புதையல் 11

ஜனநாயக பாணியுடைய ஆசிரியர், சர்வாதிகாரிகள், அதிகாரத்துவபாணி உடையவர்கள்
புதையல் 11

மாற்றம் என்பது மட்டுமே மாறாதது

(ஜனநாயக பாணியுடைய ஆசிரியர், சர்வாதிகாரிகள், அதிகாரத்துவபாணி உடையவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என அறிவொளி வகைப்படுத்திய நான்கு பிரிவில் ஓர் ஆசிரியர் எந்த பிரிவில் அடங்குவார் என எப்படித் தெரிந்து கொள்வது என்று  சந்தோஷ் கேட்டதற்கு அறிவொளி தன் பையிலிருந்த ஒரு தாளினை எடுத்து அவரிடம் தந்தார்)

அறிவொளி : சந்தோஷ், இந்தத் தாளில் உள்ள கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லைன்னு  பதில் எழுதிக்கிட்டே வந்தீங்கன்னா கடைசியிலே நீங்க எப்படிப்பட்ட ஆசிரியர்னு உங்களுக்கு தெரிஞ்சிடும்.

சந்தோஷ் : ஓ அப்படியா! குடுங்க, என்னை நானே சுய ஆய்வு பண்ண இது உதவும்.

(தாளை வாங்கிய சந்தோஷ் கேள்விகளை கவனமாகப்  படித்து பதிலளிக்க ஆரம்பித்தார்.)

  1. ஆனந்திக்கோ, அன்புவுக்கோ அறிவியல் சொல்லிக் கொடுக்க அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது, ஆனந்தியைப் பற்றியும் அன்புவைப் பற்றியும் தெரிந்திருக்க  வேண்டும்.
  2. அடிக்கடி மாணவர்களைப் புகழ்ந்தால் கெட்டுப் போவார்கள்.
  3. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.
  4. மாணவர்களுடன் நண்பர்களாகப் பழகுவது, அவர்களது பெற்றோர்களுடன் பேசுவது பள்ளியின் விதிமுறைகளுக்கு எதிரானது.
  5. படிப்பவன், படிக்காதவன் என எந்த பாகுபாடும் காட்டாமல் எல்லா மாணவர்களையும் ஒரே விதத்தில் அன்பு செய்ய வேண்டும்.
  6. நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, மேல விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்ற பழமொழி நூறு சதவிகிதம் உண்மை .
  7. பாடத்தை சீக்கிரம் நடத்தி முடித்து, நிறைய தேர்வுகள் வைத்து மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து பள்ளிக்கு நல்ல பெயர் பெற்று தருபவர் தான் சிறந்த ஆசிரியர்.
  8. சரியாக படிக்காத மாணவனை பள்ளி ஆண்டு விழா சமயத்தில் நடனம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதித்தால் பல பாட வேளைகளை தவறவிட்டு படிப்பில் இன்னும் மோசமாகிவிடுவான்.
  9. சரிவர படிக்காதவர்கள், ஒழுக்கம் தவறுபவர்களின் பெற்றோர்களை அடிக்கடி பள்ளிக்கு வரவழைத்து புகார் செய்தால் மாணவ மாணவியர் தானாகவே திருந்துவார்கள்.
  10. வீட்டுப்பாடம் முடிக்காதவர்களை வகுப்பை விட்டு வெளியே அனுப்பினால் தான் அடுத்த நாள் ஒழுங்காக முடித்து வருவார்கள்.
  11. இளைஞர்களோடு ஒத்து வாழ்வதென்றால் அவர்களைப் போன்று நடை, உடை, பாவனைகளை மாற்றுவதாகும்.
  12. அடிப்பது, திட்டுவது, வகுப்பைவிட்டு வெளியே அனுப்புவது பெற்றோர்களிடம் புகார் செய்வது பிள்ளைகளை மாற்றிவிடாது. அவர்களது நடத்தைக்கான  காரணம் அறிந்து சரி செய்ய முயல வேண்டும்.
  13. சொற்படி நடக்கத்தவர்களை தலைமை ஆசிரியரிடம் அனுப்புவது தான் முறை.
  14. பள்ளி நிர்வாகம் விரும்பியபடி  நடப்பது தான் ஆசிரியரின் தலையாக் கடமை.
  15. வாங்கும் சம்பளத்திற்கு பாடம் நடத்துவது மட்டும் தான் என் வேலை. மாணவர்களைத் திருத்த முயற்சிப்பது தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
  16. நல்ல மாணவர்கள் வகுப்பில் எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.
  17. நல்ல ஆசிரியர் தம் அறியாமையை மாணவர் மத்தியில் காட்ட மாட்டார்.
  18. நல்ல ஆசிரியர் தன் மாணவரின் பிரச்னைகளுக்கு  மாணவர் தாமே தீர்வு காண வழி வகுக்கின்றனர்.
  19. அறிவுத்திறன் குறைந்தவர்களை தேர்ச்சி சான்றிதழ் கொடுத்தாவது ஒன்பதாவது வகுப்பிலேயே வேறு பள்ளிக்கு அனுப்பி விடுவது தான் பள்ளிக்கு நல்லது.
  20. இன்றய மாணவர்கள் நாளைய சமுதாய சிற்பிகள். 
  21. வகுப்பறை என்பது பாடம் சார்ந்து மட்டுமல்லாமல் பிள்ளைகளின் பிற திறமைகளையும் வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும்.
  22. பிள்ளைகள் காட்டும் சிறுமுன்னேற்றத்திற்கும் பாராட்டுவதும் நற்செயல்கள் புரியும் போது ஊ க்குவிப்பதும் மிக அவசியம்.
  23. திறமையான ஆசிரியர் தன்னுடைய குறைபாடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர். எனவே மற்றவர் தன்னைத் திருத்தினாலும் ஏற்றுக் கொள்வார்கள்.
  24. ஒரு மாணவனுக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டு கிடைக்காவிடில் சில தவறுகளைச் செய்தாவது ஆசிரியரின் கவனத்தை கவருவான்.
  25. வகுப்பில் எல்லோருக்கும் ஒன்று போலத்தான் பாடம் நடத்தப்படுகின்றது. அதை கவனித்து உள் வாங்குவதும் கவனிக்காமல் விட்டு தேர்ச்சி பெறாமல் போவதும் மாணவனைப் பொறுத்தது. ஆசிரியர் எதுவும் செய்ய முடியாது.
  26. படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்களும், பிள்ளைகள் மேல் அக்கறையில்லாத படிப்பறிவற்ற பெற்றோர்களும் தான்  பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறையக் காரணம். ஆசிரியர்களைக் குறை கூறிப்  பிரயோசனம் இல்லை.
  27. மாணவர்களை வகுப்பில் பேச அனுமதித்தாலோ அல்லது குழுவேலைகள் செய்ய வைத்தாலோ அதிக சத்தம் ஏற்பட்டு பிற வகுப்புகள் பாதிக்கப்படும்.
  28. அரசுப் பொதுத் தேர்வுகளில் நூறு சதவிகிதம் எடுக்க எல்லா வித அணுகுமுறைகளையும் ஆசிரியர்கள்  கையாள வேண்டும்.
  29. நிர்வாகத்திற்கு எதிராகச்  செயல்படும் பிற ஆசிரியர்களைப் பற்றி நிர்வாகத்திற்குத்  தெரிவிப்பது என் கடமை.
  30. ஆசிரியர் சொல்வதை எவ்வித கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிவதே நல்ல மாணவனுக்கு அழகு.
  31. மாணவர்களை அன்பு செய்தால் மட்டும்  போதாது. தாம் அன்பு செய்யப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்.
  32. விளையாட்டு நடனம் எனப் பிறவற்றில் சிறப்பாக விளங்கும் பிள்ளைகள் சரி வர படிக்கவில்லை எனில் அதற்கு சோம்பேறித்தனமே காரணம். பிறர் முன்னிலையில் திட்டினால் பிறகு சரியாகி விடுவார்கள்.
  33. உணவு இடைவெளியில் கூட மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் படித்து தன்னை தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
  34. ஓர் ஆசிரியர் அதிகாரம் செலுத்துபவராகவோ, அடங்கிப் போகிறராகவோ இல்லாமல், தான் செய்ய நினைப்பதை மாணவரின் ஒத்துழைப்போடு  செய்து முடிப்பவராக இருக்க வேண்டும்.
  35. பாட புத்தகத்தில் உள்ளதைக் கற்பிக்கத் தெரிந்தால் போதும், நவீன அறிவியல் சாதனங்களையெல்லாம் வகுப்பறைக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.
  36. நாம் மாணவராக இருந்தபோது நம் ஆசிரியருக்கு அடிபணிந்து நடந்தது போல நம் மாணவர்களும் இருப்பது தான் ஒழுக்கத்தைப் பேணும் வழி.
  37. மாணவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று போதிப்பவரே சிறந்த ஆசிரியர்.
  38. வகுப்பறைக்கு வெளியே மாணவனின் நடத்தையைப் பற்றியெல்லாம் ஆசிரியர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
  39. கற்பிப்பதைத் தவிர பள்ளி சார்ந்த பிற வேலைகளை ஆசிரியர்கள் செய்யும்படி  யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விருப்பமுள்ளவர்கள் செய்து கொள்ளலாம்.
  40. அரசின் சட்டங்கள், ஊடகங்கள் யாவும் ஆசிரியர்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே பள்ளிக்காக, மாணவர்களுக்காக என்று எந்த காரியத்தையும் முன்னின்று செய்வது தேவையற்ற பிரச்சனைகளுக்குத்தான் வழி வகுக்கும். பிரச்சனையை என்று வந்தபின் யாரும் நமக்குத் துணைக்கு வர மாட்டார்கள்.
  41. மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை எல்லாம் ஆசிரியரும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் ஆசிரியர்கள் மாணவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்.
  42. வகுப்பறை விதிமுறைகளுக்கான விளக்கங்களை மாணவர்களுக்குக் கூறுவது அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டு பின்பற்ற உதவும்.
  43. மாணவர்கள் மீது பரிவுடன் (Empathy) நடந்துகொள்வது தாழ்வு மனப்பான்மை கொண்ட மாணவர்களை முன்னேற்ற உதவும்.  
  44. ஆசிரியர் பணிக்கு அவசியமான படிப்பு படித்த பின்புதான் வேலைக்கு வந்துள்ளேன். எனவே மேற்கொண்டு எதுவும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணியிடைப் பயிற்சிகளால் ஒரு பயனும் இல்லை. அனுபவம் மிகுந்த எனக்குத் தெரியாத எதையும் அங்கு சொல்லிக் கொடுத்துவிடப் போவதில்லை.
  45. மனிதர்கள் எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு. பிள்ளைகளின் வீட்டுப் பிரச்சனைகளை எல்லாம் விசாரித்துக் கொண்டிருப்பது ஆசிரியருக்கு அவசியமற்றது.
  46. கேள்வி கேட்பது மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டுமே அல்லாமல்  அவர்களை மட்டம் தட்டி குறை கூறுவதற்காக கேள்வி கேட்கக் கூடாது.
  47. தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வேறு எதற்கும் லாயக்கற்றவர்கள். 
  48. அறிவுரை கூறுவதை விட ஆற்றுப்படுத்தும் திறன் ஆசிரியருக்கு அவசியம்.
  49. ஆசிரியர்களும் மனிதர்களே. எப்போதும் பள்ளியை பற்றியும் மாணவர்களை பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. பல சமயங்களில் பள்ளி நேரத்திலும் பிற வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
  50. கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் ஒத்துப் போவதும் வளைந்து கொடுத்து போவதுமே ஆசிரியரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அதனால் சில நேரங்களில் மாணவரின் நலன் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. 

(எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்துவிட்டுத்  தாளை அறிவொளியிடம் நீட்டினார் சந்தோஷ் .)

சந்தோஷ் :  சார் முடிச்சிட்டேன், இதுக்கான சரியான பதிலை சொல்லுங்க சார், நான் என்னவிதமான ஆசிரியர்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.

அறிவொளி :  ஓ! அதுல சந்தேகம் இருக்கா உங்களுக்கு! நீங்க ஜனநாயக பாணி ஆசிரியராதான் இருப்பீங்க.

(சரியான விடை இருந்த ஓரு தாளை எடுத்து சந்தோஷிடம் தந்தார் அறிவொளி.)

இந்தாங்க, இந்த பேப்பர்ல இருக்கும் பதில்களைக் கொண்டு அதை நீங்க உறுதி செய்திக்கலாம். இதில் ஓவ்வொரு வகை ஆசிரியர்களுக்கான கேள்விகளின்  எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எதற்கு அதிகமான ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறீர்களோ அந்த வகை ஆசிரியர் நீங்கள்.

ஜனநாயகபாணி - 1, 5,12,18, 20, 21, 22, 23, 24, 31, 34, 37, 42, 43, 46, 48.

சர்வாதிகார பாணி - 2, 3, 8, 9, 10, 16,17, 30, 32, 35, 40, 41, 44, 47.

அதிகாரத்துவ பாணி - 4, 7,13, 14, 19, 27, 28, 29, 33, 50.

எதற்கும் அசையாதவர்கள் - 6, 11, 15, 25, 26, 36, 38, 39, 45, 49.

(தன் கணவரின் கையிலுள்ள தாளைக்  கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்தார் எழில்.)

அறிவொளி : என்ன உங்க கணவர் எந்த வகை ஆசிரியர்னு கண்டுபிடிச்சுட்டீங்களாம்மா?

எழில் : நீங்க சொன்ன மாதிரியே அவர் ஜனநாயக பாணி உடையவர் தான் சார். எங்கப்பாவுடைய மாணவராச்சே, அவரை மாதிரித்  தானே இவரும் இருப்பார்.

அறிவொளி : ஆமாம் அதுமட்டுமில்லாம தன்னுடைய மாணவர்களையும் நல்ல குடிமக்களா உருவாக்கிட்டிருக்கும் மிகச் சிறந்த ஆசிரியர் உங்க கணவர்.

(பெருமையுடன் தன் கணவரைப் பார்த்து புன்னகைத்தாள் எழில்.)

சரி நேரமாச்சு நான்  கிளம்பறேம்மா. நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம் சந்தோஷ்.

[பெயருக்கேற்றாற்போல் அறிவுடைய, அதே சமயம் அகந்தையற்ற அறிவொளி போன்ற தலைமை ஆசிரியரும், பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டே இயங்கும் சந்தோஷ் போன்ற ஆசிரியர்களும் ஓவ்வொரு பள்ளியிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதற்கு மாறாக நம் பள்ளிகளில் இப்போது இருக்கும் நிலை மாறுமா என்று நம் மனதில் ஏக்கம் பிறக்கிறதல்லவா! மாறும்...  நிச்சயம் மாறும் .மாற்றம் என்பது மட்டுமே மாறாதது.)

தொடரும்...

பிரியசகி 

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com