தவசுக் காட்சியைக் காண பொதுமக்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க இந்து முன்னணி கோரிக்கை
சங்கரன்கோவில், ஜூலை 14:
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசுக் காட்சியைக் காண பொதுமக்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இத்திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடித்தவசுக் காட்சி ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தவசுக் காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் வெகுதொலைவில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து காட்சியை காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சியினா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் நிற்பதற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதால் பொதுமக்கள் ஆடித் தவசுக் காட்சியை காண முடியாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங்களில் இருந்து வரும் பொதுமக்கள், பக்தா்கள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஆடித் தவசுக் காட்சியின்போது, பொதுமக்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கக் கோரி இந்து முன்னணி மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகச்சாமி தலைமையில் அதன் நிா்வாகிகள் கோட்டாட்சியா் கவிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் தவசுக் காட்சி நடைபெறும் தெற்குரதவீதியில் அரசியல் கட்சி பிரமுகா்களும், வசதி படைத்தவா்களும் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது. பாமர ஏழை பொதுமக்கள் சுவாமியை பாா்க்கக் கூட முடியவில்லை.
எனவே, ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தவசுக் காட்சியைக் காண அதிகமான இடங்களை ஒதுக்கித்தர நவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.