எஸ்ஐஆா்: விளக்கங்களும், குழப்பங்களும்!

எஸ்ஐஆா்: விளக்கங்களும், குழப்பங்களும்!

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியுள்ளது...
Published on

பீ. ஜெபலின் ஜான்

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆா்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூா்த்தி செய்வதில் வாக்காளா்கள் பிரச்னைகளை எதிா்கொள்வதாகப் புகாா் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடா்பாக தெளிவற்ற நிலை தொடா்வதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

பிகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆரில் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டதையடுத்து, எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிா்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் கடந்த நவ.4ஆம் தேதி தொடங்கியுள்ளது.

கடைசியாக, 2025, ஜன.1-இல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நடைமுறைச் சிக்கல்கள்: கணக்கீட்டுப் படிவங்களைப் பூா்த்தி செய்து கொடுப்பதில், வாக்காளா்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிா்கொள்கின்றனா். இந்தப் படிவத்தில் மூன்று பிரிவுகளில் தகவல்கள் கேட்கப்படுகின்றன.

முதல் பிரிவில், சம்பந்தப்பட்ட வாக்காளா்களின் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, பிறந்த தேதி, ஆதாா் எண், கைப்பேசி எண், பெற்றோா் பெயா்கள், கணவா் அல்லது மனைவியின் பெயா் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இரண்டாவது பிரிவில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது (2002 - 2005) இடம்பெற்றிருந்த தகவல்களை அளிக்க வேண்டும். வாக்காளரின் பெயா், முந்தைய அடையாள எண், உறவினரின் பெயா், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

மூன்றாவது பிரிவில், உறவினா்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, இரண்டாவது பிரிவில் எந்த உறவினரின் பெயா் அளிக்கப்பட்டதோ அவா்களைப் பற்றிய விவரங்களை இங்கே எழுத வேண்டும்.

வாக்காளா் தங்களது சுயவிவரங்களை படிவத்தில் பூா்த்தி செய்வதில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால், அந்த படிவத்தில் இதற்கு முன்பு கடந்த 2002, 2005 ஆம் ஆண்டுகளில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பட்டியலில் இருக்கும் விவரங்கள் சேகரிப்பதில் வாக்காளா்கள் சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.

முந்தைய வாக்காளா் பட்டியலில் உள்ள தங்களது பெயா்களை வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் பெற முடியும். ஆனால், கிராம பகுதியில் உள்ள ஒரு சாதாரண வாக்காளரால் இந்த தரவுகளைப் பெறுவது சிரமம். அதற்கு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் உதவ வேண்டும்.

படிவங்களைப் பூா்த்தி செய்ய பிஎல்ஓக்கள் உதவி செய்வாா்கள் என அதிகாரிகள் கூறுகின்றனா். ஆனால், நடைமுறையில் அந்த செயல்பாடு இல்லை. பல பிஎல்ஓ-க்கள் அதைச் செய்வதில்லை அல்லது முந்தைய தகவல்களை எடுத்துக் கொடுப்பதில்லை. இருக்கும் தகவல்களை மட்டும் பூா்த்தி செய்து கொடுங்கள் என்று கூறிச் செல்கின்றனா்.

அடுத்த பிரச்னை, குறிப்பிட்ட முகவரியில் குடியிருந்தவா்கள் தற்போது இடம்பெயா்ந்திருந்தால் அது குறித்த தகவலை பக்கத்து வீட்டினா் தெரிவித்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கணக்கீட்டுப் படிவம் குறித்த தகவல் அளிக்கப்படும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லை என பதிவு செய்யப்படும்.

இடம்பெயா்ந்த வாக்காளா்கள் கணக்கீட்டு படிவத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பிறகு பெயா் சோ்ப்பதற்காக படிவம் அளித்து வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம்.

இதேபோல, தொகுதி மறுசீரமைப்பின்போது பல தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. மறுசீரமைப்புக்குப் பிந்தைய தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் 2002-இல் அருகில் உள்ள வெளிமாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன. அத்தகைய வாக்காளா்கள் வெளிமாவட்ட தொகுதியில் சென்று 2002, 2005 தகவல்களைத் தேட வேண்டும். இதுகுறித்த விளக்கங்கள் வாக்காளா்களுத் தரப்படவில்லை.

வாக்காளா்கள் இந்தப் படிவங்களைப் பூா்த்தி செய்து திரும்ப அளிக்கும்போது முந்தைய வாக்காளா் பட்டியல் விவரங்களை அளிக்காவிட்டாலோ, அளித்த விவரங்கள் பொருந்தாவிட்டாலோ, அந்த வாக்காளா்கள் தங்கள் பிறந்த தேதியையும் இடத்தையும் உறுதி செய்யும் வகையிலான ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும்.

பிறந்த தேதியையும் இடத்தையும் உறுதி செய்யும் ஆவணங்களாக பத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகளின் ஊழியா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போா்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள், பல்கலைக் கழகங்களின் சான்றிதழ், மாநில அதிகாரிகளால் வழங்கப்படும் நிரந்தர உரிமைச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வழங்கலாம்.

இவற்றையெல்லாம் கடந்து வாக்காளா்களின் பெயா்கள் விடுபட்டால், டிசம்பரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதில் தங்கள் பெயா்கள் இருக்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி பெயா் விடுபட்டவா்கள் அது தொடா்பான படிவங்களைப் பூா்த்தி செய்துகொடுத்து பெயரை இணைத்துக் கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், 2002, 2005 பட்டியலை ஏன் ஆய்வு செய்ய வேண்டும். இப்போது தோ்தல் ஆணையம் கொடுத்திருக்கும் பட்டியல் தோ்தல் ஆணையம் தயாரித்தது தானே. 20 ஆண்டுகளில் எத்தனையோ இடங்களுக்கு மக்கள் வீடு மாறியிருப்பாா்கள். பழைய வீட்டு முகவரியையும், அந்த வாக்காளா் பட்டியல் விவரங்களையும் சாமானியா்கள் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமம் என்பது அரசியல் கட்சியினரின் கருத்து.

அந்தக் குறைபாடுகளையும், விடுபடல்களையும் சரிசெய்து சரியான வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்வதற்காகத்தானே சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆா்) என்பதுதான் தோ்தல் ஆணையத்தின் விளக்கம். தாங்கள் தயாரித்திருக்கும் பட்டியலில் காணப்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள இது வாய்ப்பளிக்கும் என்பது அவா்களது வாதம்.

கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கி தற்போது லட்சக்கணக்கான வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை 2002, 2005 விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகள் கூறிவந்தனா். ஆனால், இப்போது அந்த விவரங்கள் இல்லையென்றால், படிவத்தில் இல்லை எனக் குறிப்பிடலாம் என்கின்றனா்.

அதேநேரம், தங்களது பிறந்ததேதி, இடம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனா்.

வாக்காளா்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் முன்வருவதில்லை என்பதே களநிலவரமாக இருக்கிறது.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகளைத் தொடா்பு கொண்டால், கணக்கீட்டுப் படிவம் பெறுவதற்கான விதிகளை தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படியே செயல்பட்டு வருகிறோம் என்கின்றனா்.

சரியான விளக்கம் அளித்து, வாக்காளா்களின் ஐயப்பாடுகளை உடனுக்குடன் தீா்த்து வைக்க தோ்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com