பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸின் முன்னேற்றம் பாஜகவை அசைக்குமா?
பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் சேர்த்து பாகிதோரா பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

2014 மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளையும், 2019-இல் 24 தொகுதிளையும் கைப்பற்றிய பாஜக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்து வலுவாக உள்ளது.

இந்தியாவிலேயே பரப்பளவில் முதல் மாநிலமான ராஜஸ்தானில் ராஜ்புத், ஜாட், குஜ்ஜார் சமூகத்தினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் கடந்த ஆண்டு பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ்.

எனினும், கடந்த சில மாதங்கங்களாக அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், விவசாயிகள் போராட்டம், ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் ஆகியவை மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கு சாதகமாக அமையுமா என்பதைப் பார்ப்போம்.

சுரு தொகுதி: 1999-ஆம் ஆண்டு முதல் பாஜக இந்தத் தொகுதியை தக்க வைத்து கொண்டுள்ளது. ஜாட் சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான ராகுல் கஸ்வான் இந்தத் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். 2014 தேர்தலில் 2,95,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019-இல் 3,34,000 வாக்குகள் வித்தியாசத்தில் கஸ்வான் அமோக வெற்றி பெற்றார்.

நடப்பு தேர்தலில் ராகுல் கஸ்வானுக்கு பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்ததையடுத்து அவர் கட்சிமாறி காங்கிரஸில் இணைந்தார். ராகுல் கஸ்வான் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திர ரத்தோர் தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் ஷெகாவத் பகுதிகள் எனப்படும் சுரு, நாகௌர், ஜுன்ஜுனு, பிகானிர் தொகுதிகளில் பாஜகவின் ஜாட் சமூக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் கஸ்வானுக்கு எதிராக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவை பாஜக களமிறக்கி உள்ளது.

மேலும், பாஜகவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்துவரும் ஜாட் சமூகத்தின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக் மீதான நடவடிக்கைகள் ஆகியவை அந்தச் சமூகத்தினரிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகள் பிரச்னை: மழைப் பொழிவு குறைவு, நீர் தட்டுப்பாடு, குளிர் காலங்களில் மைனஸ் 1 டிகிரி, வெயில் காலங்களில் 51 டிகிரி செல்சியஸ் போன்ற காரணங்களால் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவாய் இழந்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்காப்பீடு போதுமானதாக இல்லை எனக் கூறி மத்தியஅரசுக்கு எதிராக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அண்டை மாநிலமான பஞ்சாபில் நடைபெற்று வரும் விவசாயிகள் தொடர் போராட்டமும் ராஜஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் இருந்து விலகிய ராகுல் கஸ்வானும் விவசாயிகள் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

மல்யுத்த வீராங்கனை போராட்டம்: பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷண் சிங் மீதான பாலியல் புகாரை முன்வைத்து போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்ற அதிருப்தியும் ஜாட் சமூகத்தினரிடையே உணர்வுபூர்வமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

அக்னிவீர் திட்டம்: ராணுவத்தில் அதிகமாக சேரும் ராஜஸ்தான் இளைஞர்களிடையே குறுகியகால பணிவாய்ப்பான அக்னிவீர் திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குடிநீர் பிர்சனை: தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ராஜஸ்தானில் நிலத்தடி நீராக பயன்படுத்தப்படும் குடிநீரில் அதிபடியான ஃபுளுரைட் கலந்திருப்பதும் இதனால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதும் பெரும் பிரச்னையாக உள்ளது. இதைப்போக்க மாநில அரசு பல்வேறு இடங்களில் நிறுவிய ஆர்-ஓ மையங்கள் செயல்படாமல் உள்ளதும் தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது.

மின் வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மாநில பாஜக அரசுக்கு எதிரான வாக்குகளாக உருவாகும் என கருதப்படுகிறது.

குஜ்ஜார்: குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த இரு முறை எம்எல்ஏவும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் ஆதரவாளருமான பிரஹலாத் குன்ஜன் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கோட்டா தொகுதியில் அவரை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது.

பாஜகவின் பலம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர யாதவ், லால் சந்த் கட்டாரியா, முன்னாள் எம்எல்ஏக்கள் ரிச்பால் மிர்தா, கிலாடி பைர்வால் உள்பட கடந்த சில மாதங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பிரதமர் மோடி என்ற பிம்பம், தேசியவாதம் என்ற முழக்கம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு, யமுனை நீரை குழாய் மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லும் திட்டம், 10 புதிய விமான நிலையங்கள், சுரு -ரதன்கர் இடையேயான இரட்டை ரயில்பாதை திட்டம், நெடுஞ்சாலை விரிவாக்கம் திட்டம் போன்றவை பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முற்பட்ட வகுப்பினர், ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகள் பிற கட்சிகளுக்கும் செல்லும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள், ஜாட் சமூக வாக்குகள், கூட்டணி பலம் ஆகியவற்றை நம்பி களமிறங்கி உள்ள காங்கிரஸ், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ராஜஸ்தான் கோட்டையை தகர்க்குமா அல்லது கோட்டைவிடுமா என தேர்தல் முடிவுகள் பதிலளிக்கும்.

"இந்தியா' கூட்டணி

ராஜஸ்தானில் 22 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. "இந்தியா' கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிகார் தொகுதியும், ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சிக்கு நகௌர் தொகுதியும், புதிதாக உதயமாகி உள்ள பாரதிய ஆதிவாசி கட்சிக்கு பன்ஸ்வாரா தொகுதியையும் காங்கிரஸ் வழங்கி உள்ளது.

முதல்கட்டம் - ஏப்.19

தொகுதிகள்: ஸ்ரீகங்கா நகர், பிகானிர், சுரு, ஜுன்ஜுன், சிகார், ஜெய்பூர், ஜெய்பூர் புறநகர், பரத்பூர், கரௌலி - தோல்பூர், தௌசா, டோங்க் -சவாய் மதுபூர்

இரண்டாம் கட்டம் - ஏப்.26

தொகுதிகள்: அஜ்மீர், நகௌர், பாலி, ஜலோர், பார்மர், ஜோத்பூர், உதய்பூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com