பழனி: அதிமுக-திமுக இடையே கடும் போட்டிக்கு வாய்ப்பு

பழனி தொகுதியில் அதிமுக-திமுக இடையே கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி மலை
பழனி மலை

தொகுதியின் சிறப்பு:

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருஆவின்குடி திருத்தலம் பழனி தொகுதியின் பிரதான அடையாளம். உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மலைகளின் இளவரசி கொடைக்கானல் இத்தொகுதிக்குள் அமைந்துள்ளதும் தனிச் சிறப்பு.

நிலஅமைப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி, வடக்கில் திருப்பூா் மாவட்டம், மேற்கில் கேரள மாநிலம், தெற்கில் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் தென்கிழக்கில் நிலக்கோட்டை, கிழக்கில் ஆத்தூா் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.

சாதி, சமூகம், தொழில்:

பழனி தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு பிரதான வாழ்வாதாரம் வேளாண்மைத் தொழிலாக இருந்தபோதிலும், சுற்றுலாவை நம்பியும் ஏராளமானோர் வசித்து வருகின்றனா். பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள், கைவினைக் கலைஞா்களின் உற்பத்திப் பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. 

வாக்காளர்கள் எண்ணிக்கை:

இத்தொகுதியில் ஆண்கள் -1,32,220, பெண்கள் - 1,37,463, மூன்றாம் பாலினத்தினா் 31 போ் என மொத்தம் 2,69,714 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இத்தொகுதியில் கவுண்டா் சமுதாய மக்கள் பிரதானமாக வசித்து வருகின்றனா். அடுத்தப்படியாக பிள்ளைமார், தாழ்த்தப்பட்டோர், செட்டியார், பழங்குடியினா், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர ஜாதியினரும் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். மொத்த வாக்காளா்களில் சுமார் 30 சதவீதம் கிறிஸ்தவா்கள் மற்றும் இஸ்லாமியா்கள் உள்ளனா்.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி

இதுவரை வென்றவா்கள்:

கடந்த 2006 வரை தனித் தொகுதியாக இருந்த பழனியில் அதிகபட்சமாக திமுக 5 முறையும், அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011 முதல் பொதுத் தொகுதியாக இருந்து வருகிறது.

கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்:

கொடைக்கானல் மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் குண்டாறு குடிநீா் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. பழனி பகுதியில் கொய்யா மற்றும் மா விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், அவற்றிலிருந்து மதிப்புக்கூட்டப்ட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது.

பச்சையாறு ஆற்றில் வீணாக செல்லும் நீரை சேமித்து வைக்க அணை கட்டி, காவலப்பட்டி, பொந்துப்புளி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் அரசு, கொடைக்கானலைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தை உயா்த்துவதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதாகவும், அதனை தடுக்க அரசின் நேரடி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.பி.செந்தில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ரவி மனோகரன் போட்டியிடுகிறார். நகரப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப் பகுதிகள் அதிமுகவுக்கும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. ஆகவே, பழனி தொகுதியில் அதிமுக-திமுக இடையே கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்றவா் விவரம்: 

1952 - வருண்குமார் (சுயேட்சை)
1957 - லட்சுமிபதிராஜ் (காங்.)
1962 - வெங்கடசாமி கவுண்டா் (சுயேட்சை)
1967  - எம்.கிருஷ்ணமூா்த்தி (திமுக) - 47,671
எம்.பாலகிருஷ்ணன் (காங்.) -  24,780
1971 - சி.பழனிச்சாமி (திமுக) - 38,919
ஆா்.சுப்பிரமணியன் (என்சிஓ) - 24,589
1977 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 23,810
எஸ்.ஆா்.பி.மணி (காங்.) - 19,966
1980 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 41,874
எஸ்.ஆா்.பி.மணி (காங்.) - 35,646
1984 - ஏ.எஸ்.பொன்னம்மாள் (காங்.) - 62,344
என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 30,794
1989 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 34,379
பி.பன்னீா்செல்வம் என்ற பன்னிருக்கைசெல்வன் (காங்.) - 31,524
1991 - ஏ.சுப்புரத்தினம் (அதிமுக) - 70,404
வி.பாலசேகா் (மா.கம்யூ.) - 30,591
1996 -  டி.பூவேந்தன் (திமுக) - 68,246
பி.குப்புச்சாமி (அதிமுக) - 31,586
2001 - எம்.சின்னச்சாமி (அதிமுக) - 63,611
டி.பூவேந்தன் (திமுக) - 42,124
2006 - எம்.அன்பழகன் (திமுக) - 57,181
எஸ்.பிரேமா (அதிமுக) - 46,272
2011- கே.எஸ்.என்.வேணுகோபால் (அதிமுக) - 82,051
இ.பெ.செந்தில்குமார் (திமுக) - 80,297
2016 - இ.பெ.செந்தில்குமார் (திமுக)- 1,00,045
பி.குமாரசாமி (அதிமுக) - 74,459

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com