பேராவூரணி: மல்லுக்கட்டும் அதிமுக - திமுக

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேராவூரணி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மனோரா கோட்டை
மனோரா கோட்டை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேராவூரணி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த முறை அதிமுகவை வீழ்த்தி மீண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது திமுக. 

ஐந்து முறை வெற்றி பெற்ற அதிமுகவோ, இந்த முறையும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் களம் காணுகிறது. இதனால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே யுத்தக் களம் தயாராகியுள்ளது.


தொகுதி அறிமுகம்: பேராவூரணி ஒன்றியத்தின் 26 ஊராட்சிகள், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 9 ஊராட்சிகள், பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி. 1967இல் பேரவைத் தொகுதி அந்தஸ்தை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதியாகவும், கடைமடை பாசனப் பகுதியாகவும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மனோரா அமைந்துள்ளது.

சமூகம், தொழில்கள்: விவசாயம் பிரதானத் தொழில். மீன்பிடித் தொழிலும் உண்டு. குறிப்பாக தென்னை விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதி. இந்தியாவில் கேரளத்திற்கு அடுத்தபடியாக இந்தப் பகுதியில் தென்னை அதிக  அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தேவர், முத்தரையர், பெரும்பான்மை சமூகமாக இருந்தாலும், ஆதிதிராவிடர்கள், கோனார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

திட்டங்கள், தேவைகள்: வகுப்பறைக் கட்டடங்கள், பள்ளிகள் தரம் உயர்வு, அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு, கடைமடை பகுதி  பாசனமேம்பாட்டிற்கு காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை, உயர்மட்ட பாலங்கள், நவீன அரிசி ஆலைக்கான அறிவிப்பு, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மேல்நிலைப்பள்ளி நீர்த்தேக்கத் தொட்டிகள் என சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணிகள் செய்திருந்தாலும் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நீதிமன்றம் கொண்டுவராதது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படாதது பொதுமக்களின் மனக்குறையாக உள்ளது.

சிறு துறைமுகம், அகல ரயில்பாதை திட்டம், தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம், அரசு மருத்துவமனை தரம் உயர்வு ஆகியவை தொகுதியின் எதிர்பார்ப்பாக உள்ளன.

அரசியல் களம்: கடந்த 1967 முதல் 2016 வரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 முறை அதிமுக, 2 முறை காங்கிரஸ், 2 முறை தமாக, தலா ஒரு முறை திமுக, சுயேட்சை, தேமுதிக ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

கடந்த முறை அதிமுகவில் வெற்றி பெற்ற கோவிந்தராசு இந்த முறையும் களம் காண முயற்சித்து வருகிறார். இல்லையெனில், தனது மகனும், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளராக உள்ள கோவி. இளங்கோவிற்கு சீட் கேட்கிறார்.

தமாகாவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். வி. திருஞானசம்பந்தமும், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குழ. செ. அருள்நம்பியும் அதிமுகவில் சீட் வாங்க முனைப்புடன் உள்ளனர். இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள்  அமைச்சர் வைத்திலிங்கம் பேராவூரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.

திமுக சார்பில் கடந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த என். அசோக்குமார் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் பழஞ்சூர் செல்வம் என்பவரும் தீவிர முயற்சியில் உள்ளார்.

தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,07,856, பெண்- 1,11,794, மூன்றாம் பாலினம்- 11, மொத்தம்- 2,19,661.

இதுவரை வெற்றிபெற்றவர்கள்
 
1967 மு. கிருஷ்ணமூர்த்தி (திமுக)
1971 குழ. செல்லையா (சுயேட்சை)
1977 எம். ஆர். கோவேந்தன் (அதிமுக)
1980 எம். ஆர். கோவேந்தன் (அதிமுக)
1984 எம். ஆர். கோவேந்தன் (அதிமுக)
1989 ஆர். சிங்காரம் (காங்)
1991 ஆர். சிங்காரம் (காங்)
1996  எஸ். வி. திருஞானசம்பந்தம் (தமாகா)
2001 எஸ். வி. திருஞானசம்பந்தம் (தமாகா)
2006 எம். வி. ஆர். வீரகபிலன் (அதிமுக)
2011 நடிகர் அருண் பாண்டியன் (தேமுதிக)
2016  மா. கோவிந்தராசு (அதிமுக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com