தற்கொலை ஒரு தீர்வல்ல!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை ஒரு தீர்வல்ல!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஒரு உயிர் தற்கொலையால் பிரிகிறது. தற்கொலைக்கான முயற்சிகள்  இதை விட இருபத்தி ஐந்து மடங்கு அதிகமாக நடைபெறுகின்றன. இளம் வயதில் தற்கொலை இந்தியாவில்தான் மிக அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தற்போது பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததென்று இரு பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஊடகங்கள் வாயிலாக வெளி வந்தது இரண்டு,  இன்னும் வெளிவராத தற்கொலைகள் எத்தனையோ!

பெற்றோர்களின் தவறு: 

தேர்வு எழுதி முடித்ததுமே தற்கொலை செய்து கொள்வது தோல்வி குறித்த பயத்தால்தான். முடிவு வரும் வரை காத்திருக்கக் கூட இப்பிள்ளைகளுக்கு தைரியமில்லை. இதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் எதிர்பார்ப்பு. தேர்ச்சி பெறவே சிரமப்படும் பிள்ளையை பிறரோடு ஒப்பிட்டு 'அவர்களைப் போல மார்க் எடுக்கலைனா அவ்வளவுதான், 400 மார்க் எடுக்கலைனா நீ என் பிள்ளை இல்லை, எம்மூஞ்சியிலேயே முழிக்காதே; பெயிலானா கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன்; பெயிலான வேலைக்கு அனுப்பிடுவேன் என்ற ரீதியில் அச்சுறுத்துவது பிள்ளைகளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும். சரி, கேள்வித்தாள் கடினம் அவ்வளவுதானே; எவ்வளவு மார்க் வருதோ வரட்டும் என்றோ, தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை ஜூலையில் அரியர் எழுதிக்கலாம், கவலைப்படாம அடுத்த தேர்வுக்குப் படி என்றோ பெற்றோர் இப்பிள்ளைகளைத் தேற்றியிருந்தால் நிச்சயம் தற்கொலை முடிவைத் தேடியிருக்க மாட்டார்கள் .

குழந்தைகள் எந்த விதத்திலும் சிறு துன்பமும் படக் கூடாது என நினைக்கும் பெற்றோர்கள், வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் ஏமாற்றங்களையும், துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு  சமாளிக்கும் பக்குவத்தை  பிள்ளைகளுக்கு தரத் தவறி விடுகின்றனர்.

பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் தன் நேரத்தை அவர்களுக்கு தரத் தவறுவதால் சமூக வலைத்தளம் எனும் மாய உலகில் சிக்கி சீரழியும் இளையோர் இன்று ஏராளம். இவர்கள் நிழல் உறவுகளை நிஜமென்று நம்பி நம்பிக்கை நாசமாகும் போது அதை ஏற்க இயலாமல் துன்பத்தில் துவண்டு தற்கொலை முடிவுக்கு தள்ளபடுகின்றனர்.

காரணங்கள்:

தான் நினைத்தது நடக்காத ஏமாற்றம், உறவுகளை பிரிதல்,கடன்,நோய்,தோல்விபயம்,காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாமை என பல காரணங்கள் தற்கொலைக்கு தூண்டுகின்றன.குடும்பத்தில் தற்கொலை பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாக தற்கொலை எண்ணங்கள் மேலோங்குவது உண்டு.

இவர்களுமா? 

சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என நம்பப்பட்ட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், பல இதய நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் குரியன், பல மாணவர்களின் ஐ.ஏ.எஸ்.கனவை தன் அகாடமி மூலம் நிறைவேற்றி வைத்த சங்கர் போன்றவர்களும், பல பிரபல நட்சத்திரங்களும் தற்கொலை செய்து கொண்டு உலகை அதிர்ச்சியில் உறை வைத்தார்கள்.

உலகில் மனிதராய்ப் பிறந்த பெரும்பாலானோர்க்கும் ஏதாவதொரு சூழலில் தற்கொலை எண்ணம் வந்திருக்கும்.அதிலிருந்து மீண்டு வந்து பின்னர் சாதனை படைத்தவர்களும் ஏராளம்.

முன்மாதிரிகள்:

சமீபத்தில் வெளியிடப்பட்ட NOTES OF A DREAM என்ற ஏஆர் ரகுமானின் வாழ்க்கை குறித்த நூலில் அவர் இந்த நாடு ஏ.ஆர். ரகுமான் என்ற இசையமைப்பாளரின் திறமையை அடையாளம் காணும் முன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நான் தோல்வியைச் சந்தித்துள்ளேன்; ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன் இந்தக் கடினமான நாட்கள்தான் எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையை உருவாக்கியது.


என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன் என் தந்தையின் இழப்பு எனக்குள் வெறுமையை விதைத்து தற்கொலை எண்ணத்தை தூண்டியது. ஆனால் பிறகு அதுவேதான் என்னை  அச்சமற்றவனாய் மாற்றியது என்றார். போரும் அமைதியும் எழுதிய லியோ டால்ஸ்டாய், ஹாரிபாட்டர் எழுதிய ஜே.கே ரௌவ்லிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தளார்களும் மன அழுத்தத்தால் ஒரு காலகட்டத்தில் தற்கொலை எண்ணம் கொண்டிருந்தவர்களே.

தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் உளவியல் மருத்துவர் கே.ரெட்பில்டு ஜேமிசன்.

சாக வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டாலும் தன் பிரச்னைக்களுக்கு தீர்வாக எண்ணியே தற்கொலையை பலரும் நாடுகின்றனர் என்பது உளவியல் ஆய்வுகளின் முடிவு. அவ்வாறு முயல்பவர்கள் தன்னை அச்சூழலிருந்து காப்பாற்றி அரவணைக்க யாருமில்லை என்ற அழுத்தத்தில்தான் அப்படியொரு முடிவை எடுக்கிறார்கள் என்கிறார் 'உச்சியிலிருந்து தொடங்கு' என்ற தற்கொலைத் தடுப்பு வழிகாட்டு நூலை எழுதியுள்ள வெ. இறையன்பு அவர்கள். தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வது எப்படி ?

தன் வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிமுறைகளை அறிந்து வைத்தலும் அவசியம்.  வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட முக்கியமான நல்ல விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்ப்படும் சிறுசிறு சவால்களை துன்பங்களாகக் கருதாமல் அனுபவமாகக் கருதி எதிர் கொள்ளப் பழக வேண்டும். 

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் பிறர் தனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பது அவசியம்.  தனக்கு நேரடியாக தொடர்பில்லாதவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போது மறுக்காமல் உதவுதல் மனநிறைவைத் தரும். சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் போது விரக்தி மனப்பான்மையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் பெற்றோர்கள் குறைகூறுபவர்களாக மட்டுமில்லாமல், பிள்ளைகளின் திறமைகளை  ஊக்குவிப்பவர்களாகவும், பாராட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணம் கொண்டவர்களை நண்பர்களாகக் கொள்வதும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட்டு விலகி இருப்பதும் நல்லது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது துன்பத்தில் துவண்டு விடாமல் அதிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டுவர உதவும்.

ஒரு பள்ளத்தினுள் விழுந்த கழுதையை காப்பாற்ற இயலாத கிராமத்து மக்கள் அதன் சத்தத்தினை பொறுக்க முடியாமல் மண்ணை போட்டு பள்ளத்தை மூடி கழுதையைக் கொன்று விட முடிவு செய்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் மேல் விழுந்த மண்ணை உதறி விட்டு அதன் மேல் ஏறி நின்று கொண்டது கழுதை. இப்படியே மண் நிறைந்து மேடாகி பள்ளத்தை விட்டு வெளியே வந்து விட்டது.

நமக்கு வரும் துன்பங்கள் வெளியிலிருந்து வருபவை; அதைத் துயரங்களாக கருதி கொண்டு அமிழ்ந்து போகப் போகப் போகிறோமா, அல்லது தூசுபோல் கருதி அதன் மேலேறி வெளிவரப் போகிறோமா என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் பொறுத்தது. இந்த மனவலிமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது.  சந்தர்ப்ப சூழலால்  சற்றே தளர்ந்து போய் மனஅழுத்தம் மிகுந்திருக்கும் போது உடனிருப்பவர்கள் அவர்களோடு மனம்விட்டு பேசினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும். தேவைப்படுமாயின் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றால் மீதிப்பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பின்னாளில் அவர்கள் சாதனையாளர்களாக மாறலாம். எண்ணங்கள் மாறினால் வாழ்வின் வண்ணங்களும் மாறிடும்.

- பிரியசகி / ஜோசப் ஜெயராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com