பாப்பிரெட்டிப்பட்டி: வன்னியர்கள் ஆதிக்கம் நிறைந்த தொகுதி
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பாமக ஆதரவு பெற்ற, வன்னியர் சமூக மக்கள் ஆதரவளிக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.


தருமபுரி மாவட்டத்திலிருந்த மொரப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியானது 2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொகுதியில் தருமபுரி வட்டத்துக்கு உள்பட்ட ஒருபகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பேரவைத் தொகுதி, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பாக்கு, தென்னை உள்ளிட்ட வேளாண்மை சாகுபடி நிறைந்த தொகுதியாகும். இந்தத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி வட்டாரப் பகுதியிலுள்ள கிராமங்களில் கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
நிலஅமைப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கிழக்கே அரூர் சட்டப் பேரவைத் தொகுதியும், வடமேற்கு பகுதியில் பாலக்கோடு, பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிகளும், மேற்கே தருமபுரி தொகுதியும், தெற்கே சேலம் மாவட்டத்தின் ஓமலூர், ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1, 32,245
பெண்கள்: 1, 31,628
மூன்றாம் பாலினம்: 10
மொத்தம்: 2, 63,883
வாக்குச் சாவடிகள்: 314
சமூக நிலவரம்:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம் உள்ளனர். தவிர, கொங்கு வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூக மக்கள் பரவலாகவும், மலைவாழ் பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சமூக மக்கள் கணிசமாகவும் உள்ளனர்.
இங்கு வேளாண்மைத் தொழில் பிரதானத் தொழிலாகும். இதைத் தவிர, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, தனியார் தோல் தொழிற்சாலைகள், நெசவுத் தொழில்கள் உள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம்
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கடத்தூர் அருகிலுள்ள பொதியம்பள்ளம் அணைக்கட்டுக்கு சுமார் ரூ. 300 கோடியில் நீரேற்றும் திட்டத்துக்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி- வாணியாறு அணைக்கட்டு பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 14 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூனையானூர், கோழிமேக்கனூர், கொண்டகரஹள்ளியில் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டம், அம்மா சிறு மருத்துவமனைகள், கிராமப் பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்குகள், தார்ச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அரசு நலத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத திட்டம்:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேப்பாடி அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
தொகுதியின் பிரச்னைகள்:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் பெரிய அளவிலான ஆறுகள், நீர்தேக்கங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் இல்லை. இதனால், இங்குள்ள விவசாயிகள் மானாவாரிப் பயிர்களை அதிகம் பயிரிடுகின்றனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் இத்தொகுதியில் இல்லை. இதனால், இந்தத் தொகுதியிலுள்ள படித்த இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் இடதுபுறக் கால்வாயை நீட்டிப்பு செய்ய வேண்டும். வாணியாற்றில் கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலுள்ள வாணியாறு அணை, பொதியம்பள்ளம் அணைக்கட்டு உள்பட அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து திட்டத்தில் தூர்வார வேண்டும். இத் தொகுதியில் வேளாண்மைப் பணிகள் பிரதானத் தொழிலாக இருப்பதால் நீர் மேலாண்மைக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தத் தொகுதியில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை சார்ந்த தொழில்கள் அதிகம் இருப்பதால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும். வேளாண்மை உற்பத்திப் பொருள்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பொம்மிடி அல்லது புட்டிரெட்டிப்பட்டியில் சரக்கு ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து நேரடியாக சித்தேரி மலைக் கிராமத்துக்குச் செல்லும் வகையில் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் தொடர்மழைக் காலங்களில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலுள்ள ணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டும்.
இதுவரை நடந்த தேர்தல்கள்:
1977: என்.குப்புசாமி (அதிமுக)
1980: என்.குப்புசாமி (அதிமுக)
1984: தீர்த்தகிரி கவுண்டர் (காங்கிரஸ்)
1989: வ.முல்லைவேந்தன் (திமுக)
1991: கே.சிங்காரம் (அதிமுக)
1996: வ.முல்லைவேந்தன் (திமுக)
2001: பி.பழனியப்பன் (அதிமுக)
2006: வ.முல்லைவேந்தன் (திமுக)
2011: பி.பழனியப்பன் (அதிமுக) 76, 582 வெற்றி
வ. முல்லைவேந்தன் (திமுக) 66,093
எம். வேலு (சுயேச்சை) 18, 710
2016 பேரவைத் தேர்தல்:
பி.பழனியப்பன் (அதிமுக) 74,234
அ.சத்தியமூர்த்தி (பாமக) 61,521
பிரபு ராஜசேகர் (திமுக) 56,109
பாஸ்கர் (தேமுதிக}மக்கள் நலக் கூட்டணி) 9, 441
2019 இடைத்தேர்தல்:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பி.பழனியப்பன், தமிழக சட்டப் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆ.கோவிந்தசாமி வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆ.கோவிந்தசாமி (அதிமுக) 1,03,981
ஆ.மணி (திமுக) 85,488
டி.கே.ராஜேந்திரன் (அமமுக) 15, 283
எஸ்.சதீஷ் (நாம் தமிழர் கட்சி) 3, 783
எம்.நல்லதம்பி (மக்கள் நீதி மையம்) 2, 374
கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள்:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகம் உள்ளனர். இதைத் தவிர இந்தத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு தனி செல்வாக்கு உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பாமக ஆதரவு பெற்ற, வன்னியர் சமூக மக்கள் ஆதரவளிக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...