மாதவிடாயின்போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்! இன்று உலக மாதவிடாய் தினம் மே 28!

கால்சியம் : அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால்


மாதவிடாய் என்பது பெண்களின் வழக்கமான உடல் செயல்பாடு என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்தியாவில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு 2014 -ஆம் ஆண்டின் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 42சதவித பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்துள்ள தகவல். அதோடு மாதவிடாய் காலங்களில் உடலை எந்தளவுக்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மாதவிடாய் காலங்களில் சரியான முறையில் பராமரிக்கவில்லையென்றால் நோய் தாக்கம் ஏற்படும், மற்றும் இதனால் குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியாமல் உள்ளனர். பெண்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல, வறுமையில் உழலும் ஆப்பிரிக்கா நாடுகளிலும், பணக்கார நாடான அமெரிக்காவிலும் மாதவிடாயால் பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி செல்பவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

மாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்பரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். கடந்த 2015 -ஆம் ஆண்டு வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்பரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11சதவிகிதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியர்களுக்குத் தண்ணீர் மற்றும் துப்பரவு வசதி 47சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் கூட அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்கிறது ஆனால் நம் தமிழகத்தில் இது போன்று பல இன்னல்கள் குறைவுதான் என்று சொல்லலாம். மக்களிடம் இது போன்று மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெர்மனியைச் சேர்ந்த வாஸ் என்கிற தனியார் சேவை நிறுவனம் தான் மே 28- ஆம் தேதியை உலக மாதவிடாய் சுகாதார நாளாக பல நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளின் ஆதரவோடு இந்த நாளை உருவாக்கி அறிவித்தது. அந்தத்தினத்தில் பல பேரணி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகம், கட்டுரைப்போட்டிகளை நடத்தி வருகிறது.
 

 மாதவிடாயின்போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்!

கால்சியம் : அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

வைட்டமின்: வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, "ப்ரி மென்ஸýரல் சின்ட்ரோம்'ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக, மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

தண்ணீர்: பலர் பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து, அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், அந்த நாட்களில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் பருகலாம்.

சாக்லெட்: நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம். இதற்கு, டார்க் சாக்லெட்டுகளைச் சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம் குறைய சாக்லேட் சாப்பிடலாம்.

கொழுப்பு உணவுகள் வேண்டாம்: அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக உதிரப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஃபைபர் : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடாமல் இருப்பதால் உடல் சோர்வு, பலகீனமாகும். அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகோடா, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள மிக எளிதாக உணருவீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com