வாய் துர்நாற்றத்துக்கு இதுதான் காரணம்

எனக்கு வயது 85. பல்வரிசைகள் மேலும் கீழும் நன்றாக உள்ளன. கடைவாய் பற்கள்  இடது புறம் 2 மட்டும் உள்ளன.
வாய் துர்நாற்றத்துக்கு இதுதான் காரணம்


எனக்கு வயது 85. பல்வரிசைகள் மேலும் கீழும் நன்றாக உள்ளன. கடைவாய் பற்கள்  இடது புறம் 2 மட்டும் உள்ளன.  தாடைப் பகுதியில் மேல் வரிசையில் - வலது புறம் இரண்டு பற்களில்லை.  இடதுபுறம் ஒரு பல் இல்லை. மற்ற  பற்கள் வரிசையாக நன்றாக உள்ளன. ஆனால் பற்களிலிருந்து இனிப்புச் சுவை ஊறுகிறது.  உமிழ்நீருடன் கலந்து கோழை கட்டிக் கொள்கிறது. நான் ஒரு பற்பசை போட்டு பல் தேய்க்கிறேன். எனக்கு ஆயுர்வேதப் பற்பொடியைப் பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

-பெ. முத்துவீராசாமி,  வடகரை, பெரியகுளம். 

பற்களைப் பாதுகாப்பதற்கு ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்:

காலையில் விழித்தெழுந்தவுடனும் ஒவ்வொரு வேளை உட்கொண்டதற்குப் பின்னும் பற்களை தேய்க்க வேண்டும். எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது முதலியவற்றின் குச்சிகள் பல் தேய்க்க நல்லவை. பொதுவாக கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு மிக்க பொருள்கள் பற்களுக்கு ஏற்றவை. பற்குச்சிகளைக் கொண்டு தேய்க்கும் போது நுனியை நசுக்கி மெதுவாக்கிக் கொண்ட பின்னரே தேய்க்க வேண்டும். ஈறுகள் எவ்வகையிலும் புண்படாமல் தேய்க்க வேண்டியது அவசியம். இதுவே வாக்படர் எனும் முனிவர் கொடுத்துள்ள பற்கள் சுத்தி நியமங்கள். 

முகவாய் எனப்படும் வாய் ஓர் ஊற்றுக் குழி. எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் நீர் ஊற்று அங்குள்ளது. இதை போதக கபம்- உமிழ் நீர் என்பர். கபத்தின் தன்மை நிறையப் பெற்றுள்ள இந்த உமிழ் நீர்,  எத்தனை காரம், புளிப்பு, சூடு, குளிர்ச்சி உள்ளவற்றை வாயில் போட்டுக் கொண்டாலும் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை உள்ளது. 

வாயை அடுத்து உணவு தங்குமிடமான இரைப்பையில் உள்ள பித்த திரவம் இதற்கு நேர்மாறான தன்மை - சூடும் வேக வைக்கும் தன்மையும் படைத்தது. அதன் சக்தியை அதனிடத்திலே கட்டுப்படுத்தவே வாயிலுள்ள உமிழ் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது. இது சரியான நிலையிலிருப்பதாலேயே ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. பற்கள் திடமாக உள்ளன. இந்த உமிழ் நீர் தன் வலிமையிழந்து இரைப்பையின் புளிப்பு இதில் தாக்கினால் வாய் நாற்றம், வாய் வேக்காடு, ஈறுகள் வீக்கம், ஈறுகளில் புண், நாக்குப்புண், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் முதலிய பல நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் உமிழ் நீரின் சக்தியைப் பாதுகாக்கும் எண்ணத்துடன், கசப்பும் துவர்ப்பும் உரைப்பும் மிகுந்த தாவரப் பொருள்களால் பல் துலக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கையாண்டனர். மாவிலை, வேலங்குச்சி, ஆல்விழுது முதலியவற்றைக் கொண்டு பல்துலக்கும் போது ஈறுகள் கெட்டிப்படுவதுடன் உமிழ்நீர் கோளங்களும் துப்புரவாக்கப்பட்டு வாய்ப்பகுதி மொட மொட வென்றிருக்கும் . இன் ஆர்கானிக் பொருள்களால் ஏற்படுவதை விட, ஆர்கானிக் பொருள்களால் ஏற்படும் வாய் சுத்தமானது விரும்பத்தக்கது.

உமிழ்நீரின் கபத்தன்மை   உங்களுக்கு அதிகமாகி விட்டதை இனிப்புச் சுவையும், கோழைகட்டிக் கொள்வதும் உணர்த்துகிறது. இதை மாற்றுவதற்கான ஏற்பாட்டை கசப்பு, துவர்ப்பு, உறைப்பு சுவைகளாலான பற்பொடி பசை - குச்சி ஆகியவை கொண்டு செய்து கொள்வதே நலம். இந்த மூன்று சுவையும் வாயில் பட்டவுடனேயே அதை உட்செலுத்தும் முயற்சியில் வாயின் ஒவ்வொரு பகுதியும் ஈடுபடுவதால் வாயில் அவை  அதிக நேரம் தங்குவதில்லை. கசப்பும் துவர்ப்பும் பற்களில் தங்கினாலும் அவை கிருமிகளை வளர விடுவதில்லை. பூச்சிகளைக் கொல்பவை. புண்களை ஆற்றி ஈறுகளை இறுகச் செய்பவை. அதனால் பற்கள் வலுவடைகின்றன. காரம் சேர்ந்ததும் பற்களில் சேர்ந்துள்ள அழுக்குகள் கூட பிடிப்பு விட்டுக் கரைந்து விடுகின்றன. இந்தத் தகுதிகள் கொண்டே பற்களின் பராமரிப்பில் காரம், துவர்ப்பு, கசப்பு இம்மூன்றையும் முக்கியமாகச் சேர்க்கச் சொன்னார் வாக்படர்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப்பத்திரி, இந்துப்பு, வால்மிளகு இந்த எட்டு சரக்கையும் வகைக்கு   20 கிராம் எடுத்து நன்கு இடித்து நல்ல மென்மையுள்ள சூரணமாக்கி பற்பொடியாக உபயோகித்து வர பற்கள் கெட்டியாகிவிடும். வாய் சுத்தமாக இருக்கும். நடுவிரலையும் மோதிர விரலையும் கொண்டு பல் தேய்ப்பது நலம். பல் தேய்க்க உதவக் கூடிய குச்சிகளாகிய ஆலம் விழுது, வேப்பங்குச்சி, வேலம்குச்சி, அத்திக்குச்சி, மாங்குச்சி, நாவல்குச்சி, நாயுருவிக்குச்சி ஆகியவற்றில் ஒன்றை 9 - 10 அங்குல நீளமாக வெட்டிக் கொண்டு, நுனியைப் பற்களால் கடித்துப் பஞ்சுபோல மெதுவானதாக ஆக்கிக் கொண்டு மேற் குறிப்பிட்ட பற்பொடியில் தோய்த்துத் தேய்க்க பலன் மேலும் அதிகம். தயாரித்து விற்பனையிலுள்ள 'தசனகாந்தி' எனும் ஆயுர்வேத பற்பொடியையும் நீங்கள் பயன்படுத்தி நன்மை பெறலாம்.

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com