கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு

வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நரேந்திர மோடி அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய துணை ராணுவப் படைகளில் இரண்டு லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்



புது தில்லி: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நரேந்திர மோடி அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய துணை ராணுவப் படைகளில் இரண்டு லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2017-2021) மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) அதிகபட்சமாக 1,13,208 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) பிரிவில் 29,243 பேரும், எல்லை பாதுகாப்புப் படையில்(பிஎஸ்எஃப்) 17,482 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில்(சிஐஎஸ்எஃப்) 12,482 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பிரிவில் 5,965 பேரும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவில்(ஏஆர்எஃப்) 5,938 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் ஜூலை வரை ஆறு மத்தியப் படைகளில் 10,377 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், சிஆர்பிஎஃப் 6,509 பேரும், எஸ்எஸ்பி 1,945 பேரும் பிஎஸ்எஃப் 1,625 பேரும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் 229 பேரும், சிஐஎஸ்எஃப் 69 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. 

வரும் 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கும் பணி ஆணைகளை வழங்குவதற்கதான திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிதாக நியமனம் பெற்ற 75,000 பேருக்கு ஏற்கனவே பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜூலை 31, 2022 நிலவரப்படி, ஆறு மத்திய ஆயுதக் காவல் படைகளில் 84,659 காலியிடங்கள் உள்ளன.

சிஆர்பிஎஃப்-இல் 27,510 பணியிடங்களும், பிஎஸ்எஃப்-இல் 23,435 இடங்களும், சிஐஎஸ்எஃப்-இல் 11,765 இடங்களும், எஸ்எஸ்பியில் 11,143 இடங்களும், அஸ்ஸாம் ரைபிள்ஸில் 6,044 இடங்களும், ஐடிபிபியில் 4.762 இடங்களும் காலியாக உள்ளன.

இருப்பினும்,  அதிக அளவிலான இளைஞர்கள் மத்திய துணை ராணுவப் படைகளுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்படை பிரிவுகளில் கடந்த ஜூலை மாதம் நிலவரப்படி, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இவை வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிரப்பப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மத்திய ஆயுத போலீஸ் படைகளின் மொத்த பலம் சுமார் 10 லட்சம்.

பிஎஸ்எஃப் நாட்டின் பாகிஸ்தானுடனான 3,323-கிமீ நீள எல்லையையும் (740 கிமீ நீளமான கட்டுப்பாட்டுக் கோடு தவிர) மற்றும் வங்கதேசத்துடனான 4,096-கிமீ நீள எல்லையையும் பாதுகாக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிஆர்பிஎஃப் பயன்படுத்தப்படுகிறது.

அணுமின் நிலையங்கள், முக்கிய தொழில்கள், மெட்ரோ நெட்வொர்க்குகள் மற்றும் பிற முக்கிய அரசு கட்டடங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களை சிஐஎஸ்எஃ பாதுகாக்கிறது.

3,488 கிமீ நீளமுள்ள சீன-இந்திய எல்லையை ஐடிபிபி பாதுகாக்கிறது. நேபாளம் (1,751 கிமீ) மற்றும் பூட்டான் (699 கிமீ) ஆகியவற்றுடன் இந்தியாவின் எல்லைகளை எஸ்எஸ்பி பாதுகாக்கிறது.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1,643 கி.மீ நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லையை பாதுகாத்து, வடகிழக்கில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com