ஆலங்குளம்: அதிமுக - திமுக இடையே கடும்போட்டி

தொகுதியை தக்கவைக்க தற்போதய எம்எல்ஏ பூங்கோதை(திமுக) முனைப்பு காட்டி வருகிறார். தொகுதியை கைப்பற்ற அதிமுகவும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. 
ஆலங்குளம்: அதிமுக - திமுக இடையே கடும்போட்டி

தொகுதி அறிமுகம்: ஆலங்குளம் தொகுதி, ஆலங்குளம் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி வட்டங்களின் ஒரு பகுதியைக் கொண்டு திருநெல்வேலி மக்களைவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இத்தொகுதி தலைமையிடம் தென்காசி மாவட்டத்தில் இருந்தாலும் தொகுதியின் சில பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்: விவசாயம், பீடித் தொழில், அரிசி ஆலைகள், காய்கனி வியாபாரம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய தொழில்கள். கடையம் ராமநதி, முக்கூடல் தாமிரவருணி ஆகியவை தொகுதியின் தென் பகுதி தாகத்தைத் தீர்த்து விவசாயத்திற்கு உதவுகிறது. வட பகுதி வறட்சியான பகுதியாக பார்க்கப்படுகிறது.

வாக்காளர் விவரம்: தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும் 7 திருநங்கையர் என 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

சமூகம்: இத் தொகுதியில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதேபோல் இத்தொகுதியில் நாடார் சமுதாய வாக்குகள் 60 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. தேவர், ஆதி திராவிடர்,  இஸ்லாமியர்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் வாக்குகள் தொடர்ந்து அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனர்.  

கடந்த தேர்தல்கள்:

ஆலங்குளம் தொகுதியில் 1952 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சின்னத்தம்பியும், 1957 இல் வேலுச்சாமியும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1962 ல் காங்கிரஸ் சார்பில் எஸ். செல்லபாண்டியன் வெற்றி பெற்றதோடு, சட்டப்பேரவைத் தலைவராகவும் தேர்வானார்.

1967 மற்றும் 1971இல் திமுக சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பசாமி பாண்டியன் வென்றார். 1980 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் நவநீத கிருஷ்ண பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சண்முகைய்யா பாண்டியன் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ். ராமசுப்பு வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் திமுக சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டு வென்றார். அப்போது சட்டத்துறை அமைச்சராவும் பதவி வகித்தார். 2001 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஜி.ராஜேந்திரன் வென்றார். கடந்த தேர்தலின் போது திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, சுயேட்சைகள் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். அதில் அதிமுக வேட்பாளர் எப்சி கார்த்திகேயனை விட 4754 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போதைய எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா(திமுக).

கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:  

பூங்கோதை ஆலடி அருணா (திமுக) 88,891,
எப்சி கார்த்திகேயன் (அதிமுக) 84,137,
ராஜேந்திரநாத் (தேமுதிக) 7,784,
அன்புராஜ் (பாஜக) 4,660,
ஆர். வசந்தி ராமலிங்கம் (நாம் தமிழர்) 2,495.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு: தொகுதியில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஏதும் இல்லை. 50 விழுக்காடு மக்களின் தொழில் விவசாயம், கூலித் தொழில்தான். பெரும்பாலானோர் பீடித் தொழிலில்தான் ஈடுபட்டு வருகின்றனர். பீடித் தொழிலால் ஏராளமானோர் ஆஸ்துமா, புற்றுநோய் என பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் தொகுதி முழுவதுமே உள்ளது. பீடி சுற்றும் பெண்களுக்கு உரிய கூலியும் வழங்கப்படுவது இல்லை. இத்தொழிலை முறைப்படுத்த வேண்டும். முக்கூடலில் செயலற்று கிடக்கும் பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை சீரமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

தொட்டியன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் ஆலங்குளம் கால்வாய் முறைப்படி தூர் வாரப்பட்டால் ஆண்டுதோறும் இக்குளம் நிரம்பும். அதன் மூலம் விவசாயம் செழிக்கும். இது சுமார் 30 ஆண்டு கால கோரிக்கையாகும். ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட மருத்துவமனையாக மாறி 5 ஆண்டுகள் ஆகியும் இங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அவசர சிகிச்சை மற்றும் பேறுகால சிகிச்சைகள் எதுவும் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு நடைபெறவில்லை.

இம்மருத்துவமனையே மேம்படுத்துவதுடன், நகர துணை சுகாதார நிலையமும் இங்கு அமைக்க வேண்டும். தொகுதி தலைமை இடத்தில் மகளிர் கலைக் கல்லூரி கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கடையம் ஒன்றியப் பகுதியான கடனாநதி, ராமநதி போன்றவை தூர்வாரப்படும் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் உறுதிமொழியாக இருக்கும். ஆனால் செயல்வடிவம்தான் கடந்த கால் நூற்றாண்டுகளாக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

கடையம் பகுதியில் மலர் உற்பத்தி அதிகம் இருப்பதால் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள்.

கடையம் பகுதியில் சுமார் 700 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடும் வெயிலில் பணி செய்யும் இவர்களுக்குக் கிடைப்பதோ சொற்ப ஊதியம்தான். வரும் புதிய அரசு இத்தொழிலாளர்கள் வாழ்வில் வளம் பெற செய்யும் பொருட்டு வாரியம் ஒன்று அமைக்க வேண்டும்.

குறிப்பாக திருநெல்வேலி - செங்கோட்டை- கொல்லம் சாலை நான்கு வழிச் சாலையை காரணம் காட்டி கடந்த 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நான்கு வழிச் சாலையால் பாதிக்கப் படுவோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசியல் நிலவரம்: தொகுதியை தக்கவைக்க தற்போதய எம்எல்ஏ பூங்கோதை(திமுக) முனைப்பு காட்டி வருகிறார். அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களை, தான் எதிர்க்கட்சி எம்எல்ஏ என நினைக்காமல் முன் நின்று செயல்படுத்துவது தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தொகுதி பிரச்னைகளுக்காக அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும்போதும், நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் கட்சி நிர்வாகிகளை அழைப்பதில்லை என நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தென்காசி தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கப்படுமானால் ஆலங்குளத்தில் போட்டியிடப் போவதாக திமுகவின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் கூறி வருகிறார். இந்த ஒருவரில் ஒருவருக்கே திமுகவில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப் படுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன், அதிமுக வழி காட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி பிரபாகரன் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com