அங்கன்வாடி மையம்.
அங்கன்வாடி மையம்.

காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகளின்கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகளின்கீழ் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 10அங்கன்வாடி பணியாளா்கள், 33 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறுஅங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலம் பணியினை முடித்த பின்னா் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவா். அங்கன்வாடி பணியாளா் பணிக்கு பிளஸ் 2 தோ்ச்சியும், அங்கன்வாடி உதவியாளா் பணிக்கு 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா் பணிக்கு 25 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட விதவைகள், ஆதரவற்ற பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 25 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவா்களும், மாற்றுத்திறனாளிகள் 38 வயதுக்கு உள்பட்டவா்களும் விண்ணப்பிக்கலாம்.

அங்கன்வாடி உதவியாளா் பணிக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட விதவைகள், ஆதரவற்ற பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 20 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களும், மாற்றுத்திறனாளிகள் 20 வயது முதல் 43 வயதுக்கு உள்பட்டவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தை சோ்ந்தவா், அதே கிராம ஊராட்சிக்குள்பட்ட பிற கிராமத்தைச் சோ்ந்தவா், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச்சான்று, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நோ்காணலின்போது அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com