சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

விவசாயம், கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு ஆகியவை சேலம் மாவட்டத்தின் பிரதானத் தொழிலாக இருந்து வருகின்றன.
டி.எம்.செல்வகணபதி - திமுக, ப.விக்னேஷ் - அதிமுக, ந.அண்ணாதுரை -பாமக, க.மனோஜ்குமார் -நாதக
டி.எம்.செல்வகணபதி - திமுக, ப.விக்னேஷ் - அதிமுக, ந.அண்ணாதுரை -பாமக, க.மனோஜ்குமார் -நாதக

-சிஆர்எம்.சபரி

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்தபடியாக தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் நகரமாக சேலம் திகழ்கிறது. விவசாயம், கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு ஆகியவை சேலம் மாவட்டத்தின் பிரதானத் தொழிலாக இருந்து வருகின்றன. இங்கு வெற்றியை எட்ட பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுடன், பாமகவும், நாம் தமிழர் கட்சியும் மல்லுக் கட்டுகின்றன.

தொகுதியின் வரலாறு

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இடம்பெற்ற சிறப்பை உடையது சேலம் மக்களவைத் தொகுதி. இந்தியாவின் முதல் மாவட்டமாக உதயமானது முதல் பல்வேறு பாரம்பரிய சிறப்புகளை உள்ளடக்கிய சேலம், தேர்தல் களத்திலும் பல்வேறு சுவாரஸ்யமான கள அனுபவங்களைச் சந்தித்துள்ளது.

1952, 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.வீ.ராமசாமி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றார். 1967}இல் திமுகவைச் சேர்ந்த ராஜாராம் வெற்றி பெற்றார். 1971 இல் கிருஷ்ணனும் (திமுக), 1977இல் கண்ணனும் (அதிமுக), 1980இல் பழனியப்பனும் (திமுக) வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் போட்டியிட்டு ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவதாசும், 1998 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தியும் வெற்றி பெற்றனர். 1999 தேர்தலில் டி.எம். செல்வகணபதியும் (அதிமுக), 2004 தேர்தலில் கே.வி.தங்கபாலுவும் (காங்கிரஸ்), 2009 தேர்தலில் செம்மலையும் (அதிமுக), 2014 தேர்தலில் பன்னீர்செல்வமும் (அதிமுக) வெற்றி பெற்றனர்.

2019 தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சார்பில் களம் கண்ட எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக வேட்பாளர் சரவணனைத் தோற்கடித்தார்.

களத்தில் முந்துவது யார்?

தற்போதைய தேர்தல் களத்தில், திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதியும், அதிமுக சார்பில் ப.விக்னேஷும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ந.அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி சார்பில் க.மனோஜ்குமாரும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

டி.எம்.செல்வகணபதியைப் பொருத்த வரை,1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளதால், தொகுதிக்குப் பரிச்சயமானவர் என்பதுடன், தொகுதி பிரச்னைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பவராக உள்ளார்.

2019 ஆம் ஆண்டு பெற்ற வெற்றி தந்த நம்பிக்கையில், திமுக தற்போதும் களமாடுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஓமலூரைச் சேர்ந்த புதுமுகமான ப.விக்னேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றி இருப்பதால், கூடுதல் பலத்துடன் அதிமுக வலம் வருகிறது. மேலும், எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், வேட்பாளரின் வெற்றிக்காக கட்சியினர் வரிந்து கட்டுகின்றனர்.

மறுபுறம், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான ந.அண்ணாதுரையை களமிறக்கியுள்ளது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணாதுரை, சுமார் 57 ஆயிரம் வாக்குகள் வாங்கியுள்ளார். மேலும், மத்தியில் பிரதமராக இருக்கும் மோடியின் செல்வாக்கை தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க.மனோஜ்குமார், அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆவார். இளைஞர் பட்டாளத்தின் வாக்குகளை நம்பி களம் காண்கிறார்.

இத்தொகுதியில் வன்னியர்கள் 38 சதவீதம் பேரும், ஆதி திராவிடர் 18 சதவீதம் பேரும், செட்டியார், கொங்கு வேளாள கவுண்டர் தலா 7 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 4 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 4 சதவீதம் பேரும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தவர் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால், வெள்ளி மகுடம் யாருக்கு என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியவரும்.

-சிஆர்எம்.சபரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com