60 வயதை கடந்தும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான உடற்பயிற்சி!

வயதாகிவிட்டது என்று ஓய்ந்து போய் உட்காராமல் இதற்கு மேலும் உடல் கெட்டு போகாமல் மிதமுள்ள வாழ்நாளை ஆரோக்கியமாக நகர்த்த, இதோ சில எளிய உடற்பயிற்சிகள்.
60 வயதை கடந்தும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான உடற்பயிற்சி!
Published on
Updated on
2 min read

இன்றைய காலகட்டத்தில் 45 வயதைக் கடந்துவிட்டாலே எண்ணற்ற பெயர் தெரியாத நோய்கள் கூட வந்துவிடுகிறது, இதைப்பற்றி மருத்துவரிடம் கேட்டால் ‘வயது முதிர்ச்சிதான் காரணம், இன்னும் சின்னப்பிள்ளை போல் ஓடி ஆடாமல் பக்குவமாக இருந்துகொள்ளுங்கள்’ என்பார்கள்.

ஆனால் உங்கள் தாத்தா பாட்டிகள் 70 வயது வரைகூட கடினமான பணிகளைக்கூட இளம் வயதினர் போல் உற்சாகமாகச் செய்திருப்பார்கள், இதற்கெல்லாம் காரணம் அறிவியல் முன்னேற்றம் நமது உடல் உழைப்பைக் குறைத்துவிட்டது. குறைந்தது அதை ஈடு கட்டுவதற்காகவாவது நாம் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்திருந்தால் இந்த உடல் என்ற இயந்திரம் இன்னும் சில ஆண்டுக் காலம்  சுறுசுறுப்பாக இயங்கியிருக்கும். பல நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருக்கும் ஒரு பொருள் எப்படி பழுதாகி பயனற்று போகிறதோ அதைப் போல்தான் நமது உடலும். 

பக்கத்துத் தெரு கடைக்குச் செல்வதற்கு கூட மோட்டார் பைக், கோவிலிற்குச் சென்றால் சிறிது நேரம் நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் பணம் கொடுத்துச் சிறப்பு தரிசனம், உடலுக்குத் தேவையான குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் கூடத் தராமல் பிற வேலைகளில் ஈடுபடுவது இவ்வாறெல்லாம் அந்த உடலைப் படாத பாடு படுத்தினால் அதுவும் என்ன செய்யும் பாவம். சரி கவலை வேண்டாம், இனிமேலும் நமக்கு வயதாகிவிட்டது என்று ஓய்ந்து போய் உட்காராமல் இதற்கு மேலும் உடல் கெட்டு போகாமல் மிதமுள்ள வாழ்நாளை ஆரோக்கியமாக நகர்த்த, இதோ சில எளிய உடற்பயிற்சிகள்.

எந்த ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கும் போகாமல் வீட்டிலிருந்தவாறே, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பல வழிகள் உள்ளது. அவற்றில் சில, 

வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்த:

நன்கு ஆழமாக மூச்சை இழுத்து, வயிற்றைச் சுருக்கியவரே ஒரு மூன்று வினாடிகளுக்கு மூச்சை நிலை நிறுத்தி பின்பு பொறுமையாக மூச்சை விடுவிக்கவும். இவ்வாறு தினமும் 10 முறை செய்ய வேண்டும்.

மார்பு மற்றும் தோள் பட்டைகளை வலிமைப்படுத்த:

சுவரை நோக்கியவாறு ஒரு மூன்று அடி தொலைவில் நிற்க வேண்டும், பின் உங்களது தோல் பட்டைக்கு நேராக இருக் கைகளையும் சுவரில் வைத்து பொறுமையாக சுவரை நோக்கு உடலைச் சாய்க்க வேண்டும். சாயும் பொழுது முதுகெலும்பு வளையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் சுவரில் கையை நன்கு அழுத்தி உங்கள் உடலைப் பின் தள்ளுங்கள். இந்தப்பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும்.

பின்புறத்துத் தசைகளை வலிமைப்படுத்த:

முச்சை உள்ளிழுத்து அதை நிலை நிறுத்தியவாறே முன்னால் குனிய வேண்டும், மூன்று வினாடிகள் அந்த நிலையில் இருந்த பின்பு பொறுமையாக நிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தப் பயிற்சியை 8 முதல் 12 முறை செய்யவும்.

கால் தசைகளை வலிமைப்படுத்த:

நாற்காலியில் அமர்ந்தவாறே, தரையில் உங்கள் கால் விரல்களை நன்கு ஊன்றியவாறே முடிந்த அளவிற்குக் குதி காலை உயர்த்தியவாறே சில நிமிடங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது கால்களில் சுத்தமான ரத்தம் பாய வழிசெய்யும். ஓய்வு எடுக்கும் நேரங்களில் ஒரு 20 முறை இவ்வாறு செய்ய வேண்டும். 

கை, கால் மணிக்கட்டினை வலிமைப்படுத்த:

இந்தப் பயிற்சியையும் நாற்காலியில் அமர்ந்தவாறே, வலது காலை தூக்கி வலப்புறமாக ஒரு ஐந்து முறை, பின் இடப்புறமாக ஒரு ஐந்து முறை சுழற்ற வேண்டும். இதே போல் இடது கால் மற்றும் இருக் கைகளுக்கும் செய்ய வேண்டும், இதன் மூலம் இணைப்பு தசைகள் வலுப்பெறும். 

கழுத்து தசைகளை வலிமைப்படுத்த:

சமமான பரப்பில் கால்களை நன்கு பதிய வைத்து, தோள்பட்டையை அகலமாக விரித்து, இருக் கைகளையும் இருபக்கத்தில் நீட்டி, உங்கள் தலையை மெதுவாக வலதுபுறமாகத் திருப்பவும், 10 முதல் 20 விநாடி அப்படியே நிறுத்திய பிறகு இப்போது மறு திசையில் திருப்பவும். இவ்வாறு ஒரு ஐந்து முறை செய்ய வேண்டும், இது தசைகளை வலிமைப்படுத்துவதோடு, கழுத்தில் வலி ஏதேனும் இருந்தாலும் சரி செய்துவிடும்.

ஆரம்பத்தில் இந்த உடற்பயிற்சிகளைச் செய்யும்போது தேவைப்பட்டால் துணைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளவும், பின்பு இது பழக பழக மிக எளிதாக நீங்களாகவே இதைச் செய்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com