25.11.1976: வங்கக் கடலில் புயல் தீவிரமாகிறது - கடலூர் அருகே கரையைக் கடக்கலாம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

24.11.1976 - Dinamani
சென்னை, நவ. 24 - வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் விளைவாக சகஜ வாழ்க்கை நிலை பாதிக்கக்கூடுமென்றும் எனவே முன் எச்சரிக்கையோடு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கலெக்டர் மற்றும் மாவட்டக் கலெக்டர்கள், போலீஸ் சூப்ரென்டென்டுகள், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தமிழக அரசின் பிரதம காரியதரிசி முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 36 மணிநேரத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக்கூடுமென்றும் இம்மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என்றும் இந்தப் புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கடலூர் அருகில் கரை கடக்கலாம் என்றும் வாநிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயற் சின்னம் புயலாக தீவிரமடைந்து இன்றுமாலை கடலூருக்கு தென்கிழக்கில் 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது மேற்கு-வட மேற்கு திசையாக நகர்ந்து வியாழக்கிழமையன்று கடலூர் அருகே கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, தஞ்சாவூர், தென்னாற்காடு, புதுக்கோட்டை, ஆந்திராவில் நெல்லூர், ஆகிய கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இதே காலத்தில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்.
செங்கல்பட்டு, தென்னாற்காடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை முற்பகல் வரை மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும் போது கடலில் அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு எழும்பி தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கக்கூடும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்யும். சென்னை, கீழக்கரை துறைமுகங்களில் நெ 3 புயல் எச்சரிக்கை கொடி உயர்த்தப்பட்டுள்ளது. நாகையிலும், பாம்பனிலும் நெ 6 புயல் எச்சரிக்கை கொடிகளும், கடலூர் புதுவையில் நெ 5 புயல் எச்சரிக்கை கொடிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ...
3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் மத்ய ஊழியர்கட்கு பல சலுகைகள் கிடைக்காது
புதுடில்லி, நவ. 24 - தேசிய ஜனத்தொகைக் கட்டுப்பாடு கொள்கைக்கு இணங்க, சிறு குடும்ப திட்டத்தை மத்திய அரசாங்க ஊழியர்கள் பின்புற்றச் செய்ய, அவர்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளனர்.
1977 செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு, அனுமதிக்கப்பட்ட அளவான மூன்று குழந்தைகளுக்கு மேல் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு, குழந்தைகள் கல்வி அலவன்ஸ், ரஜா கால பிரயாணச் சலுகை, அரசாங்க இடவசதி, வீடு அல்லது பிரயான முன்பணங்கள் கிடைக்காது.
இந்தப் புதிய விதிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று உத்யோகபூர்வ பத்திரிகைக் குறிப்பு கூறுகிறது.
1977 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா அல்லது பிறந்த குழந்தை நான்காவது குழந்தையாக இருந்தால் அரசாங்கப் பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு கிடைக்காது. இதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை விஷயத்திலும் இந்த விதி பொருந்தும். எனினும் மற்ற விதமான ரஜாக்கள் கிடைக்கும்.
இப்போது ஊழியர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், குழந்தைகள் கல்வி அலவன்ஸ் வழங்கப்படுகிறது. இனி அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு பிறக்கும் நான்காவது குழந்தை விஷயத்திலும் அதன்பிறகு பிறக்கும் குழந்தைக்கும் இந்த அலவன்ஸ் கிடைக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கோ அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் எந்த இடத்துக்குமோ ரஜாவில் பிரயாணம் செய்வதற்கு அளிக்கப்படும் பிரயாணச் சலுகை விஷயத்திலும், உத்யோக மாற்றல் காரணமாக வழங்கப்படும் பிரயாண அலவன்ஸ் விஷயத்திலும் இதே விதி பொருந்தும்.
Summary
25.11.1976: Cyclone intensifies in the Bay of Bengal – likely to cross the coast near Cuddalore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


