சிதம்பரம்: ஜாதிய வாக்குகள் தீர்மானிக்கும் தேர்தல் வெற்றி

சிதம்பரம்: ஜாதிய வாக்குகள் தீர்மானிக்கும் தேர்தல் வெற்றி

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 5 முறை போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தற்போது 6-ஆவது முறை யாக திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக புதுமுகமான அந்தக் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.சந்திரகாசன், தே.ஜ. கூட்டணியில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயரும் பாஜக மாநில பொதுச் செயலருமான பி.கார்த்தியாயினி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூர் மாவட்டம், துறை மங்கலத்தைச் சேர்ந்த ரா.ஜான்சிராணி களத்தில் உள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்ப ரம் மக்களவை (தனி) தொகுதியில் விசிக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருப்பினும், இந்தத் தேர்தலில் விசிகவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவுக்கு தே.ஜ.கூட்டணியிலுள்ள பாமக பலமாகத் திகழ்கிறது.

6-ஆவது முறையாக....

1999, 2004, 2009, 2014, 2019-ஆம் ஆண்டுகளில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டுள்ளார். இதில் 2009, 2019-ஆம் ஆண்டுகளில்வெற்றி பெற்றார். தற்போது 6 முறையாக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார்.

அமைச்சரின் ஆதரவு: தற்போதைய தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 6-ஆவது முறையாக தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் தனிச் சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன் தொகுதி பக் கம் அதிகமாக வரவில்லை என்றும், தொகுதிக்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இருப்பினும், திமுக மாவட்டச் செயலரும் அமைச்சருமான எம்.ஆர்கே.பன்னீர்செல்வம் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை வெற்றிபெறச் செய்ய திமுக ஆட்சியின் 3 ஆண்டு சாதனைகளைக் கூறி, களமிறங்கி பணியாற்றுவது அவருக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூர் வேட்பாளர்கள்!

இங்கே பெயர்தான் சிதம்பரம் தொகுதி. ஆனால், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு மக்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

1996-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை பூர்விகமாகக் கொண்ட வெ.கணேசன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வேறு தொகுதியைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமி ஆகியோர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டனர். 2009-இல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்.திருமாவளவனும், 2014-இல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மா .சந்திரகாசியும், 2019- இல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்.திருமாவளவனும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டனர். 1996-க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

வன்னியர் வாக்குகள்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியை பொருத்த வரை தலித், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். தே.ஜ. கூட்டணியில் பாமக இடம் பெற்றதையடுத்து, பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினிக்கு வன்னியர் சமுதாய வாக்குகள் கிடைக்கலாம் என்று அவரது கட்சியினர் நம்புகின்றனர். மேலும், பாஜகவினர் ராமர் கோயிலை மையமாக வைத்து ஒட்டு மொத்த இந்துக்களின் வாக்குகளைக் கவர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலித், இஸ்லாமியர் வாக்குகள்!

வி சிக வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு தலித் வாக்குகளும், இஸ்லாமியர்கள் வாக்குகளும் பெரும்பான் மையாகக் கிடைக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக, காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திருமாவளவனுக்கு தலித் வாக்குகள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் திருமாவளவன் வெற்றிக்கு காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மட்டும் சுமார் 32,000 வாக்குகள் கூடுதலாக கிடைத்ததே காரணம்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் லால்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான் மையாக உள்ள இஸ்லாமியர் வாக் குகள் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிகவுக்கும், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி உள்ளதால், அதிமுகவுக்கும் பிரிந்து செல்லும் நிலை உள்ளது.

தேமுதிகவும் கூட்டணியில் உள்ளதால், அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசனுக்கு இரட்டை இலை சின்னம் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், சிதம்பரம் தொகுதி யில் இம்முறை ஜாதிய வாக்குகள்தான் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் நிலை உருவாகி உள்ளது.

மக்கள் கோரிக்கைகள்,

  1. கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை தூர்வார வேண்டும்.

  2. என்எல்சி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு.

  3. சிதம்பரம் அருகே கடல்நீர் உட்புகுவதை தடுக்க வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை. ஆறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணை.

  4. உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுக்க அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.

  5. சிதம்பரம் ரயில் நிலையத்தில் மீண்டும் பார்சல் சர்வீஸ் வேண்டும்.

  6. மயிலாடுதுறை கோவை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.

வாக்காளர்கள் ஆண்கள்:

7,49,623

பெண்கள்:

7,61,206 மூன்றாம் பாலினம்: 86

மொத்தம்:

15,10,915

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com