மேற்கு வங்க தேர்தல் 2026: பிளவுபட்ட எதிரணி! தீதியா, மோடியா?
ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வியூகம் வகுத்துவரும் வேளையில், வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டு பாஜகவைப் பற்றி...
மோடியும் தீதி மமதாவும்...
படம்: ஜெமினி.
மோடியும் தீதி மமதாவும்...
படம்: ஜெமினி.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் தேதி (ஏப்.23, 29) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வியூகம் வகுத்துவரும் வேளையில், ஆளும் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக உள்ளதோ, அங்கெல்லாம் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது பாஜக.
களத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் இருந்தாலும் இது திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான நேரடி போட்டிக்களம் என்றுதான் சொல்ல வேண்டும். திரிணமூல் காங்கிரஸின் மிக முக்கிய பலமே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் கம்பீரமான ஆளுமைதான்.
சாமானியர்களை ஈர்க்கும் அவரது தலைமைத்துவம், போர்க்குண பாணி போன்றவை மேற்கு வங்க அரசியல் களத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவரது கட்சிக்கு மற்றொரு பலம், மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ள வாக்குச்சாவடி நிலையிலான விசுவாசமான தொண்டர்கள் கட்டமைப்பு.
பலவீனம்: கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை மாநிலத்தில் பரவலாகக் காணப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகப் பிரச்னைகள் குறித்த அதிருப்தி, ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட அரசுப் பணி நியமன விதிமீறல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கட்சியின் கீழ்நிலைத் தலைவர்கள் மீதான அதிருப்தி பல மாவட்டங்களில் காணப்படுகின்றன.
வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை, குறிப்பாக தனது வாக்காளர் பலமாக கருதப்படும் சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த உண்மையான வாக்காளர்களை விலக்கி வைக்க வழிவகுக்கும் என்பது திரிணமூல் காங்கிரஸின் அச்சமாகும்.
வாய்ப்புகள்: திரிணமூல் காங்கிரஸுக்கு அதன் ஆதரவுத் தளங்களைத் திரட்டுவதற்கான ஓர் அரசியல் வாய்ப்பை எஸ்ஐஆர் சர்ச்சை வழங்கியுள்ளது. வாக்காளர் உரிமைகளின் பாதுகாவலராகத் தன்னை முன்னிறுத்துவதன்மூலம் வாக்குரிமை பறிக்கப்படுமோ என அஞ்சும் சமூகங்களிடையே ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு பெருகும் சூழல் நிலவுகிறது.
திரிணமூல் அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்கள் களத்தில் சாமானியர்களிடையே வலுவான உணர்வுபூர்வமான மற்றும் பொருளாதார ரீதியிலான தொடர்பை உருவாக்கியுள்ளன.
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருப்பது, திரிணமூல் காங்கிரஸுக்கு சாதகமாகும். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள், போட்டிக் கட்சிகளிடையே பிரிந்தால், பல தொகுதிகளில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாகும் என்பது கள எதார்த்தம்.

அச்சுறுத்தல்: இந்தத் தேர்தலில் எஸ்ஐஆர் நடவடிக்கை, ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்துடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழல் வழக்குகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும் விசாரணைகளாலும் ஆளும் கட்சித் தலைவர்களுக்கு எதிரான தாக்கம் களத்தில் உருவாகி வருகிறது. இது தேர்தல் போக்கை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாஜக செல்வாக்கு: 2001 பேரவைத் தேர்தலில் வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, 2016-இல் 291 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, தற்போது வாக்காளர்களிடையே 39 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிறது. அத்துடன் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 65-க்கும் அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பாஜக கொண்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மக்களிடையே தனது செல்வாக்கை பாஜக வளர்த்துள்ளது. மேலும், சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்னைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பரப்புரைக்கு பாஜக பயன்படுத்தி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் - தேசிய மக்கள்தொகைப் பதிவேடு போன்ற பிரச்னைகளையும், ஆக்ரோஷமான ஹிந்துத்துவ சொல்லாடல்களை ஊக்குவிக்கும் "வட இந்தியா மாடலை' பாஜக அதிகளவில் சார்ந்திருப்பதும் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை கணிசமாகப் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி போன்றோர் கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தபோதிலும், மம்தா பானர்ஜியின் செல்வாக்குக்கும் மக்கள் வசீகர கவர்ச்சிக்கும் ஈடுகொடுக்கக் கூடிய தலைவரை இன்னும் பாஜக மாநிலத்தில் வளர்த்தெடுக்கவில்லை என்பதே கள எதார்த்தம்.
காங்கிரஸ் வியூகம்: மேற்கு வங்கத்தில் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய தனது அரசியல் முக்கியத்துவத்தை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), பிற இடதுசாரி முன்னணி கூட்டணிக் கட்சிகள் தங்களின் நீண்டகால தேர்தல் உடன்பாட்டை முறித்துக்கொண்டு, தனித்தனியே களம் காண்பது ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கே சாதகம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் பார்வை.
"தனித்துப் போட்டியிடுவது கட்சிக்குப் புத்துயிரூட்டும். மாவட்டங்கள் முழுவதும் உள்ள வாக்காளர்களுடன் மீண்டும் இணைய உதவும்' என்கிறார் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார்.
இடதுசாரி சவால்கள்: மேற்கு வங்கம் முழுவதும் 20 நாள்களுக்கு நடைபெற்ற "பாங்லா பச்சாவோ யாத்ரா'வின்போது (வங்காளத்தைக் காப்போம் நடைப்பயணம்) கிடைத்த "சிறப்பான வரவேற்பைக்' கண்டு உற்சாகமடைந்துள்ள இடதுசாரி கட்சிகள், ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளையும், மாநிலத்தில் நிலவும் மதரீதியிலான பிளவுகளையும் மையப்படுத்தித் தனது பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, ஊழல் மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் போராட்டங்களை முன்னின்று நடத்தி மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி 2011-ஆம் ஆண்டில் 39 சதவீத வாக்குகளைப் பெற்றது; இதில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தனியாக 30 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், பத்தாண்டுக்குப் பிறகு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணியின் வாக்கு சதவீதம் வெறும் 4.73 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தல், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் இடதுசாரி முன்னணி ஓர் இடத்தைக்கூட கைப்பற்றவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் இடதுசாரி முன்னணி காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு செய்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், இம்முறை தனித்தே களம் காண்கிறது. இந்த முடிவு காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் உரிய பலனைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...