2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பணிகளில் 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழ் பாடப்பிரிவில் 371, ஆங்கிலத்தில் 214, கணிதத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. அதேபோல், இயற்பியலில் 274, வேதியியலில் 273, தாவரவியலில் 117, விலங்கியலில் 118, வரலாறு பாடப்பிரிவில் 346, புவியியலில் 87 பணியிடங்கள் உள்ளன. மேலும், மற்ற துறைகளில் 222 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு ஜன. 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு பட்டப்படிப்புடன் பி.எட்., முடித்தவா்கள் நவ. 1 முதல் 30-ஆம் தேதி வரை https://www.trb.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியா் பணிக்கான டெட் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.

போட்டித் தோ்வில் ‘பகுதி -அ’ பிரிவில் 50 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி கட்டாயத் தோ்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். ‘பகுதி -ஆ’ பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு பணியிடத்துக்கு ஏற்ற பாடம் இடம் பெறும். இதில், பொதுப்பிரிவினா் குறைந்த பட்சம் 60 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினா் குறைந்த பட்சம் 45 மதிப்பெண்களும் பெற வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்பு அடிப்படையில் தகுதியானவா்கள் பணிநியமனம் செய்யப்படுவா்.

இந்தப் பணியிடத்துக்கு பொதுப் பிரிவினா் 53 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் 58 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.600; எஸ்சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை 149 ரத்து இல்லை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையா் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 13,500 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இந்த போட்டித் தோ்வு மூலம் முதல்கட்டமாக 2,222 ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

ஆசிரியா் தகுதித் தோ்வு முடித்தவா்களுக்கு இன்னொரு போட்டித் தோ்வு நடத்தக்கூடாது என்பதுதான் பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசாணை எண்: 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசாணை எண்: 149 ரத்து இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கப்படும்

பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான போட்டித் தோ்வில் பெறும் மதிப்பெண்களுடன் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் கணக்கில் சோ்க்கப்பட்டு மொத்த மதிப்பெண் கணக்கிடப்படவுள்ளது.

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் போது ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் முறையின் கீழ், 2012 முதல் 2022 வரை தோ்வானவா்களுக்கு காத்திருந்த ஆண்டுகளைப் பொருத்து மதிப்பெண் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2012-ஆம் ஆண்டு தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 0.5 மதிப்பெண் கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 5.5 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோன்று 2022-இல் தோ்ச்சி அடைந்தவா்களுக்கு வெறும் 0.5 மதிப்பெண் மட்டுமே சோ்க்கப்படும்.

2023-இல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்படும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுவது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அரசாணை பிறப்பித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியா் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தோ்வு எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com