விழுப்புரம்: வெற்றிக்கு வித்திடுமா கூட்டணி பலம்?

விழுப்புரம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு அதிமுக 2 முறையும், விடுதலை சிறுத்தைகள் ஒரு முறையும் வென்றன.
விழுப்புரம்: வெற்றிக்கு வித்திடுமா கூட்டணி பலம்?

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, திண்டிவனம், வானூர் (தனி), கண்டமங்கலம் (தனி), விழுப்புரம், முகையூர், திருநாவலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது விழுப்புரம் (தனி) தொகுதியாக உருவானது.

தற்போது, இந்தத் தொகுதியில் விழுப்புரம், வானூர் (தனி), திண்டிவனம் (தனி), மயிலம், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கே.ஆனந்தன், 2014 தேர்தலில் அதிமுகவின் எஸ்.ராஜேந்திரன், 2019 தேர்தலில் துரை. ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்று, மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக பொதுச் செயலரும், தற்போதைய எம்.பி.யுமான துரை. ரவிக்குமார், அதிமுக - தேமுதிக கூட்டணி சார்பில் அதிமுகவைச் சேர்ந்த ஜெ. பாக்யராஜ், பாஜக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த எஸ். முரளிசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் உள்பட 17 பேர் போட்டியிடுகின்றனர்.

விசிகவுக்கு கூட்டணி பலம்: "இந்தியா' கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் துரை. ரவிக்குமார், இந்தத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், விழுப்புரம் தொகுதியில் தான் செய்திருக்கும் பணிகளை புத்தகமாக அச்சிட்டு வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட துரை. ரவிக்குமார், திமுக தலைமையிலான கூட்டணி பலம் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறார். இதைத் தவிர திமுக அரசின் பல்வேறு திட்டங்களும் தனது வெற்றிக்கு பெரும் பங்காற்றும் எனக் கருதுகிறார்.

அதிமுகவினர் முனைப்பு: அதிமுக சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டம், காந்தலவாடியைச் சேர்ந்த ஜெ. பாக்யராஜ் போட்டியிடுகிறார். முதல் முறையாக போட்டியிடும் இவர் இரட்டை இலை சின்னத்தை தனது பெரும்பலமாகக் கருதி தேர்தல் பணியாற்றி வருகிறார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் இந்தத் தொகுதியை அதிமுக வசமாக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். மேலும், தேமுதிகவும் கூட்டணியில் இருப்பது பலமாகக் கருதி தேர்தல் பணியாற்றி வருகிறார். கிராமப்புறங்களிலுள்ள அதிமுக வாக்கு வங்கி தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிமுக வேட்பாளர் நம்புகிறார்.

நம்பிக்கையில் பாமக வேட்பாளர்: பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எஸ்.முரளிசங்கர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே அரூர், வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய இவர், முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் தேர்தல் பிரசாரம், தொகுதியிலுள்ள பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தொகுதியில் மாம்பழம் சின்னம் ஏற்கெனவே பிரபலமானதுதான். பத்து ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், திராவிடக் கட்சிகளால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக் கூறி தனக்கு வாய்ப்பு வழங்குமாறு பிரசாரம் மேற்கொள்கிறார்.

மாற்றுக் கட்சியாக நாம் தமிழர்: தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் களம் காண்கிறார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி பிரசாரம் மேற்கொள்ளும் இவர், தொகுதியிலுள்ள முக்கிய பிரச்னைகளை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என நினைப்பவர்களின் வாக்கு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு உள்ளது.

ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விழுப்புரம் மக்களவைத் தொகுதி யாருக்கு வசமாகும் என்பதை தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும்.

கோரிக்கைகள்: குடிசைகள் மிகுந்து காணப்படும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் செய்துத் தரப்படவில்லை என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. இந்தத் தொகுதியில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும் உள்ள நிலையில், மத்திய, மாநில நிதிகள் ஒதுக்கப்பட்டும் நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் முழுமை பெறாமல் இருக்கிறது. மேலும், தளவானூர் பகுதியில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்க விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மேலும், காகிதத் தொழில்சாலை அமைத்தால் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

மீனவக் கிராமங்கள் அதிகம் நிறைந்த கோட்டக்குப்பம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், மரக்காணத்தில் வலைப் பாதுகாப்புக் கட்டடம், புயல் பாதுகாப்புக் கட்டடம் அமைக்க வேண்டும் என்பதோடு, மானியத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை.

பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பயன்படுத்தி காகிதத் தொழில்சாலை அமைக்க வேண்டும் என்பது விழுப்புரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திண்டிவனம்}நகரி ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

வாக்காளர்கள்:

ஆண்கள்: 7,44,350

பெண்கள்: 7,58,545

மூன்றாம் பாலினத்தவர்: 220

மொத்தம்: 15,03,115

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com