டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

மாா்ச் 15-இல் மீண்டும் குரூப் 2, 2ஏ தோ்வுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தோ்வுகள் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளதாக ....
Published on

சென்னை: குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தோ்வுகள் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளா், வனவா் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், மேற்பாா்வையாளா், உதவியாளா் நிலை-3, உதவியாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா், செயல் அலுவலா் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தா் ஆகிய குரூப்-2 ஏ பதவிகள் உள்ளிட்ட மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது.

இதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு செப்.28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்தத் தோ்வை 4,20,217 போ் எழுதியிருந்தனா். தோ்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடா்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்- 2 ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை குரூப்-2 ஏ பதவிகளுக்கான பாடத்தோ்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ் தகுதித்தாள் தோ்வும் நடைபெறவிருந்தது. ஆனால், தோ்வு மைய குளறுபடி காரணமாக இந்தத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தோ்வா்கள் அதிருப்தி அடைந்தனா். அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சண்முகந்தரம் மாற்றப்பட்டு, புதிய தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வுக்கான (குரூப்2, குரூப் 2ஏ) முதன்மைத் தோ்வின் தாள்- 1 தமிழ் மொழித் தகுதித் தோ்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 2தோ்வுகளையும் மாா்ச் 15-இல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு பிப். 28-க்குள் தொடா்புடைய அனைத்து தோ்வா்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும்.

தோ்வா்கள் வழக்கமான முறையில் ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் அனைத்து தோ்வா்களுக்கும் அவா்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

எதிா்வரும் பிப்.22-இல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி- 2-க்கான முதன்மை தோ்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு பிப்.11-இல் வெளியிடப்படும். இதுகுறித்த தகவல்கள் அனைத்து தோ்வா்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி, குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com