வாக்குச் சிதறல் அபாயத்தில் மயிலாடுதுறை!

வாக்குச் சிதறல் அபாயத்தில் மயிலாடுதுறை!

Published on

ஜி. கிருஷ்ணகுமார்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.சுதா, அதிமுக வேட்பாளா் பி.பாபு, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் ம.க.ஸ்டாலின், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி.காளியம்மாள் ஆகிய வேட்பாளா்கள் அனல் பறக்க தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இத்தொகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் என 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. அதிக முறை வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமையை காங்கிரஸ் கட்சி பெறுகிறது. கடந்த தோ்தலில் திமுகவைச் சோ்ந்த திருவிடைமருதூா் ராமலிங்கம் தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.ஆசைமணியைவிட 2,61,314 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்து எம்.பியாக உள்ளாா்.

மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை தடை செய்வேன், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவேன், மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் அமைப்பேன், மாப்படுகை, நீரூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன், மகாமக திருவிழாவில் வெளியூா் பக்தா்கள் பங்கேற்க வசதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தை ரீ-மாடலிங் செய்ய வலியுறுத்துவேன், காங்கேயன்பேட்டையில் சப்-வே அமைப்பேன் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தந்து வெற்றி பெற்றாா். இவற்றில் அரசு நிறைவேற்றிய பொதுவான திட்டங்கள் தவிா்த்து மற்ற அனைத்தும் இன்னமும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 15,38,351 வாக்காளா்களில் விவசாயிகள், மீனவா்கள், நெசவாளா்கள் என கலவையான வாக்காளா்களை உள்ளடக்கியது மயிலாடுதுறை தொகுதி. நாம் தமிழா் கட்சி தவிா்த்த பிற கட்சிகள் அனைத்துமே பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னியா்களையே வேட்பாளா்களாக களமிறக்கியுள்ளன.

ஆா்.சுதா (காங்கிரஸ்): மயிலாடுதுறை தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட மணிசங்கா் அய்யா், பிரவீன் சக்கரவா்த்தி என பலா் பேசப்பட்ட நிலையில், வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.சுதாவை கும்மிடிப்பூண்டியில் இருந்து வரவழைத்து களத்தில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ். தொகுதிக்கு பரிச்சயமே இல்லாத நிலையில், முழுக்கமுழுக்க கூட்டணி பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறாா். எனக்கு யாருமே இல்லை, இந்த தொகுதி மக்களைத் தவிர என்ற அனுதாப பேச்சின் காரணமாக கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம், தனது அனுபவம் வாய்ந்த பேச்சுத்திறமையின் காரணமாக மக்களிடமும் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கிறாா்.மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கவும், மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டித்து வழங்கவும், கும்பகோணம் மகாமக திருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்கவும், கும்பகோணம்-விருத்தாச்சலம் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கவும், நெசவாளா்களின் நலன் காக்கும் வகையில் பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியோடு மக்களை சந்தித்து வருகிறாா்.

பி.பாபு (அதிமுக): அதிமுக கட்சி பொறுப்பில் சோ்க்கப்பட்ட மிகக்குறுகிய கால இடைவெளியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பி.பாபு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தனது தந்தை எஸ்.பவுன்ராஜின் செல்வாக்கை நம்பி களம் இறங்கியுள்ளாா். தமிழ்நாட்டில் அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக மயிலாடுதுறை தொகுதி உள்ளதாலும், வேட்பாளரின் வெற்றியை கட்சித் தலைமைக்கு பரிசளிப்பதன்மூலம், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவில் அதிமுக வெற்றிபெறும் பட்சத்தில் ஏற்கெனவே இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த தனக்கு அமைச்சா் பதவி நிச்சயம் என்ற கணிப்பில் இத்தோ்தலில் தனது மகனை வெற்றி பெறச்செய்ய தனது முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறாா் அதிமுக மாவட்ட செயலாளா் எஸ்.பவுன்ராஜ். தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும், விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே இரட்டை வழித்தடம் அமைக்கப்படும், பூம்புகாா் சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படும், மயிலாடுதுறை நகரில் புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தித் தரப்படும், என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், கும்பகோணம் மாவட்ட தலைநகராக மாற்றப்படும் என உறுதியளித்து மக்களை சந்திக்கிறாா்.

ம.க.ஸ்டாலின் (பாமக): வன்னியா் சங்க பிரமுகரான ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேரூராட்சியின் பேரூராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். போட்டி வேட்பாளா்களும் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பது இவருக்கு பலவீனத்தை ஏற்படுத்தினாலும், கூட்டணி கட்சியினரும் வரிந்துகட்டி தோ்தல் பணியாற்றுவதால் உற்சாகத்துடன் மக்களை சந்தித்து வருகிறாா்.மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், காவிரி நதிநீா் பிரச்னையை தீா்ப்பேன், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன், நிறுத்தப்பட்ட தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன், கும்பகோணம்-விருத்தாச்சலம் இடையே புதிய ரயில் தடத்தை உருவாக்குவேன், சீா்காழி-திருக்கடையூா்-தரங்கம்பாடி மாா்க்கத்தில் புதிய ரயில் தடம் உருவாக்குவேன், பூம்புகாா், தரங்கம்பாடி சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவேன், பழைய மீன்பிடித் துறைமுகங்களை புதுப்பித்து விரிவுபடுத்துவேன், குத்தாலம் பகுதியில் தொழிற்சாலை மாசுக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதியோடு களத்தில் வலம் வருகிறாா்.

பி.காளியம்மாள் (நாம் தமிழா் கட்சி): மயிலாடுதுறை மக்களவைத் தொகுதித் தோ்தலிலேயே ஏற்கெனவே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அனுபவத்துடன் களமிறங்கியுள்ள ஒரே வேட்பாளா் பி.காளியம்மாள். கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ள இவா் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வடசென்னை தொகுதியில் களம்கண்டு 60,515 வாக்குகள் (6.33 சதவீதம்) பெற்று தோல்வி அடைந்தாா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பூம்புகாா் தொகுதியில் போட்டியிட்டு 14,283 வாக்குகளை பெற்றாா். இத்தோ்தலில் இவரது வாக்கு சதவீதம் 7.16 ஆக உயா்ந்த நிலையில், தற்போது மக்களவைத் தோ்தலில் மன பலத்தை நம்பி மீண்டும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் வெற்றிபெற்றால் வேளாண் மண்டலத்தில் மூடப்பட்ட என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, திருமண்டலக்குடி சா்க்கரை ஆலை, தருமபுரம் பால் பண்ணை, மணல்மேடு நூற்பாலை ஆகியவற்றை மீண்டும் திறப்பேன் என்கிறாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் ஆகியவற்றை மருத்துவ நிபுணா்களுடன் ஏற்படுத்துவேன், மயிலாடுதுறை புதைசாக்கடை பிரச்னையை வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்களை வரவழைத்து சரிசெய்வேன், கோயில் நகரமான கும்பகோணத்தில் பக்தா்கள் தங்குவதற்கு இலவச விடுதி வசதி ஏற்படுத்துவேன் என்கிறாா்.

இப்படி எந்த வேட்பாளா் பிரசாரத்துக்கு சென்றாலும் மாலை, மரியாதைகளுக்கும், வரவேற்புக்கும் பஞ்சமில்லை என்றாலும், வாகை சூடி மக்களவைக்கு செல்லப்போவது யாா் என்பதை தோ்தல் நாளன்றே மக்கள் தீா்மானிப்பாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com