற்போதைய ஸ்மார்ட் சிட்டி கட்டமைப்பு வரை கட்டட பொறியியலின் செல்வாக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும்போது, இந்தத் துறையின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது.

இந்திய கட்டுமானத் துறை கடந்த சில தசாப்தங்களாக நிலையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய கட்டுமானத் துறை தற்போது 250 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்டுக்கு சுமார் 8 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து 2027 ஆம் ஆண்டுக்குள் 530 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

கரோனா தொற்றுநோயால் இந்தியாவில் கட்டுமானத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியவில்லை. இந்தியப் பொருளாதாரம் தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இது கட்டுமானத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் என்பதால் கட்டுமானத் துறையின் எதிர்காலம் சந்தேகத்திற்கு இடமின்றி பிரகாசமாகத் தெரிகிறது.

இதனால் சிறந்த சிவில் பொறியியல் கல்லூரிகளில் இருந்து தகுதி பெற்ற, நன்கு பயிற்சி பெற்ற சிவில் பொறியாளர்களுக்கான தேவை தற்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்தத் தேவை வரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும். நகப்புறங்களில் வாழ்க்கைத் தரம் அதிகரித்து வருவதால் ஆடம்பர, நவீன வீடுகளின் கட்டுமானம் அதிகரிக்கிறது. எனவே தனியார் கட்டுமான நிறுவனங்களால் உருவாக்கப்படும் வணிக, குடியிருப்பு சொத்துகளும் அதிகரித்து வருவதும் பொறியாளர்களின் தேவையை அதிகரிக்கின்றன. 2024 ஆம் ஆண்டின் ஒரு புள்ளி விவரம் கட்டுமானத் துறைக்கு சுமார் 3 கோடி பேர் தேவைப்படுவதாக் கூறுகிறது.

தனியார் துறை நிறுவனங்கள்

பொதுத்துறைக்கு இணையாக தனியாரில் எல் அண்ட் டி, பல்லோன்ஜி, ஆஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டாடா ப்ராஜெக்ட்ஸ் ஆகியவை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்கின்றன. இதில், மெட்ரோ ரயில் அமைப்புகள், விரைவுச் சாலைகள் தொழில் துறை பூங்காக்கள், விமான நிலையங்கள், உயரமான கட்டடங்கள் ஆகியவை அடங்கும்.

ரியல் எஸ்டேட் துறையும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இது 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் சந்தை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீத பங்களிக்கும். இந்த வளர்ச்சி கட்டமைப்பானது, பொறியியல் திட்ட மேலாண்மை, நிலையான கட்டட நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற சிவில் என்ஜினியர்களின் தேவையை அதிகரிக்கின்றன.

மேலும், துறைமுகங்கள், சாலை, வீட்டுவசதி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், எஸ்ஸார் குழுமம், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு, ஜேபி குழுமம், நாகார்ஜூனா கட்டுமான நிறுவனம், கோதெ்ரஜ் குழுமம், டாடா ஹவுசிங், ரேமண்ட் ரியால்டி, பிரமல் ரியால்டி, ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், காமன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், கன்சாலிடேட்டட் கன்ஸ்ட்ரக்ஷன் கன்சார்டியம் லிமிடெட் போன்ற பல்வேறு துறைகளிலும் பொறியாளர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்துள்ளன.

சிவில் என்ஜினியரிங் துறையில் தொழில் வாய்ப்புகள்

சிவில் என்ஜினியர்களுக்கு என்று ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. பொது, தனியார் துறை நிறுவனங்களில் சரியான தகுதிகளைக் கொண்டவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களும் சிவில் பொறியாளர்களுக்கு வலுவான தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய பொறியியல் சேவைகள் தேர்வு சிவில் என்ஜினியர்களுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்புப் பாதையாகும். இது பல்வேறு அரசுத் துறைகளில் பொறியாளர்களை நியமிக்கிறது.

மேலும், மாநில அளவிலான பொறியியல் சேவைகள், சாலைகள், நீர்ப்பாசனம், வீட்டுவசதி, நகராட்சி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சிவில் பொறியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஊரக மேம்பாட்டு அமைச்சகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஸ்மார்ட் சிட்டி சிறப்பு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் முக்கியமான வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்ற வழிகளை வழங்குகின்றன.

சிவில் என்ஜினியரிங் எதிர்கால போக்குகள்

இந்தியாவில் சிவில் என்ஜினியரிங் துறையில் மாறி வரும் புதுமைகளான பசுமை கட்டடங்கள், ஆற்றல் திறன், வனப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகரித்து வரும் முக்கியத்துவம் காரணமாக நிலைத்தன்மை முன்னணியில் உள்ளது. இதனால், மூங்கில், சாம்பல் செங்கற்கள், ஜியோ பாலிமர் சிமென்ட் போன்ற மாற்றுப் பொருள்களின் பயன்பாடு, நிலையான வடிவமைப்புக்கான தேவைகள் அதிகரிக்கின்றன.

மெட்ரோ நெட்வொர்க்குகள், பேருந்து விரைவு போக்குவரத்து, மின்சார வாகன உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கம் மூலம் நகர்ப்புற இயக்கம் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. வாழக்கூடிய மீள்தன்மை கொண்ட நகரங்களை உருவாக்க, நகர்ப்புற திட்டமிடுபவர்கள், தரவு விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து சிவில் பொறியாளர்கள் அதிகளவில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான குழுக்களில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், வெப்ப அலைகள் அதிகரித்து வருவதால், சிவில் பொறியாளர்கள் காலநிலை உச்ச நிலையைத் தாங்கக்கூடிய கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். எனவே மக்கள் தொகை பெருக்கம், மாறி வரும் காலசூழலுக்கு ஏற்ப உள்கட்டமைப்புகளைத் திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் சிவில் என்ஜினியர்களின் தேவை அதிகம் இருப்பதால், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் தேர்வு சிவில் என்ஜினியரிங்காக இருப்பது உகந்தது.

Summary

The need of the hour is structural engineering, which is essential for the importance of engineering education in building a new world.

file photo
புத்துலகைக் கட்டமைக்கும் பொறியியல் கல்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com