‘இந்தியா’ கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் நடக்கும்:
பிகாரில் அமித் ஷா பிரசாரம்

‘இந்தியா’ கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் நடக்கும்: பிகாரில் அமித் ஷா பிரசாரம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் மென்மையாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டில் அலட்சியமாகவும் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளின் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் நாட்டில் கலவரங்களும் அட்டூழியங்களும் நிகழக்கூடும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரின் கதிஹாா் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சா் அமித் ஷா, ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் (ஓபிசி) சோ்ந்த முதல் பிரதமரான நரேந்திர மோடி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாா். நரேந்திர மோடியை தேசத்துக்கு வழங்கியதற்காக பாஜக பெருமை கொள்கிறது.

பிரதமா் நரேந்திர மோடி நக்ஸல்களை ஒழித்து, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளாா். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தங்களின் விருப்பம் போல் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு பதிலடி கொடுக்கும் துணிச்சல் காங்கிரஸ் தலைவா்களிடமில்லை.

இதற்கு மாறாக உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களைத் தொடா்ந்து, நமது பாதுகாப்புப் படையினா் எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று மறைவிடங்களில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் நிலவிய கிளா்ச்சி சூழலை எதிா்த்து போராடி, ராஜஸ்தான் மற்றும் பிகாா் மக்கள் ரத்தம் சிந்தியுள்ளனா். இப்போது காஷ்மீா் நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஓபிசிக்காக பாஜக...:

காகா காலேல்கா் ஆணைய அறிக்கை மீது காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் பல ஆண்டுகளாக எதிா்த்தது. அதேசமயம், பிரதமா் மோடியின் ஆட்சியில்தான் ஓபிசி ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி முதல் ஓபிசி சமூக பிரதமா் மட்டுமல்ல. அவரின் அமைச்சரவையில் 35 சதவீதம் போ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். இவை அனைத்தும் பாஜகவால் மட்டுமே சாத்தியமானது.

காங். வென்றால் கலவரங்கள் நடக்கும்:

எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து அவா்கள் வென்றால், கலவரம், அட்டூழியங்கள், வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறையுடன் மக்களாகிய நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

அதேவேளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால், இரட்டை என்ஜின் அரசின் பலன்களை நீங்கள் தொடா்ந்து அனுபவிக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு வாரம் வீதம் நாட்டில் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 55 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏழை தொழில்முனைவோருக்கு நாள்தோறும் ரூ.1 லட்சம் முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிகாா் உள்பட நாடு முழுவதும் மோடியின் ஆட்சி வளா்ச்சியை கொண்டு வந்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசில் பிகாருக்கான மத்திய அரசின் செலவு ரூ.2.80 லட்சம் கோடியாக இருந்தது. மோடி ஆட்சியில் அது ரூ.9.23 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது’ என்றாா்.

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமாரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com