
பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அவதூறு தேர்தல் விளம்பரத்தில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்துவிட்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மறுஉத்தரவு வரும் வரை திரிணமூல் காங்கிரஸ் குறித்து எவ்வித அவதூறு விளம்பரங்களையும் வெளியிட பாஜகவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திரிணமூல் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்கு வங்க பத்திரிகைகளில் பாஜக விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் மே 5ஆம் தேதி புகார் அளித்த திரிணமூல் காங்கிரஸ், உண்மைக்கு புறம்பான, நிரூபிக்கப்படாத பொய் புகார்களை விளம்பரமாக பாஜக வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்திருந்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில் புகாரின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா, குறிப்பிட்ட நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்துள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கு பிறகு புகாரை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், “திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் போட்டியாளர்களை அவமதிக்கும் விதமாகவும், தனிப்பட்ட தாக்குதல்களை கொண்டதாகவும் உள்ளது. இது நேரடியாக தேர்தல் நடத்தை விதிகளை மீறும் நோக்கிலும், நியாயமான சுதந்திரமான தேர்தல் செயல்முறைக்கான உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது.” என்று நீதிபதி தெரிவித்தார்.
இதனால், மறுஉத்தரவு வரும் வரை திரிணமூல் காங்கிரஸ் குறித்து அவதூறு விளம்பரங்களை வெளியிட பாஜகவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.