தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி! தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி!

தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி உருவானது பற்றி...

News image

விஜய் | ராகுல் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 2:26 pm IST

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெகவுடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே தமிழகத்தில் இந்த முறை கூட்டணி தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வந்தன.

முதலில் திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தேசிய தலைமை தயக்கம் காட்டி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நிர்பந்தித்ததன் காரணமாகவே தேசிய தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

ஏனெனில் தவெகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி வந்தார். காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இறுதியாக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. ராகுல் காந்திக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தலின்பேரில் காங்கிரஸ் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இறுதியாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும் மாநிலங்களவை எம்.பி. ஆகிவிட்டார்.

எனினும் ராகுல், திமுகவுடனான கூட்டணியில் அதிருப்தியில் இருந்து வந்ததாகவே கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி, ஸ்டாலினைச் சந்திக்கவில்லை. பொன்னேரியில் தனது முதல் கூட்டத்தில் ஸ்டாலின் பெயரை ராகுல் குறிப்பிடவில்லை. பின்னர் சர்ச்சை எழுந்த நிலையில் அடுத்து வந்த கூட்டங்களில் திமுக மற்றும் ஸ்டாலின் குறித்துப் பேசினார். புதுச்சேரிக்கு ஒருமுறை வந்தபோதும் ராகுல், ஸ்டாலினைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக கூட்டணியில் 28 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.

காங்கிரஸின் ஆதரவைக் கோரிய நிலையில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு, ஆட்சியிலும் பங்கு உண்டு என்று கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியை உறுதிசெய்யவும் பனையூர் அலுவலகத்தில் விஜய்யை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துப் பேசி கூட்டணியை உறுதி செய்துள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என்றும் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும் என்றும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் இருந்து பெண் ஒருவர் அமைச்சராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் குளச்சல் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கியூத்பெர்ட் அமைச்சராக வாய்ப்புள்ளது.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி என்ற வரலாறு உருவாக்கப்படும். அதில் தவெக கட்சிக்கும் விஜய்க்கும் முக்கியப் பங்கு இருக்கும். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும்.

தவெக 108 இடங்கள் பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 117 தேவை என்பதால் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Coalition Government in Tamil Nadu for the First Time: TVK–Congress Form New Alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.