புதையல் 23

தன்னைப் பற்றித் தாழ்வான எண்ணம் கொண்டிருந்த கார்த்திக், முன்னேற துடிக்கும்
புதையல் 23

விசையுறு பந்தினைப் போல  

(தன்னைப் பற்றித் தாழ்வான எண்ணம் கொண்டிருந்த கார்த்திக், முன்னேற துடிக்கும் விஷ்ணு, நல்லாசிரியராய் தன்னை மேம்படுத்திக் கொள்ள விழையும் சந்தோஷ் மூவரும் அறிவொளியின் ஊக்கமூட்டும் பேச்சினைக் கேட்டும், உளவியல் பயிற்சிகளை அனுபவித்தும் உற்சாகமாகி மேலும் அவர் சொல்லப் போகிறார் என்று ஆழ்ந்து கவனித்து கொண்டிருந்தனர்.)

அறிவொளி : உடலியக்கத் திறன் அப்படின்னா என்ன? அது யாருக்கு இருக்குன்னு நினைக்குறீங்க?

கார்த்திக் : உடல் சக்தியைப் பயன்படுத்துறதைப் பத்தி தானே சார் கேக்குறீங்க. மல்யுத்தம், குத்துசண்டை மாதிரியான விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் திறன் இருக்கும் சரியா?

அறிவொளி : மேலோட்டமாப் பார்த்தா அப்படித்தான் தோணும். ஆனா உடலியக்கத் திறன் அப்படின்னா நம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம் உடல் உறுப்புகள் மூலம் உணர்ந்து, உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சூழ்நிலையை நமக்கு தக்கபடி மாற்றியமைத்துக் கொள்ளும் திறன். மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் உள்ள சரியான தொடர்பே இதற்குக்  காரணம்.

விஷ்ணு : இது எல்லோருக்குமே சரியாதானே சார் இருக்கும்?

அறிவொளி : இல்லை விஷ்ணு, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் தன்  உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாம  பெற்றோரைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கு இல்லையா? தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்க உடலின் கீழ்ப் பகுதிகளை இயக்க முடியாம தன் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து கொள்ள முடியாம மத்தவங்க உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கு. வயசான காலத்துல மூட்டுவலியால பக்கத்து அறைக்கோ, மாடிக்கோ போகணும்னு நினைச்சா கூட உடம்பு ஒத்துழைக்கிறதில்லைன்னு வருத்தப்படுறதைவிட சின்ன வயசுலிருந்தே பயிற்சிகள் மூலம் உடலுறுப்புகளை நம்மோட கட்டுப்பாட்டில் வைக்கமுடியும். இவ்வளவு ஏன் உடம்பைத் தளர்த்தும் பயிற்சிகளால் பிரசவ வலி இல்லாமலே சுகப் பிரசவத்தில் குழந்தை பெத்துக்க முடியும்னு நிரூபிச்சிருக்காங்க.

கார்த்திக் : நீங்க இதெல்லாம் சொல்லும் போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது சார். போன வாரம் விளையாடும் போது ஒரு கல்லுல பட்டுக் கால் சுண்டு விரல் நகம் பேத்துக்கிட்டு வலி உயிர் போயிடுச்சு சார். நடக்கவோ ஓடவோ சுண்டு விரல் கூட முக்கியம்னு அன்னைக்குத்தான் நான் உணர்ந்தேன் சார். வலியில வெளிய போக முடியாம டிவி முன்னாடி ஒரு நாள் முழுசும் உட்கார்ந்துக்கிட்டிருந்து வாழ்க்கையே வெறுத்துடுச்சு சார். ஒரு சில பசங்க எப்படித்தான் நாள் முழுசும் டிவி பார்த்துக்கிட்டே இருக்காங்கன்னு தெரியல.

சந்தோஷ் : ஆமா கார்த்திக் சின்ன வயசுலேர்ந்தே ஓடியாடி விளையாடாம டிவி, கம்ப்யூட்டர், செல்போன், பிளேஸ்டேஷன்னு உட்கார்ந்துக்கிட்டே இருக்கவங்க உடம்பு ரொம்ப குண்டாகி சின்ன வயசுலயே நிறைய நோய்களுக்கு ஆளாகிடுறாங்க. பேரன்ட்ஸ் தான் இதுக்கு முக்கியக் காரணம், பிள்ளைங்க பத்திரமா கண்ணு முன்னாடியே இருக்கணும்னு ஆசைப்பட்டு வெளிய விளையாடப் போக விடாம பிள்ளைங்க வாழ்க்கையையே பாழக்கிடுறாங்க. பிள்ளைங்க பத்தாவது , பன்னிரெண்டாவது வகுப்பு படிச்சா ஒரு சில பெற்றோர் அவங்களை விளையாடக் கூட விடாம எந்நேரமும் படிப்புன்னு நச்சரிப்பதும் தப்பு. உடம்பும் மனசும் புத்துணர்வு பெற விளையாட்டு ரொம்ப முக்கியம்.

சந்தோஷ் : இந்த உடல் இயக்கத்திறனை ஆசிரியர்கள் பாடம் நடத்த எப்படி பயன்படுத்தலாம் சார் ? 

அறிவொளி :  மொழிப்பெயர்ப்பு பாடம்  நடத்தும் போது வகுப்பை இரு குழுக்களா பிரிச்சுக்கோங்க. முதல் குழுவில் ஒருத்தருக்கு ஒரு பழமொழியைக் கொடுத்து, அதை அவர் வாயால் சொல்லாமல் உடல் அசைவுகளால் நடித்துக் காட்ட வேண்டும். அவர் நடிப்பதைக் கொண்டு சரியான பழமொழியையும் அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பையும் சொல்லிட்டா அவங்களுக்கு ஒரு மதிப்பெண். இப்ப உதாரணத்துக்கு கார்த்திக்குக்கு ஒரு பழமொழி கொடுக்கிறேன், இதை நடிச்சு காட்டு பார்க்கலாம்.

(ஒரு துண்டு சீட்டில் அறிவொளி எழுதிக் கொடுத்த பழமொழியைப் படித்த கார்த்திக், முறத்தை உயரத் தூக்கித் தூற்றுவது போல சைகை செய்தான்)

விஷ்ணு : நான் கண்டுபிடிச்சிட்டேன், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’. இதோட ஆங்கிலப்  பழமொழி ‘Strike the iron when it is hot’ சரியா சார்?

அறிவொளி : ரொம்ப சரி விஷ்ணு.  நீயும் ரொம்ப நல்லா ஆக்ஷன் செய்து புரிய வெச்சுட்டியே! கார்த்திக் குட். இதுமாதிரி விளையாட்டுப் போல சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்களுக்கு மொழிப்புலமையும் உண்டாகும். தான் நினைப்பதை உடல் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தும் உடலியக்கத்திறனும் அதிகரிக்கும். 

சந்தோஷ் : நான் பாடத்தில் வரும் கதை, நாடகங்களை பசங்களை நடிக்க சொல்லுவேன். அதே மாதிரி ஒரு சில பத்திரிக்கை செய்திகளை சொல்லி இந்த சூழ்நிலையில் நீங்க இருந்தா என்ன செய்வீங்கன்னு நடிச்சு காட்டச் சொல்வேன். பிள்ளைங்க ரொம்ப ஆர்வமா முன்வருவாங்க. அது அவங்க நடிப்புத் திறனை மேம்படுத்துவதோடு எந்த சூழல்ல  எப்படி நடந்துக்கணும், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் போது அதோட விளைவுகள் என்னாகும்னு யோசிக்கவும் உதவும்.

அறிவொளி : இது ரொம்ப நல்ல விஷயம் சந்தோஷ். படிப்புங்கறது வெறும் மதிப்பெண் எடுக்க இல்ல. அது வாழ்க்கைக்கான ஞானத்தை பிள்ளைங்களுக்கு குடுக்கணும். அதை உங்கள மாதிரி சில ஆசிரியர்கள்தான் சரியா செய்றாங்க.

சந்தோஷ் : எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த சீனிவாசன் என்ற வாத்தியாரை என்னால மறக்கவே முடியாது சார். கூட்டல்,கழித்தல் சொல்லிக் குடுக்கவும் பசங்களை இரு குழுவா பிரிச்சுட்டு குழு எண்ணிக்கை அதிகரிப்பது, குறைப்பது மூலமா சுலபமா சொல்லிக் கொடுத்துடுவார். வட்டம்,சதுரம், முக்கோணம், சாய்சதுரம் இது மாதிரி வடிவங்களை விளக்க தரையில் அந்த வடிவங்களை வரைஞ்சிட்டு மாணவர்களை கைகளை கோர்த்து அந்த வடிவங்கள் மேல நடக்க வைப்பார். அவர் வகுப்புக்குள்ள வந்தாலே எப்பவும் சந்தோஷமா உற்சாகமா இருக்கும்.

அறிவொளி :  சில ஆசிரியர்கள் பாடம் எடுக்கவே நேரம் பத்தலை , இதெல்லாம் எங்கே செய்ய முடியும்னுசொல்லுவாங்க. மனமிருந்தால் மார்க்கமுண்டு. மணிக்கணக்கா பேசிப் புரிய வைக்க முடியாத விஷயங்களை இது மாதிரியான விதங்களில் சுலபமா புரிய வைச்சுடலாம் என்பது இந்த ஆசிரியர்களுக்குப்  புரியனும்.

விஷ்ணு : சார் பி.டி மாஸ்டர் நேத்து பி.டி பீரியட் முடியும் போது லீவ்ல வாய்ப்பு கிடைக்குறவங்க யோகா, தியானம் கத்துக்கோங்க. உங்க மனசயும் உடம்பையும் கட்டுப்பாட்டில் வெச்சுக்கவும்  ஆரோக்கியமா வாழவும் அவை  ரொம்ப உதவும்னு சொன்னார். உடம்பு, மனசு, ஆரோக்கியம் இது மூணுத்துக்கும் என்ன தொடர்பு சார்?

அறிவொளி : நல்ல கேள்வி விஷ்ணு. இது மூணுத்துக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு உண்டு.  நம் உடலோட ஒவ்வொரு உறுப்பையும் மூளை தான் கட்டுப்படுத்துதுன்னு எல்லோருக்கும் தெரியும், அப்படின்னா உடல் ஆரோக்கியமும் மூளையின் இயக்கத்தைப் பொறுத்தது தானே. நம்ம மனசுலேர்ந்து தோன்றக்கூடிய எண்ணங்கள் மூளையின் செயல்பாடுகளையே கட்டுப்படுத்த முடியும். அப்படி கட்டளைகளைக் கொடுத்து மூளையை நமக்கு ஏற்றபடி ப்ரோக்ராம் பண்றத்துக்குப் பேர் இப்ப நியூரோ லிங்விஸ்டிக் ப்ரோக்ராம்னு சொல்றாங்க. அந்தக் காலத்துல நம்ம முன்னோர்கள் தியானம்னு சொன்னாங்க. பயிற்சி செய்யும் விதம் இரண்டுக்கும் வேறா இருக்கலாம். ஆனா பலன் ஒண்ணுதான்.

நாம எந்த வேலையை செய்தாலும் அதோடத் தொடர்புடைய உறுப்பு எப்படி வேலை செய்யுதுன்னு விழிப்புணர்வோடு கவனிக்கனும். உதாரணமா நடக்கணும்னு நினைக்கும்போதே மூளையிலிருந்து வரும் கட்டளைகள் நரம்புசெல்கள் மூலமா கால்களின் எலும்புகள், நரம்புகள், தசைகளை இயக்குவதை உணரனும். மெதுவா நடந்துக்கிட்டே பாதங்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று கவனிக்கணும். என் பாதங்கள் நன்றாக இயங்குகின்றன அப்படினு மனசுல சொல்லிக்கிட்டே, கால், மூட்டு, இடுப்பு எலும்புகள், கைகள் என ஒவ்வொரு உறுப்பும் நடக்கும் செயலோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்குன்னு கவனிக்கனும். அந்த ஒவ்வொரு உறுப்பும் நன்றாக செயல்படுகிறது என்று மனதிற்குள் கட்டளையைக் கொடுக்கணும்.

நம் உடலின் வலப்புற உறுப்புகளை இடப்புற மூளையும், இடப்புற உறுப்புகளை வலப்புற மூளையும் தான் கட்டுப்படுத்துது. செரிப்ரல் கார்டெக்ஸ் என்ற பகுதிதான் மூளையின் கட்டளையைத் தண்டுவடத்தின் வழியாக உடலின் பிறபாகங்களுக்கும், உடல்உறுப்புகள்  தெரிவிக்கும் உணர்ச்சிகளை தண்டுவடத்தின் வழியாக மூளைக்கும் அனுப்புது. அதனால இந்தப் பயிற்சியின்போது ஒவ்வொரு உறுப்பும் நன்றாக செயல்படுகிறது என நாம மனசுக்குக் கொடுக்கும் கட்டளை மூளையில் பதிவாகி, மூளை ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள இரத்த ஓட்டம்,வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவற்றை சீராக்கி உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படத் தூண்டுது.

விஷ்ணு :  கார்த்திக் கால் விரல்ல அடிபட்டு நடக்கவே முடியலைன்னு சொன்னானே, அந்த சமயத்துல இந்த மாதிரிப் பயிற்சி உதவுமா சார்?

அறிவொளி :  ஓ! நிச்சயமா முடியும் விஷ்ணு.  இப்ப நான் சொல்றதை செய்யுங்க. கண்ணை மூடி  உடலை மெதுவா தளர்த்தியபடி மூச்சுக்காற்று உள்ளே போவதையும்  வெளியே வருவதையும் கவனிங்க. மெதுவா வலது கையை உயர்த்துங்க. உயர்த்தும்போது நிகழும் ஒவ்வொரு அசைவையும் கண்களை  மூடி உற்று கவனிங்க . பிறகு  கையை இறக்கிவிடுங்க. இதே மாதிரி பத்து முறை செய்துட்டு வலது கையை உயர்த்துவது போல கற்பனை செய்யுங்க. முதலில் கையை  உயர்த்தியபோது ஏற்பட்ட அசைவுகளுக்கும் கற்பனைக்கையின் அசைவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லைனு நீங்க உணரும் வரை இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்க.

(மூவரும் சில நிமிடங்கள் தொடர்ந்து செய்து முடித்தபின் கண்களைத் திறந்தனர்.)

இப்படியே ஒவ்வோர் உறுப்புக்கும் அசைவுகளைக் கொடுத்தப்பின் கற்பனையான அசைவுகளைக் கொடுத்து பயிற்சி செய்யணும். நாம உடம்பு சரியில்லாம இருக்கும்போதோ அல்லது அடிபட்டு படுக்கையில இருக்கும்போதோ இந்தக் கற்பனையான பயிற்சி உடல் சோர்வை நீக்கி இரத்தவோட்டத்தை சீராக்கும். அதனால உடம்பு சீக்கிரம் குணமாகும்.

சந்தோஷ் :  விசையுறு பந்தினைப் போல மனம் விரும்பிய படிச்  செல்லும் உடல் வேண்டும்னு பாரதியார் கேட்டார். மருந்தில்லாம உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்க இப்படியெல்லாம் கூட வழி  இருக்குன்னு  இப்பதான் சார் தெரியுது. ரொம்ப நன்றி சார்.

அறிவொளி :  இன்னும் எவ்வளவோ இருக்கு சந்தோஷ்.

சந்தோஷ் : சொல்லுங்க சார், காத்துக்கிட்டிருக்கோம்.

(இன்னும் தெரிந்துகொள்ள நாமும் காத்திருப்போம்.)

தொடரும்...

- பிரியசகி

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com