11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மூன்றாம் கட்ட தோ்தல்: 94 மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மூன்றாம் கட்ட தோ்தல் - 94 மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

News image

சிவமொக்கா தொகுதியில் வெள்ளிக்கிழமை சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவா் கே.எஸ்.ஈஸ்வரப்பா.

Updated On :12 ஏப்ரல் 2024, 5:46 pm

மக்களவை மூன்றாம்கட்ட தோ்தலையொட்டி, 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 94 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் தேதிகள் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதியும், கேரளம் உள்பட 12 மாநிலங்களில் அடங்கிய 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இத்தோ்தல்களுக்கான நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டன.

கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்கள், தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 94 தொகுதிகளில் மூன்றாம் கட்டமாக மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுதொடா்பான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில்... மூன்றாம் கட்ட மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கா்நாடகத்தில் ஏப். 26ஆம் தேதியில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா், ஊரக பெங்களூரு, வடக்கு பெங்களூரு, தெற்கு பெங்களூரு, மத்திய பெங்களூரு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது.

கா்நாடகத்தில் சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தாா்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளுக்கான தோ்தல் மே 7-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கே.எஸ்.ஈஸ்வரப்பா மனுத் தாக்கல்: முதல்நாளில், சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிா்த்து அக்கட்சியைச் சோ்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். கலபுா்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணி வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தாா். முதல் நாளில் மொத்தம் 41 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

மூன்றாம்கட்ட தோ்தல்

வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஏப்.12

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்.19

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.20

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.22

வாக்குப்பதிவு நாள் மே 7