தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது?

ஒரு சிலர் தினமும் பீர் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு கிட்னி ஸ்டோன் வருவதற்கான சாத்தியக்கூறு குறைவு என்கிறார்கள். ஆனால் அது தவறான நம்பிக்கை.
தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது?

கிட்னி ஸ்டோன்கள் என்பவை சிறுநீரில் இருக்கக் கூடிய சிறு, சிறு கிரிஸ்டல் போன்ற உப்புப் படிமங்கள் ஒன்றிணைவதால் உண்டாகும் மீச்சிறு துகள்கள். இவற்றின் அளவு சிறுநீர்த்தாரை வழியே வெளியேற முடியாத அளவுக்குச் சற்றுப் பெரிதாகும் போது தான் கிட்னி ஸ்டோன் பிரச்னை ஏற்படுகிறது. 

கிட்னி ஸ்டோன் பாதிப்பு எங்கே தோன்றும்?

மனிதர்களுக்குப் பெரும்பாலும் சிறுநீரகம், சிறுநீர்த்தாரை, சிறுநீரகப்பை இந்த மூன்று இடங்களிலும் கிட்னி ஸ்டோன்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அகஸ்மாத்தாக சிலருக்கு சிறுநீர் வடிகுழாயிலும் கூட கிட்னி ஸ்டோன் தோன்ற வாய்ப்பு உண்டு.

காரணம்...

தினமும் ஆல்கஹால் அருந்தும் நபர்களுக்கு கிட்னி ஸ்டோன் பாதிப்பு மிக விரைவிலேயே வரக்கூடும். ஆல்கஹாலை அளவுக்கு மீறி அருந்துவதால் மனிதர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீரை அருந்த மறந்து விடுகிறார்கள். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு அப்படியானவர்களுக்கு கிட்னி ஸ்டோன் பாதிப்பு ஏற்படும். ஆல்கஹால் அருந்துவதால் மட்டுமல்ல, நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவும் கூட கிட்னி ஸ்டோன் வரலாம். முக்கியமாகப் பாலக்கீரை, பச்சைத் தக்காளி உள்ளிட்ட உணவுகளை அப்படியே சமைக்காமல் உண்பீர்களானால் கிட்னி ஸ்டோன் உண்டாவதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். சமைத்து உண்ணும் போது வாய்ப்புகள் குறைவு, அது மட்டுமல்ல சின்னஞ்சிறு விதைகள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதாலும் கூட கிட்னி ஸ்டோன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிட்னி ஸ்டோன் பரம்பரை நோயா?

இல்லை, இது பெரும்பாலும் நமது உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி போதாமை, உடலின் நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் வரக்கூடியது. பிறகு ஏன் இதை பரம்பரை நோயாகக் கருதுகிறார்கள்? என்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, மகன், தாத்தா அனைவருமே ஒரே விதமான உணவுப் பழக்கத்தையே பின்பற்றுவதால் மூவருக்குமே சில நேரங்களில் கிட்னி ஸ்டோன் பிரச்னை வரலாம். அதனால் இது பரம்பரை நோயாகக் கருதப்படலாம். ஆனால் அது நிஜமல்ல.

கிட்னி ஸ்டோனைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மிக முக்கியமான தீர்வுகளில் ஒன்று, உங்கள் உடல் எடைக்குத் தக்க தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். ஒருவேளை வேலைப்பளுவாலோ அல்லது மறதியாலோ நீர் அருந்த மறப்பீர்கள் எனில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நீர் அருந்த வேண்டுமென்பதை ஞாபகமூட்டும் வகையில் உங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் அலார்ம் செட் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேவையான நீர் அருந்தும் பழக்கம் இருந்தால் உடலில் சிறுநீர்க்குழாயில் கிரிஸ்டல்கள் தோன்ற வாய்ப்பே இல்லை. உண்டாகும் சிறு, சிறு கிரிஸ்டல்களைக் கூட தேவையான நீர் முற்றிலுமாக அடித்துச் சென்று சிறுநீராக வெளியேற்றி விடும்.

கிட்னி ஸ்டோன் உருவாவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பவர்கள் அதிகமாக சிறு, சிறு விதைகள் கொண்ட பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அவை ஸ்டோன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடியவை.

ஒரு வேளை உங்களுக்கு கிட்னி ஸ்டோன் இருந்தால் முதுகுப் புறத்திலிருந்து மிகக்கடுமையான வலி உருவாகி இடுப்பின் இருபக்கமும் அலையெனப் பரவி முன்புறம் பிறப்புறுப்பு வரை சுரீரென வலியுண்டாகும். இந்த வலி தாங்க முடியாத வலியாக இருப்பின் அது நிச்சயம் கிட்னி ஸ்டோனுக்கான வலி தான். கடுமையான வலியோடு வியர்த்துக்கொட்டி, கை, கால்களை இயல்பாக மடக்கி நீட்ட முடியாத அளவுக்கு தசைப்பிடிப்பும் இருந்தால் அது நிச்சயமாக கிட்னி ஸ்டோன் வலி தான். அந்நிலையில் உங்களால் இயல்பாகச் சுவாசிக்கக் கூட முடியாது. அதைத் துல்லியமாகக் கண்டறிய அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யப்படுகிறது. அதில் உங்களது உடலில் இருக்கும் கிட்னி ஸ்டோனின் அளவைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை...

கிட்னி ஸ்டோன் எளிதில் கரைக்கக் கூடிய அளவில் இருந்தால் நெஃப்ராலஜிஸ்டுகள் மிக எளிமையான மாத்திரைகள் சிலவற்றைப் பரிந்துரைப்பார்கள். கரைக்க முடியாத அளவுக்குப் பெரிய கிட்னி ஸ்டோன் என்றால் லேசர் சிகிச்சைமுறையில் எளிதில் அறுவை சிகிச்சை முறையில் கரைப்பார்கள். இந்த இரு முறைகளைத் தாண்டி ஆயூர்வேதம் கிட்னி ஸ்டோனுக்கு மிக எளிய மருத்துவ உபாயங்களை அளிக்கிறது.

பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதா?

ஒரு சிலர் தினமும் பீர் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு கிட்னி ஸ்டோன் வருவதற்கான சாத்தியக்கூறு குறைவு என்கிறார்கள். ஆனால் அது தவறான நம்பிக்கை. கிட்னி ஸ்டோன் பாதிப்பு இருப்பவர்கள் குறிப்பிட்ட அளவு பார்லி நீர் அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டால் அவர்களுக்கு கிட்னி ஸ்டோன் தோன்ற வாய்ப்புகள் குறைவு என்பது ஆய்வாளர்கள் கருத்து. பீர், அடிப்படையில் பார்லி வடிநீர் எனக்கருதப்படுவதால் பீர் அருந்துபவர்களுக்கு கிட்னி ஸ்டோன் வராது எனக் கருதப்படுகிறது. ஆனால், பார்லியில் இருந்து பீர் தயாரிக்கப் படுவது பழைய முறை. இன்று பார்லி தவிர மேலும் பல்வேறு விதமான மூலப்பொருட்களில் இருந்தெல்லாம் கூட பீர் தயாரிக்கப்படுகிறது. எனவே பீர் அருந்தினால் கிட்னி ஸ்ட்டொன் வராது என்று நினைப்பதெல்லாம் மூடநம்பிக்கை. பீருக்க்ப் பதிலாக நேரடியாக பார்லி நீரை அருந்தினால் நிச்சயம் ஸ்டோன் அபாயத்தில் இருந்து தப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com