அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்! பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி!

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தோ்தலில் தேமுதிக மற்றும் அதிமுகவின் கூட்டணி மக்கள் விரும்புகின்ற, போற்றுகின்ற கூட்டணியாக அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்! பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி!

"மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்துள்ள கூட்டணி, அடுத்து வரும் ஊரக உள்ளாட்சி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்; எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த பத்மபூஷண் விருதை, அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலருமான பிரேமலதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார். இதையொட்டி தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிலும் பிரேமலதா பங்கேற்றார். இந்நிலையில், தேமுதிகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள், கூட்டணி நிலைப்பாடு, தமிழக அரசின் செயல்பாடுகள், வாரிசு அரசியல் குறித்து "தினமணி'-க்கு அவர் அளித்த பேட்டி:

விஜயகாந்த் இல்லாத தேமுதிகவில் கட்சித் தொண்டர்களின் மனநிலை எப்படி உள்ளது?

விஜயகாந்த் இல்லாத மனவருத்தம் கட்சித் தொண்டர்களின் மனதில் துளியும் மாறவில்லை. இதுவும் கடந்து போகும் என்ற மன உறுதியோடு, விஜயகாந்த் வகுத்த பாதையில் பயணித்து வருகிறோம். கேப்டனின் கனவு, லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

மத்தியில் கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சி பற்றி...

விஜயகாந்துடன் மிகப்பெரிய நட்புணர்வை பாராட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரது மறைவையொட்டி பிரதமர் எழுதிய மிகப்பெரிய கட்டுரை, திருச்சி பொதுக்கூட்டத்தில் கேப்டனை நினைவுகூர்ந்து போற்றிய வார்த்தைகள் போன்றவற்றை என்றும் மறக்க மாட்டோம். ஒருவேளை நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் நதிகள் இணைப்பை செயல்படுத்துவதை முதல் கோரிக்கையாக முன்வைப்பேன்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் மூன்று ஆண்டு ஆட்சி நிறைவுக்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்?

விஜயகாந்த் மறைவுக்கு தமிழக அரசு செய்த மரியாதையை என்றுமே மறக்க மாட்டோம். இருப்பினும், அரசியல் ரீதியாக திமுக மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் மாற்று நிலைப்பாட்டை திமுக அரசு எடுத்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் கஞ்சா புழக்கம் மிக அதிகமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளால் மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கனிமவளக் கொள்ளையால் தமிழகம் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களிடம் ‘ஜஸ்ட் பாஸ்' பெற்றுள்ள திமுக அரசுக்கு எனது மதிப்பெண் 10-க்கு 4 மட்டுமே.

அதிமுகவுடனான தேமுதிகவின் அரசியல் கூட்டணியில் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?

அதிமுகவுடனான கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை நிச்சயம் தொடரும். அதில், எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே, எதிர்வரும் ஊரக உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். தேமுதிக, அதிமுக நட்புணர்வு மக்களவைத் தேர்தலில் பிரதிபலித்தது. இந்தக் கூட்டணி மக்கள் விரும்பக் கூடிய மற்றும் போற்றும் வகையில் உள்ளது.

விஜயகாந்துக்கு பொது இடத்தில் மணிமண்டபம் கட்ட அரசுக்கு தேமுதிக விடுத்த கோரிக்கை என்ன ஆனது?

விஜயகாந்த் நினைவிடத்தில் கோயில் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். கடந்த 4 மாதங்களில் மட்டும் அவரது நினைவிடத்திற்கு 15 லட்சம் பேர் வந்துள்ளனர். இதனை கௌரவித்து, ‘லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மணிமண்டபம் கோரிக்கையை மீண்டும் அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

பொதுத் தளங்களில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு தேமுதிகவும் உள்ளாகியுள்ளதே...

யாருக்கு வாரிசு இல்லையோ அவர்கள்தான் வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். மக்களைச் சந்தித்து, வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் அது வாரிசு அரசியல் ஆகாது. தேமுதிகவின் ஆரம்ப காலம் முதலே எனது சகோதரர் சுதீஷ் இளைஞரணி செயலாளராக இருந்தார். பல்வேறு தேர்தல்களைச் சந்தித்துள்ளார். கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் கழித்தே எனக்கு பொருளாளர் பதவியை தலைமை வழங்கியது. எனது மகன் விஜய பிரபாகரன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார்.

தேர்தலின்போது பாஜகவும் காங்கிரஸும் முஸ்லிம்களை மையப்படுத்தி செய்யும் பிரசாரம் குறித்து...

இந்தக் கட்சிகள் தேர்தல் காலங்களில்தான் இஸ்லாமியர்களை ஈர்க்க வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே முஸ்லிம்களை பயன்படுத்துகின்றன. முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்களுக்குரிய தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டுமே தவிர அவர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com