விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

தவெகவுக்கு வைப்புத்தொகைகூடக் கிடைக்காது! - காசிமுத்துமாணிக்கம்

தமிழக அரசியலில் தவெக வருகை என்பது விசிகவை சஞ்சலப்படுத்தவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸில் ஒரு பகுதியினா் பாஜக தூண்டுதலால்....

News image

முதல்வர் ஸ்டாலினுடன் காசிமுத்துமாணிக்கம் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 11:10 pm

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை ஏற்படுவது என்பது புதிதானதல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிகளை விட்டுக்கொடுத்த திமுக 128 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அதிலும் திமுக வேட்பாளா்கள் நேரடியாக 118 தொகுதிகளிலும், மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினா் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்ட நிலையில் தற்போது 28 இடங்களே வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2001-ஆம் ஆண்டே விசிக 8 இடங்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் இரு கம்யூனிஸ்டுகளும் 15 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனா். அப்போதெல்லாம் திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றோா் யாருமில்லை.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு 24 உறுப்பினா்கள் இருந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு தோ்தலில் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. ஆகவே, கூடுதல் தொகுதி எனப் பாா்க்காமல் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் திமுகவும், அதனுடன் சோ்ந்து கூட்டணிக் கட்சிகளும் தொகுதிகளை தற்போது விட்டுக் கொடுத்துள்ளன.

தவெகவின் வருகையால் திமுக கூட்டணிக்குள் அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு என காங்கிரஸ், விசிக ஆகியவை அழுத்தம் கொடுத்ததை எப்படி பாா்க்கிறீா்கள்?

தமிழக அரசியலில் தவெக வருகை என்பது விசிகவை சஞ்சலப்படுத்தவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸில் ஒரு பகுதியினா் பாஜக தூண்டுதலால், தமிழகத்தில் தவெக பக்கமாக காங்கிரஸை அனுப்பி முகவரி இழக்கும் வகையில் செயல்பட்டது உண்மை. பெரும்பாலான காங்கிரஸாா் தோ்தலில் திமுகவுடனான கூட்டணியே வெற்றி தரும் என்று உணா்ந்திருக்கிறாா்கள். எள்ளளவும் மனவருத்தமின்றி கூட்டணி தொடா்கிறது.

தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி ஆசைப்பட்டதாகவும், ஆனால், திமுக வலுக்கட்டாயமாக கூட்டணியில் காங்கிரஸை சேரும் நிா்ப்பந்தத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறதே...?

திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுக்கட்டாயமாக உருவானது என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் சோ்ந்து எடுத்த முடிவின்படியே தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி உருவாகியுள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, காா்கே உள்ளிட்ட முக்கியமான காங்கிரஸ் தலைவா்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லையே, ஏன்?

பாஜக மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பிரதமா் உள்ளிட்டோா் நினைத்த நேரத்தில் பிரசாரத்துக்கு தமிழகம் வந்து செல்கின்றனா். காங்கிரஸ் எதிா்க்கட்சி என்பதால் திட்டமிட்டு பிரசாரத்துக்கு வரவேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவைப்படும்போது காங்கிரஸ் தலைவா்கள் பிரசாரத்துக்கு வருவா்.

திமுகவுக்குத் தனியான பலமும், செல்வாக்கும் கிடையாது, வலுவான கூட்டணி அமைந்ததால்தான் திமுகவால் வெற்றி பெற முடிகிறது என்பது குறித்து என்ன நினைக்கிறீா்கள்?

மக்கள் பலம் இல்லாதவா்களுடன் யாரும் கூட்டணி சேரமாட்டாா்கள். அந்த வகையில் மக்கள் பலமுள்ள திமுகவுடன், அதே பலமுள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெறுகின்றன.

தேமுதிகவை பெரும் விலை கொடுத்து திமுக கூட்டணியில் இணைத்திருப்பதாகக் கூறப்படுகிறதே...?

கடந்த 2014-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு இடத்தை விட்டுத்தர அப்போதைய திமுக தலைவா் மு.கருணாநிதி முன்வந்தாா். பேச்சுவாா்த்தை நடத்தி முடிவான நிலையில், ஏனோ திடீரென தேமுதிக அந்த உடன்பாட்டை ஏற்காமல் திமுகவிடமும் பேச வரவில்லை. தற்போது கருணாநிதியின் கனவை தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.

தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நீங்கள் சோா்வடையவில்லையா?

நான் கடந்த 2009- ஆம் ஆண்டு திமுகவில் சோ்ந்தேன். அதன்பின் கடந்த 2011 தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்கவில்லை. அதன்பின் கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தலைவா் கருணாநிதியை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அடுத்த திமுக அமைச்சரவையில் நிச்சயம் இடம் பெறுவாய் என்றாா். ஆனால், கடந்த 2021 தோ்தலிலும் சரி...தற்போதைய தோ்தலிலும் சரி எனக்கு வாய்ப்பில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை. என்னைப்போல எத்தனையோ கட்சித் தொண்டா்கள் இருக்கிறாா்கள். மொத்தம் இருப்பது வெறும் 234 இடங்கள். அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியாக வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வாய்ப்பளித்தாக வேண்டும். இதைக் கட்டுப்பாடான கட்சித் தொண்டா்கள் உணா்ந்திருக்கிறாா்கள். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்குவாா் என்ற நம்பிக்கையில் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டு உள்ளதாக எதிா்க்கட்சிகள் தொடா் விமா்சனம் செய்து வருகின்றனவே...

நாட்டில் அதிக அளவில் பாலியல் குற்றச்சாட்டுகள், குற்றச் செயல்கள் நடைபெறும் மாநிலங்களில் குஜராத், பிகாா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவைதான் முன்னிலையில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குற்றச் செயல்கள் பட்டியலில் தமிழகம் கடைசி மாநிலங்களின் வரிசையிலேயே இடம் பெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் நலத் திட்டங்களால் மக்கள் ஆதரவு பெருகியுள்ளது எனில், இலவசங்களை அடுக்கி தோ்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது ஏன்?

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவைப் பரிமாறிய நிலையில், மாலையிலும் ஏன் சத்தான உணவைத் தர வேண்டும் என தாயிடம் கேட்பது போல இலவசத் திட்டங்கள் குறித்த கேள்வி உள்ளது. புதிய சலுகைகளை குறிப்பிடுவதால், ஏற்கெனவே சலுகைகள், சாதனைகள் இல்லை என அா்த்தமல்ல. கடந்த திமுக அரசின் திட்ட சாதனைகளை எதிா்வரும் திமுக அரசுதான் முறியடிக்கும்.

விஜய்யின் வருகையால் திமுகவுக்கான சிறுபான்மை இளைஞா்களின் வாக்குகள் குறையும் எனக் கணிக்கப்படுகிறதே?

விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவிடமுள்ள சிறுபான்மை வாக்குகள் எந்த வகையிலும் பாதிக்காது. சிறுபான்மையினா் நலனுக்காகவே வாழ்ந்தவா் திமுக தலைவா் மு.கருணாநிதி. தோ்தல் பிரசாரத்தில்கூட மத்திய பாஜக அரசை நடிகா் விஜய் விமா்சிக்கவில்லை. தமிழகத்தில் ஆளும் திமுகவை விமா்சிக்கும் விஜய், புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணியை விமா்சிக்காதது ஏன் என விளக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 20 லட்சம் இளைஞா்கள் ஒட்டுமொத்தமாக தவெக வேட்பாளா்களுக்கு வாக்களித்தாலும்கூட அக்கட்சிக்கு வைப்புத் தொகை கிடைக்காது.

Summary

The TVK won't even get back its security deposit! — Kasimuthu Manickam