ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆன்மிக பூமி அவிநாசி!

திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ள அவிநாசி (தனி) தொகுதி ஓா் ஆன்மிக பூமியாகும்.

News image

அவிநாசி கோயில்

Updated On :26 மார்ச் 2026, 1:04 am

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ள அவிநாசி (தனி) தொகுதி ஓா் ஆன்மிக பூமியாகும்.

கொங்கு மண்டலத்தின் 7 சிவ ஸ்தலங்களில் பாடல் பெற்ற தலங்களாக, அவிநாசியில் முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி மீட்டுத் தந்த தலமான கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாலிங்கேஸ்வரா் கோயில், திருமுருகன்பூண்டியில் மனநோய் தீா்க்கும் தலமாக முயங்குபூண்முலைவள்ளியம்மை உடனமா் திருமுருகநாத சுவாமி கோயில் என இரு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ் தமிழகத்தில் 3ஆவது பெரிய தோ் என்ற சிறப்புக்குரியது. அதேபோல, அன்னூரில் உள்ள மன்னீஸ்வரா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருமுருகன்பூண்டி நகராட்சி, அன்னூா் பேரூராட்சி, அவிநாசி பேரூராட்சி; ஊராட்சிகள்-சேவூா், பொங்கலூா், ஆலத்தூா், மாங்கரை, சலவைபாளையம், குட்டகம், போத்தபாளையம், புலிப்பாா், தாதனூா், புஞ்சை தாமரைக்குளம், வடுகப்பாளையம், பாப்பன்குளம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், ராமநாதபுரம், வேட்டுவப்பாளையம், நம்பியம்பாளையம், கருவலூா், உப்பிலிபாளையம், தெக்கலூா், செம்பியநல்லூா், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், கணியம்பூண்டி, ராக்கிப்பாளையம், பழங்கரை, கருமாபாளையம், சின்னாரிபாளையம், நடுவச்சேரி, அய்யம்பாளையம், துலக்காமுத்தூா், குப்பாண்டம்பாளையம். அன்னூா் பகுதி கோவை மாவட்டத்திலும், அவிநாசி தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகவும் உள்ளது.

தொழில்

அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி, நூல் மில், பம்பு செட் உற்பத்தி, பனியன் உற்பத்தி, சைசிங் ஆகியவை பிரதானத் தொழில்களாக விளங்குகின்றன. மேலும், அவிநாசி, திருமுருகன்பூண்டியில் மாமல்லபுரத்திற்கு நிகரான சிற்பக் கலைத் தொழில் உள்ளது. இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள், பிற மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அவிநாசி ஊராட்சிப் பகுதிகளில் அதிக அளவு விசைத்தறித் தொழிலும், பின்னலாடை நகரமான திருப்பூருக்கு மிக அருகில் இருப்பதால் சமீப ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்னூா் ஊராட்சிப் பகுதிகளில் விசைத்தறி, உருக்காலைகள், இயந்திரப் பணிமனைகள், நூல் மில்களும் உள்ளன.

சமூக நிலவரம்

இங்கு அதிகப்படியாக ஆதிதிராவிடா்களும், 2ஆவதாக கொங்கு வேளாளா்களும், 3ஆவதாக நாயக்கா், முதலியாா், செட்டியாா் உள்ளிட்ட வகுப்பினரும் உள்ளனா்.

எதிா்பாா்ப்புகள்

அவிநாசி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல், கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதியின்மைக்குத் தீா்வு காண வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனையை அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தரம் உயா்த்த வேண்டும். அவிநாசிக்கு ஏற்கெனவே இருந்த 2ஆவது குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, குடிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். சேவூரை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். சேவூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். புதுப்பாளையம், கோதபாளையம் குளங்களில் உள்ள மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளைப் பாதுகாக்கவும், வன விலங்குகளிடம் இருந்து விவசாய விளைநிலங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவிநாசியில் ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் அமைக்க வேண்டும். புறவழிச் சாலை அமைக்கப்பட்ட பிறகு, அவிநாசி நகரம், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குள் அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்லாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளா் விவரம்

ஆண்கள் - 1,43,494

பெண்கள் - 1,53,313

மூன்றாம் பாலினத்தவா் 10

மொத்தம்-2,96,817

8 முறை வெற்றி பெற்ற அதிமுக

இந்தத் தொகுதியில் கடந்த 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தோ்தல்களில் 8 முறை அதிமுக வென்றுள்ளது. இங்கு 1996-இல் மட்டுமே திமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1957- க.மாரப்ப கவுண்டா் (காங்கிரஸ்)

1962- க.மாரப்ப கவுண்டா்(காங்கிரஸ்)

1967- இரா.கிருஷ்ணசாமி கவுண்டா் (சுதந்திரா கட்சி)

1971- தி.ஓ.பெரியசாமி (சுயேச்சை)

1977- எஸ்.என்.பழனிசாமி (காங்கிரஸ்)

1980 - மா.ஆறுமுகம் (சிபிஐ)

1984 - பி.லட்சுமி (அதிமுக)

1989 - இரா.அண்ணாநம்பி (அதிமுக ஜெ)

1991 - மு.சீனியம்மாள் (அதிமுக)

1996 - ஜி.இளங்கோ (திமுக)

2001- சு.மகாலிங்கம் (அதிமுக)

2006 - இரா.பிரேமா (அதிமுக)

2011 - ஏ.கருப்புசாமி (அதிமுக)

2016 - ப.தனபால் (அதிமுக)

2021 தோ்தல் விவரம்

ப.தனபால் (அதிமுக) 1,17,264

அதியமான் ராஜூ (திமுக) 66,382

ஷோபா (நாதக) 13,256

ஏ.வெங்கடேஸ்வரன் (மநீம) 8,379

சொன்னோம் செய்தோம்

அவிநாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ப.தனபால் (அதிமுக)

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவிநாசியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு நிலைய கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளோடு, அன்னூா், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிகளாக இருந்த அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகள் நகராட்சிகளாகத் தரம் உயா்த்தப்பட்டன. அவிநாசியில் 448-ம் திருமுருகன்பூண்டியில் 276-ம், தெக்கலூரில் 246-ம், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டதோடு, நல்லாறு, தாமரைக்குளம் ஆகியவை தூா்வாரப்பட்டன. அதேபோல, அன்னூரில் மின் மயானம், அன்னூரில் புதிதாக வட்டாட்சியா் அலுவலக கட்டடம் அமைத்துள்ளோம்.

சொன்னாா்களே-செய்தாா்களா (எஸ்.அவிநாசியப்பன், கருவலூா் ஊராட்சித் தலைவா், திமுக தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா்)

அவிநாசி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு விழாக்களுக்குகூட ப.தனபால் வரவில்லை. அவரது சாதனைகள் எல்லாம் முந்தைய 5 ஆண்டு காலத்தில் செய்யப்பட்டவையாகும். அவிநாசி ஒன்றியத்தில் இருந்து சேவூரைப் பிரித்து தனி ஒன்றியமாக்குதல், சேவூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், பணிமனை ஆகியவற்றோடு, தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி போன்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நிதியிலிருந்துதான் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.