திருச்சி மேற்கு: மீண்டும் உதிக்குமா உதயசூரியன்?

மேற்கு தொகுதியைப் பொருத்தமட்டில் திமுக, அதிமுக மட்டுமே களம் காணும் தொகுதியாக அமையும். இவைத்தவிர, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். 
திருச்சி மத்திய பேருந்து நிலையம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம்

மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் இந்தத் தொகுதியானது 2006 பொதுத் தேர்தல் வரை திருச்சி 2 என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதி என பெயர்மாற்றம் கண்டது. தொகுதி முழுவதும் மாநகரப் பகுதியைக் கொண்டது. படித்த மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். மாநகராட்சியின் 39 முதல் 42 மற்றும் 44 முதல் 60 வரையிலான வார்டுகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, ரயில் சந்திப்பு என பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பேருந்து நிலையமும் இத்தொகுதியின் அடையாளமாக உள்ளது.

1957 முதல் இதுவரை இந்தத் தொகுதியில் தலா 6 முறை திமுக, அதிமுக கட்சிகளும், 2 முறை கம்யூனிஸ்ட்டுகளும் வென்றுள்ளன. அதிமுக ஆட்சியில் முதல் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதி இது. 2011 இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுகவின் கேஎன்.நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.மரியம்பிச்சை, சாலை விபத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

2011 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (நேரு 54,345) வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கே.என். நேரு, 92,049 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன் 63,202 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

அமைச்சர்களாக தமிழக சட்டப் பேரவையை அலங்கரித்த அன்பில் தர்மலிங்கம், நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம்பிச்சை, பரஞ்சோதி ஆகியோரை வெற்றி பெறச் செய்த தொகுதி. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் (1957) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம். கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. 1962லும் அவர்தான் இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது என்றாலும், கட்சியிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது முதல் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகத் தொடர்ந்தது. 

1989இல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இங்கு நிலவிய நான்குமுனைப் போட்டியும், ஏற்கெனவே இந்தத் தொகுதிக்கு அறிமுகமான அன்பில் தர்மலிங்கத்தின் பெயரால் அன்பில் பொய்யாமொழி வெற்றிக்கு வழிவகுத்துத் தந்தது. ராஜீவ் காந்தி அனுதாப அலையில் இந்தத் தொகுதியை 1991 இல் அதிமுக மீண்டும் கைப்பற்றியது. இருப்பினும், 1996 முதல் திமுகவின் செல்வாக்குதான் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாகத்தான் லால்குடியிலிருந்து திருச்சி மேற்கு தொகுதிக்கு இடம் மாறினார் கே.என். நேரு. 

2021 தேர்தலிலும் அவரே களம் காணவுள்ளார். அதிமுக சார்பில் தற்போதைய அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், அவரது மகன் ஜவஹர்லால் நேரு ஆகியோரும் இத்தொகுதிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதி இந்த முறை அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், திருச்சி மேற்கு தொகுதியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் இந்த முயற்சி எடுத்திருப்பதாக கூறுகின்றனர் அதிமுக-வினர். மேற்கு தொகுதியைப் பொருத்தமட்டில் திமுக, அதிமுக மட்டுமே களம் காணும் தொகுதியாக அமையும். இவைத்தவிர, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியாளர்களாகவே பங்கேற்க இயலும் சூழல் உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற ஒற்றை கோரிக்கையே பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத நிலையில், தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகள் பலவும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

தொகுதியில் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை:  

ஆண்கள்- 1,29,407, பெண்கள்- 1,38,954,  மூன்றாம் பாலினத்தவர்- 18, மொத்தம்-  2,68,379.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com