தஞ்சாவூர் தொகுதி: "நெற்களஞ்சியத்தை' கைப்பற்ற கடும் போட்டி!

தஞ்சாவூர் தொகுதி: "நெற்களஞ்சியத்தை' கைப்பற்ற கடும் போட்டி!

வி.என்.ராகவன்

தென்னிந்திய நெற்களஞ்சியத்தின் முக்கியமான பகுதியாகப் போற்றப்படும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழிலை முதன்மையாகக் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகம். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில், உலகிலேயே முதல் அணையான 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, சரஸ்வதி மகால் நூலகம் போன்றவை உள்ளன.

இத்தொகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியில் கள்ளர், ஆதிதிராவிடர், அகமுடையர், முத்தரையர் உள்ளிட்டோர் அதிக அளவில் உள்ளனர். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

கடந்த 1952-இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில், இத்தொகுதியிலிருந்து ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவரானார். பெரும்பாலும் காங்கிரஸ் வசம் இருந்த இத்தொகுதி 1996-ஆம் ஆண்டுமுதல் கிட்டத்தட்ட திமுக கோட்டையாக மாறியது. இத்தொகுதியில் 1957, 1979-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் உள்பட இதுவரை நடைபெற்ற 19 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 9 முறையும், திமுக 8 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது இத்தொகுதியில் நடைபெறும் 20-ஆவது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை இடையேதான் போட்டி நிலவுகிறது.

திமுக வேட்பாளர் ச. முரசொலி: இத்தொகுதியில் வழக்கம்போல இந்த முறையும் திமுகவே களமிறங்கியுள்ளது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவில் புதுமுகமாக தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலர் ச. முரசொலி (45) களமிறக்கப்பட்டுள்ளார். பி.எஸ்ஸி., பி.எல். படித்துள்ள இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும், திமுகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் முழுவீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பெ. சிவநேசன்: அதிமுகவைப் பொருத்தவரை இத்தொகுதியைப் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதேபோல, இந்த முறை கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்தது. தேமுதிகவில் மாவட்ட முன்னாள் அவைத் தலைவரான பெ. சிவநேசன் (51) போட்டியிடுகிறார். இவர், ஏற்கெனவே 2006-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

இத்தொகுதியில் தேமுதிகவுடன் இணைந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரும் முழுவீச்சில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தம்: பாஜகவில் மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம் (49) போட்டியிடுகிறார். அகமுடையர் சமூகத்தைச் சார்ந்தவர். இவர் ஏற்கெனவே தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 2014-ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். எனவே, இத்தொகுதியில் இவர் ஏற்கெனவே அறிமுகமானவர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர்: நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் (56) களமிறக்கப்பட்டுள்ளார். பி.ஏ. அரசியல் அறிவியல் படித்துள்ள இவர் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர். கட்சித் தொண்டர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் ஆர்வலர்களின் வாக்குகளை முழுமையாக நம்பி, வாக்குசேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.

தொகுதி நிலவரம்: இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 9 முறையும், திமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறை திமுக வெற்றி பெற்று காங்கிரஸின் சாதனையை எட்டி, தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. தேமுதிகவும், பாஜகவும் தீவிரமாகக் களப் பணியாற்றுவதால், இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.

திமுக, தேமுதிக வேட்பாளர்கள் கள்ளர் சமூகத்தையும், பாஜக வேட்பாளர் அகமுடையர் சமூகத்தையும் சார்ந்தவர்கள் என்பதால், இத்தொகுதியில் பெரும்பான்மையாகக் கொண்ட முக்குலத்தோர் வாக்குகள் மூன்றாகப் பிரிகிறது.

மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இஸ்லாமியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், அச்சமூக வாக்குகளும் பிரிவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கட்சியின் பலம், அலை, பிரசார வியூகம் போன்றவற்றைப் பொருத்தே இத்தொகுதியில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கோரிக்கைகள்

இத்தொகுதியின் உயிர் நாடியான காவிரி நீர் பிரச்னை நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமலே நீடிக்கிறது. இந்நிலையில், மேக்கேதாட்டு அணை பிரச்னை மேலோங்கி வருவதால், வருங்காலத்தில் காவிரி நீர் கிடைக்குமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. எனவே, காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இதேபோல, ஒவ்வொரு தேர்தலிலும் நெல்லுக்கும், கரும்புக்கும் கட்டுப்படியான விலை அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தாலும், நடைமுறைக்கு வரவில்லை. எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும்.

முழுமையாக வேளாண் சார்ந்த இத்தொகுதியில் மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்றவை தேவைப்படுகின்றன.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தென்னை, நிலக்கடலை பெருமளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில், தனியாரிடம் குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பதால் நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, தேங்காய், கொப்பரை, நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கணிசமான அளவில் மீனவர்கள் உள்ள நிலையில் அங்கு மீன் பதப்படுத்தும் மையம், சேமிப்புக் கிடங்கு போன்றவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com