/

புதுச்சேரி, சென்னையில் பிரதமர் மோடி ஏப்.3, 4-இல் பிரசாரம்

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 4:53 am IST

நமது சிறப்பு நிருபர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு, ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி, பிரதமர் மோடி ஏப்ரல் 3-ஆம் தேதி பிற்பகலில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வருகை தரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் செல்லவுள்ளார். அங்கு மாலையில் நடைபெறும் சாலைப் பேரணியில் (ரோடு ஷோ) பிரதமர் பேச திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அன்று இரவே சென்னைக்குத் திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குகிறார். மறுநாளான சனிக்கிழமை காலை 11 மணியளவில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக சென்னையின் தி.நகர் அல்லது மயிலாப்பூரில் இக்கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் சுமார் 100 கட்சி நிர்வாகிகள், களப் பணியாளர்களுடன் இக்கூட்டத்தில் பிரதமர் கலந்துரையாடவுள்ளார். மேலும், சென்னையின் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குச்சாவடி அளவிலான கட்சிப் பணிகளை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பது தொடர்பாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தலையொட்டி பாஜக அதன் இருப்பை வலுப்படுத்தவும், புதுச்சேரியில் தனது பரப்புரையை தீவிரப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சியாகப் பிரதமரின் தமிழக பயணம் பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளுக்கு முன்னதாக பிரதமர் குறைந்தபட்சம் இரு முறையாவது தமிழகம் வந்து பரப்புரை மேற்கொள்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி மற்றும் சென்னையில் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு ஏப்ரல் 4ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கொச்சியில் நடைபெறவுள்ள தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் கேரளம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.