அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் இழப்பு இல்லை! வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி

அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் இழப்பு இல்லை! வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால், பாஜகவுக்கு எவ்வித இழப்பும் இல்லை என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் "தினமணி'-க்கு அவர் அளித்த நேர்காணல்:

கோவை மக்களவைத் தொகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாதிப்பாரா?

2021-இல் இருந்ததைவிட பிரதமர் நரேந்திர மோடி மீதான அன்பும், நம்பிக்கையும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து நான் போட்டியிட்டு வெற்றி பெற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பாஜக மீதான நம்பிக்கையும், அண்ணாமலையின் செல்வாக்கும் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளதால் இந்த முறை கோவையில் தாமரை மலர்ந்தே தீரும். கோவை தொகுதி வாக்காளர்களின் பெரும் ஆதரவுடன் அண்ணாமலை வெற்றி பெறுவார்.

அண்ணாமலை வெளியூர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றனரே?

அண்ணாமலையை வெளியூர் வேட்பாளர் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது கல்லூரிப் படிப்பில் இருந்து, திருமண வாழ்க்கை வரை கோவையுடன் அவர் தொடர்பில் இருந்து வருகிறார். எனவே களத்தில் இந்த வாதம் எடுபடாது.

அதிமுகவுடன் கூட்டணி அமையாதது பாஜகவுக்கு இழப்புதானே?

அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் பாஜகவுக்கு எவ்வித இழப்பும் இல்லை. அதிமுகவுடனான கூட்டணி இல்லாமலேயே கடந்த 2016-இல் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 22 சதவீத வாக்குகளை வாங்கியிருந்தேன். அதேபோல, கோவையின் மற்ற தொகுதிகளிலும் குறைந்தது 10 சதவீத வாக்குகளைப் பெற்றோம். கடந்த 3 ஆண்டுகளில் கோவையில் பாஜக வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளதால் சூழலே மாறியுள்ளது.

பேரிடர் காலங்களில் தமிழகம் வராத பிரதமர், தற்போது மட்டும் அடிக்கடி வருவதாக குற்றம்சாட்டுகிறார்களே?

பிரதமர் மோடி வெறும் அரசியல் காரணங்களுக்காகவே தமிழகத்துக்கு அடிக்கடி வந்து செல்வதாகக் கூற முடியாது. இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நேரில் வந்து பார்வையிடாவிட்டாலும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார். அதேபோல, விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக திருச்சிக்கும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக சென்னைக்கும், ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்காக தூத்துக்குடிக்கும் வந்திருந்தார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வந்தபோதும் வெறும் கையோடு வந்ததில்லையே?

கோவையின் தொழில் வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது... அது உண்மையா?

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாதது ஒரு காரணம். தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்பேட்டைகளுக்குத் தேவையான வசதிகளை அரசு நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து தொடர்புடைய அமைச்சர்களை சந்தித்துப் பேசியதுடன், சட்டப்பேரவையிலும் குரல் கொடுத்துள்ளேன். மத்திய அரசின் தொழில் கொள்கை, தமிழக அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழில்முனைவோரின் முன்னெடுப்பு ஆகிய மூன்றும் இணைந்தால்தான் கோவையில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். கடந்த தேர்தலில் ஜிஎஸ்டி முக்கிய பிரச்னையாக இருந்தாலும் தொழில்முனைவோர் அதை தற்போது ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

தேர்தல் பத்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது அகில இந்திய அளவில் பாஜகவுக்கு பின்னடைவுதானே?

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே தேர்தல் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி கொடுப்பது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதால் இதை சீர்திருத்த நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். மற்றபடி அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

- படம்: அ.அஜய் ஜோசப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com