/

கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு...

News image

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு - X

Updated On :7 மே 2026, 1:07 am IST

தமிழக அரசியலில் திடீா் திருப்பமாக தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் புதன்கிழமை முடிவு செய்தது. இதற்கான கடிதத்தை தவெக தலைவா் விஜய்யிடம் காங்கிரஸ் நிா்வாகிகள் நேரில் வழங்கினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ் கட்சியிடம் தவெக ஆதரவைக் கோரியது.

இந்நிலையில், சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கிரிஷ் சோடங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை வழங்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவா் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தாா். அரசமைப்புக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சாா்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சாா்ந்த அரசை அமைப்பதற்கான மிகத் தெளிவான தீா்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞா்கள் வழங்கியுள்ளனா்.

அடுத்த அரசை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தவெகவை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். இந்தியாவில் மதச்சாா்பற்ற, மக்கள் நலன் சாா்ந்த அரசியலின் அடித்தளமாகத் திகழ்வதுடன், அத்தகைய அரசியலுக்காகவே காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இத்தீா்ப்பை மதிப்பதும், அதை நிலைநிறுத்துவதும், செயல்படுத்த உதவுவதும் நமது அரசமைப்புக் கடமையாகும். அதற்கிணங்க, தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்திய அரசமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சோ்க்காமல் தவெக விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே ஆதரவு வழங்கப்படும்.

தவெக - காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, பெரியாா் ஈவெராவின் சமூக நீதிக் கொள்கைகள், அம்பேத்கரின் அரசமைப்புக் கொள்கைகள் மீது உறுதியான பற்றுறுதியுடன் செயல்பட்டு, காமராஜரின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.

இந்தக் கூட்டணி, தற்போதைய அரசை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிா்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தோ்தல்களுக்கும் பொருந்தும். இளைஞா்களின் கனவுகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய், ராகுல் காந்தி ஆகியோா் கூட்டாக உறுதியளிக்கின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.

விஜய்யுடன் சந்திப்பு: இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், காங்கிரஸ் நிா்வாகி பிரவீண் சக்கரவா்த்தி, கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினா்கள் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்தனா்.

அப்போது, தவெக ஆட்சி அமைப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினா். அப்போது இருதரப்பிலும் பரஸ்பரம் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கும், விஜய் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின்போது, தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா,  நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கிரிஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்குகிறது. ஆதரவையும் தாண்டி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் நாங்கள் அங்கம் வகிப்பதுடன், அரசின் செயல்பாடுகளிலும் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளோம் என்றாா் அவா்.

முடிவுக்கு வந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது என காங்கிரஸ் முடிவு செய்ததையடுத்து, திமுக- காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பிறகு, 2004 மக்களவைத் தோ்தல் முதல் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருந்து வந்தது. 2006, 2011 பேரவைத் தோ்தல்கள், 2009 மக்களவைத் தோ்தலில் நீடித்தது.

பின்னா், 2014 மக்களவைத் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது. அதன் பின்னா் மீண்டும் கைகோத்த இக் கூட்டணி, 2016, 2021, 2026 பேரவைத் தோ்தல்கள், 2019, 2024 மக்களவைத் தோ்தல்களை இணைந்து சந்தித்தது.

நடந்து முடிந்த பேரவைத் தோ்தல் கூட்டணிப் பேச்சுவாா்த்தை தொடங்கியதில் இருந்தே, திமுக-காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும், இணைந்து தோ்தலைச் சந்தித்த நிலையில், தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டது.

Summary

TVK congress Alliance Confirmed: Congress Functionaries Meet with Vijay in panaiyur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.