Enable Javscript for better performance
Marshmallow test with children- Dinamani

சுடச்சுட

  உங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படி என்று தெரிய வேண்டுமா? இந்த சோதனையை செய்து பாருங்கள்!

  By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 04th November 2017 12:55 PM  |   அ+அ அ-   |    |  

  veettil-kuzhanthai-ullatha-nichayam-ithai-padiyungal-4

   

  பொதுவாக, பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்லவர்களாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டுமே நம் முடிவு செய்யும் திறன்களில் அடங்கியுள்ளது.

  இதைப் புரிந்து கொள்ளவே நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கோண்டார்கள். இது மிகப் பிரசித்தி பெற்ற "மார்ஷ்மெல்லோ டெஸ்ட்" (Marshmallow test). இந்த, ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வந்ததில், பல விஷயங்களை அறிந்துள்ளார்கள். நாம் இங்குக் குறிப்பாக, முடிவு செய்யும் விதங்களைப் பற்றி  பார்க்கலாம். 

  மார்ஷ்மெல்லோ ஆராய்ச்சி செய்தவர்கள், ஒரு அறையில், பல மார்ஷ்மெல்லோ (மிட்டாய் போன்றவை) ஒரு மேஜையின் மீது, கிண்ணத்தில் வைத்தார்கள். பிறகு, 5-7 வயதுள்ள குழந்தைகளை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி, “வேண்டுமென்றால் உடனே ஒரு மிட்டாய் எடுத்துக் கொள்ளலாம், அல்லது 15 நிமிடத்திற்குக் காத்திருந்தால், இரண்டு மிட்டாய் எடுத்துக் கொள்ளலாம்" என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளும் காத்திருக்கிறேன் என்றார்கள்.  

  காத்திருந்த நேரத்தில், சில குழந்தைகள் உடனே மிட்டாயை வாயில் போட்டு கொண்டன, ஒரு சிலர் கீழ் பக்கத்தையோ, மேல் பக்கத்தையோ நக்கிப் பார்த்தார்கள். சில குழந்தைகள் மிட்டாய் கிண்ணத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு, மிட்டாய் மேல் கவனத்தை குறைத்துக் கொண்டார்கள் . இன்னும் சிலர், பாட்டுப் பாடி, காலை ஆட்டி, தன்னை சமாதானப் படுத்தி 15 நிமிடத்தைக் கழித்தார்கள். 

  பொறுத்திருந்த குழந்தைகள், மிகத் தெளிவான சிந்தனை உள்ளவர்களாக வளர்ந்தார்கள். இவர்களின் நுண்ணறிவு எண் (IQ) சராசரியாக இருந்தும், அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள். படிப்பை முழுவதுமாக முடித்து இருந்தார்கள். உறவுமுறைகள் நன்றாக இருந்தது. எடுத்த குறிக்கோள்களை அடைந்திருந்தார்கள்.

  இவர்கள் இப்படி, செயல் பட்டதை, “காக்நிடிவ் கண்ட்ரோல்" ("Cognitive Control") “அறிந்து-புரிந்து-செய்வது" என்போம். 

  “அறிந்து-புரிந்து-செய்வது" இருந்து விட்டால், நம் குறிக்கோளை அடைய முடியும். தேவையான படி நம் உள்ளும், வெளியிலும் உள்ள வளங்களையும் பயன் படுத்தி, அதற்கு ஏற்றப் பாதையை அமைத்துக் கொள்வோம். நாம் சென்று கொண்டு இருக்கும் பாதையில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும், அப்பொழுது துவண்டு போகலாம், பதட்டப்படலாம், சந்தோஷத்தின் உச்சிக்கும் போகக்கூடும். இந்த ஒவ்வொரு தருணத்திலும் நம்மை, ஆசுவாசப் படுத்தி, சமநிலைக்குக் கொண்டு வருவதே நம் "காக்நிடிவ் கண்ட்ரோல்" ஆன அறிந்து-புரிந்து-செய்வது!

  அப்போழுது தான், நாம் கவனம் சிதறாமல், திடீர் தூண்டுதலுக்கு அடிமையாகாமல் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செயல்படுவோம். எதிர்மறை உணர்ச்சிகளான அலட்சியம், சலிப்புத்தன்மை, போன்றவற்றை எதிர்த்துப் போராடாமல் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம் (இதைத் தான் “எமோஷ்னல் இன்டெலிஜென்ஸ்” Emotional Intelligence என்பார்கள்).

  இப்படிச் செய்வதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். நம் மூளையில் முடிவு எடுக்கும் பாகங்களின் பெயர், ப்ரீ ப்ஃரான்டல் கார்டெக்ஸ் (Prefrontal cortex), வென்ட்ரல் ஸ்ட்ரையாட்டம் ( Ventral striatum). அவை நாம் முடிவுகளை எடுக்கும் விதத்தைக் கூர்ந்து கவனிக்கும். நம்மை எது அதிகமாகப் பாதிக்கிறதோ, அந்தச் செய்கைகளை அப்படியே பதிவு செய்யும். நாம் இதுபோல் சில முறை செயல் பட்டால், நம் மூளையைப் பொருத்தவரை “இப்படிப் பட்ட நிலையில், இது தான் பொருந்தும்” என்றே குறித்து வைத்து, பின்னர் அம்மாதிரி சூழ்நிலைகளில், அதேபோல் இயங்க நம்மை தயராக்கிவிடும். உதாரணத்திற்கு, வழக்கமாகப் பதட்டம், எரிச்சல் படுபவர்கள் என்றால், அடுத்த முறையும் அதே எரிச்சல், பதட்டத்தைக் காட்டுவோம். 

  இப்படி நடப்பதைப்  புரிந்து கொண்டால், முயற்சி செய்து நடத்தையை மாற்ற முடியும்! விளைவு, நம் மூளையும் தன் பதிவுகளை மாற்றி எழுதிக் கொள்ளும்! பயன்? கவனம் தவறாது. இல்லையேல், கவனம் அலை மோதும், வேலை முடியாது. நம்மால், பொறுத்து இருக்க முடியவில்லை என்றால், நம் முடிவுகளும் பரபரப்புடனும், அர்த்த மற்றதாகவும் கூட இருக்கக் கூடும். நாம் எல்லோரும் பல தடவை, கோபத்தில் செயல் பட்டு வருத்தப் பட்டிருக்கிறோம்.

  இதை மாற்றுவதற்கே, "காத்திருக்க" கற்றுக் கொண்டால், நம் எண்ணங்களைச் சிதற விடாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம். காத்திருப்பதிலும் பலன் கிடைக்கும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

  வளரும் பருவத்திலேயே இந்த காக்கும் குணத்தை வளர்த்தால் பல விதங்களில் பயன் படும். என்ன செய்கிறோமோ, அதில் மட்டும் கவனம் இருக்கும். இதனால், ஒன்று, சன்மானமும் இரண்டு! செய்வதை நன்றாகச் செய்வதால், விளைவு நன்றாகவே அமையும். விளைவுக்காக மட்டும் அல்லாமல், செய்வதைப் பிடித்து செய்வோம். இது, பாடம் படித்து கொண்டிருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே பொருந்தும்! 

  வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எதை எப்படிச் செய்வது என்பதை வழிகாட்டுவதற்காகச் சொல்லி தருவதும் தேவை. எப்படிச் செய்வது, ஏன் செய்கிறோம் என்பதை வழி வகுப்பதால் குழந்தைகளும் தடைகளை அறிவார்கள். 

  சில சமயங்களில், குழந்தைகள், நாம் சொல்வதை தவிர வேறு எதையோ செய்ய ஆசைப் பட்டால், அமைதியாக அவர்களுடன் சேர்ந்து, கலந்துரையாடலாம். அவர்களாக யோசிக்க, இதிலிருந்து  "எது நல்லது” என்று தேர்வு செய்யக் கற்றுக்கொள்வார்கள். தானாக யோசித்து, நல்லதைத் தேர்வு செய்து, முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

  இப்படி இல்லாமல், அவசர அவசரமாக, முடித்துவிட வேண்டும் அல்லது சொன்னதை கேட்க வேண்டும் என்று மட்டும் இருந்தால், அதில் "அரிந்து-புரிந்து-செய்வது" பூஜ்யம்! தரமும் இருக்காது. சற்று, விளைவுகளை ஆராய்ந்து, வேறு வழிகளைக் கண்டு பிடித்து, சலசலப்பு இல்லாமல் செய்ய பழக்கப் படுத்த வேண்டும். 

  இப்படிச் செய்தால், நம் மூளை சமநிலையில் வேலை செய்ய முடியும் என்று உணர்வோம். பல முறை இப்படிச் செய்தால் நம் மூளையின் செயல் படும் விதமே மாறும். இது தான் "அறிந்து-புரிந்து-செய்யும்" காக்நிடிவ் கண்ட்ரோல்! 

  மனதில் ஒன்று  வைத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளிடம் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டு, தராமல் இருந்தால், ஏமாற்றம் அடைவதும் மனதில் பதியும்.  இதனால் அவர்கள் உறவுகளைச் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும், நம்பிக்கை முறிந்து போகும்.

  எனக்குப் பொறுத்திருக்க முடியாது. என்னால் மாற முடியாது என்று இருந்தால், சாக்குச் சொல்லிக் கொண்டும், வேலையை நாளைப் பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டு, இஷ்டப் பட்டதை செய்யத் தோன்றும். கடைசி நேரத்தில், ஏனோ-தானோ என்று வேலையை முடிப்போம். எதிலும், எப்பொழுதும் தாமதம் நிலவும். குறைகளை மட்டும் சொல்வது, நிறையக் கோபம் கொள்வது, எல்லாம் சேர்ந்து தாழ்வு மனப்பான்மை நிலவும். மார்ஷ்மெல்லோ ஆராய்ச்சியிலும், அவசரப் பட்டு மிட்டாயைத் தின்றவர்களை 40 ஆண்டுகளுக்குப் பின் பார்த்ததில், அவர்கள் இந்தக் குணாதிசயங்களுடன் காணப்பட்டார்கள். இவர்களில் பல பேர் போதைக்கு அடிமையானார்கள், உடல் பருமனாக இருந்தார்கள். 

  இதனுடன் இன்னும் ஒன்றைச் சேர்க்கலாம். நாம் நம் சிந்தனை திறன்களை வலுப் படுத்தாமல் இருந்தால் பல விதங்களில் பாதிக்கப் படுவோம். இதன் ஒரு விளைவு தான், சமீபத்தில் தோன்றிய “புளூ வேல்” (Blue Whale) பிரச்சனை. இது ஒரு தூண்டுதல், இதில் நன்மை-தீமை ஆராயாமல், சாவி போட்ட பொம்மை போல் இயங்குவோம். நம் உடல், மனதுக்கு ஆபத்து என்பதைக் கூட யோசிக்கப் பொறுமை இல்லாதவர்களாக இருக்கிறோம். உணர்ச்சி வசப்பட்டு, தூண்டுதலுக்கு அடிமையாகுபவர்கள் எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலையில் இருப்பார்கள். இதனால் தான் இந்த “புளு வேல்” (Blue Whale) போன்ற வலையில் சிக்கி கொள்வார்கள்.

  மாற, என்ன செய்யலாம்? 
  சலசலப்பு ஏற்படும் போது, டக்கென்று வேறு சிந்தனையை புகுத்தலாம், அங்கிருந்து நகர்ந்து விலாம். சிந்தனையை ஆறு வினாடிகளில் திசைதிருப்பிக் கொள்ளலாம். கூடவே, வேலை முடித்தால் எப்படி இருக்கும் என்பது போல நற் சிந்தனைகளை நினைவூட்டிக் கொள்ளலாம்.

  முடிவு எடுக்கத் தைரியம் தேவை. தைரியத்திற்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு, “அறிந்து-புரிந்து-செய்வது” ஒரு வழியாகும், உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதால் (எமோஷ்னல் இன்டெலிஜேன்ஸ்) வலுவைச் சேர்க்கும்!

  மாலதி சுவாமிநாதன்
  மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
  malathiswami@gmail.com


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp