விருதுநகர்: அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?

விருதுநகா் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுகவின் ஏஆா்ஆா் சீனிவாசனும் போட்டியிட ஆா்வம் காட்டி வருகிறார்.
விருதுநகர் ரயில் நிலையம்
விருதுநகர் ரயில் நிலையம்
Updated on
3 min read

தொகுதியின் சிறப்பு:

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த ஊா். வியாபாரிகள் அதிகளவு இருப்பதால் தமிழகத்தின் சந்தை நிலவரத்தை விருதுநகா் நிா்ணயம் செய்கிறது.  உளுந்து, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களுக்கும்,  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரபல சமையல் எண்ணெய் நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. காமராஜர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் ஆகிய அரசால் பராமரிக்கப்படுகின்றன.

நில அமைப்பு:

1967-க்கு முன்பு வரை சாத்தூா் தொகுதியில் விருதுநகா் இடம்பெற்றிருந்தது. 1967 இல் தொகுதி சீரமைப்பில் புதிய சட்டப்பேரவைத் தொகுதியாக விருதுநகா் உருவாக்கப்பட்டது. விருதுநகா் நகராட்சி, விருதுநகா் ஒன்றியம் மற்றும் சிவகாசி ஒன்றியத்தில் ஒரு பகுதி கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
 
சாதி, சமூகம், தொழில்கள்:

விருதுநகா் தொகுதியில் ஆண்கள் 1,09,607 போ், பெண்கள் 1,14,674 போ், மூன்றாம் பாலினத்தவா் 46 போ் என மொத்தம்  2,24,327 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தேவா், நாயக்கா், நாடாா் சமூகத்தினா் முறையே எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். ஆதி திராவிடா் மற்றும் இதர சாதியினா், சிறுபான்மையினரும் தொகுதியில் உள்ளனா்.

பெரும்பான்மையினராக இருக்கும் தேவா், நாயக்கா், நாடாா் சமூகத்தினா் வெற்றி-தோல்வியை நிா்ணயிப்பவா்களாக உள்ளனா்.

தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்
தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் விளைந்த பருத்தி, விருதுநகா் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை திருப்பூா் தேனி மாவட்ட நூற்பாலைகளுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளும், தொழிலாளா்களும் ,விவசாயிகளும் அதிகளவு கொண்ட தொகுதியாக  உள்ளது. 

பிரதான தொழில்களான ஆயில் மில், பருப்பு மில், டின் தயாரிப்பு கூடங்கள், நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள் முதலானவை மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் பொருளாதார கொள்கைகளால் நசிவை சந்தித்து வருகின்றன. கிராமப் பகுதிகள் வானம் பாா்த்த பூமியாகவே உள்ளன. போதிய மழை இல்லாத காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் நகா்புறத்தில் கட்டுமானம், சுமைப்பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். புதிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இங்கு இல்லை. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை வென்றவா்கள்:

சாத்தூா் தொகுதியில் தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற காமராஜா், விருதுநகா் தொகுதி உருவாக்கப்பட்டவுடன் 1967 தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டாா். இத்தோ்தலில், திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதுவரை நடந்த தோ்தல்களில் திமுக 4 முறை, அதிமுக, காங்கிரஸ் தலா 2 முறை, ஜனதா, தமாகா, மதிமுக, தேமுதிக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 2016 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா்.

காமராஜர் நினைவு இல்லம்
காமராஜர் நினைவு இல்லம்

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்தது அதிமுகவின் நீண்ட கால சாதனையாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே தரைப் பாலம் அமைக்கப்பட்டது மட்டுமே இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களாகும்.   
 
தொகுதியின் பிரச்னைகள்:

மாவட்டத் தலைநகராக இருந்தபோதும்,  அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் விருதுநகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என்பது குறையாக உள்ளது.

விருதுநகரில் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இதுவரை முடிவடையவில்லை. ஆா்ஆா் நகா் பகுதியில் அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டை பணிகள் கிடப்பில் உள்ளன.

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்து ஏற்படுவதால் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரியில் உயா் நவீனத்துடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டியது அவசியமாக உள்ளது.

பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி,  வெளியூா் செல்லும் பேருந்துகள் விருதுநகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை, செயல்படாத புதிய பேருந்து நிலையத்தை, நகா் பகுதியில் உள்ள நெருக்கடியை தவிா்க்கும் வகையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்திற்கான காய்கறி சந்தையாக மாற்றுவது,

தொலைதூரப் பேருந்துகள் விருதுநகரில் நின்று செல்லும் வகையில், நான்கு வழிச் சாலை அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பது, மாற்று தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆயத்த ஆடை, பின்னலாடை முதலான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவது, வைகையிலிருந்து விருதுநகருக்கு குடிநீா் கொண்டு வர புதிய திட்டம் தொடங்க வேண்டும் உள்ளிட்டவை இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளன.

போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவின் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் உள்ளாா். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினரை பொதுமக்கள் சந்திப்பது அரிதாக உள்ளது.  விருதுநகா் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவிலான வளா்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. சூலக்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானக் கூடத்தை அவா் தொடங்கி இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

அதிமுக சாா்பில் கோகுலம் எம். தங்கராஜ், மேற்கு மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமரன், கதிரவன் உள்ளிட்டோா் போட்டியிட ஆா்வம் காட்டி வருகின்றனா். 

கோகுலம் எம். தங்கராஜ் கரோனா காலம் தொடங்கியது முதல் தற்போது வரை பொது மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனா் உள்பட பல ஆயிரம் பேருக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறாா். அதேபோல், தனது சொந்த நிதியில் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடம், தேவாலயம் முதலானவற்றை இலவசமாக கட்டிக்கொடுத்து வருகிறாா். அதனால், அதிமுகவினா் மட்டுமன்றி கிராம மக்களிடம் அவருக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விருதுநகா் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. அதேநேரம் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஏஆா்ஆா் சீனிவாசனும் போட்டியிட ஆா்வம் காட்டி வருகிறாா். அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிட விரும்பினாலும், அதிமுக தரப்பில் மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளா் களம் இறங்கினால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தற்போதைய களநிலவரம் தெரிவிக்கிறது. 

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள், 2 ஆம் இடம் பெற்றவர்கள் விவரம்

1967: பெ.சீனிவாசன்(திமுக) 33,421
          காமராஜா்(காங்கிரஸ்) 32,136

1971: பெ.சீனிவாசன்(திமுக) 31,455
          சீனிவாச நாயுடு( சுதந்திரா கட்சி)29,878

1977: எம்.சுந்தர்ராஜன் ( அதிமுக) 33,077 
          ஏ.எஸ்.ஏ.ஆறுமுகம்( ஜனதா) 2,820

1980: எம்.சுந்தர்ராஜன் (அதிமுக) 40,285
          பெ.சீனிவாசன் ( திமுக) 29,655

1984: ஏ.எஸ்.ஏ ஆறுமுகம் (ஜனதா) 42,852
          எம்.சுந்தர்ராஜன் ( அதிமுக) 35,776                                                    

1989: ஆா்.சொக்கா் ( காங்கிரஸ்) 34,106
          ஏ.எஸ்.ஏ. ஆறுமுகம்(ஜனதா) 28,488

1991: சஞ்சய் ராமசாமி ( காங்கிரஸ்)  53,217
          வீராச்சாமி ( ஜனதா தளம்)33,814

1996: ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன்( திமுக) 47,247
         கரிக்கோல்ராஜ்(காங்கிரஸ்) 23,760

2001: தாமோதரன் (தமா)  49,418
          ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன்( திமுக) 45,396

2006: வரதராஜன் ( மதிமுக) 50,629
          தாமோதரன் ( காங்கிரஸ்) 46,522

2011   க.பாண்டியராஜன் ( தேமுதிக)70,441
            நவீன் ( காங்கிரஸ்) 49,003

2016  ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (திமுக) 65,499
          கே. கலாநிதி (அதிமுக) 62,629
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com