புதையல் 33

எட்டு வித அறிவுத் திறனில் முதல் ஏழு திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளைப் பற்றி  விளக்கிய அறிவொளி
புதையல் 33

இயற்கையே சிறந்த ஆசான்!

(எட்டு வித அறிவுத் திறனில் முதல் ஏழு திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளைப் பற்றி  விளக்கிய அறிவொளி,  இறுதியான அறிவுத்திறனான இயற்கையோடு ஒன்றியிருக்கும் திறன் பற்றி சந்தோஷ், கார்த்திக், விஷ்ணு ஆகியோருக்கு விவரித்து உரைக்கலானார்.)

அறிவொளி : இறைவன் மனிதனுக்குக் கொடுத்த எட்டுவித அறிவுத்திறனில் கடைசித் திறன் இயற்கையோடு ஒன்றியிருக்கும் திறன் மற்ற ஏழு திறன்களில் ஒருவன் வல்லவனாக இருந்தாலும், தான் என்ற அகம்பாவத்தை விட்டு இயற்கையோடு ஒன்றிக்கும் போதுதான் மனிதன் முழுமையடைகிறான்.

சந்தோஷ் : ஆமா சார் இயற்கை தானே மனிதனோட முதல் தாய். தாயின் மடி எப்படி நம்மை மகிழ்விக்குதோ அதே மாதிரி இயற்கைக்கும் நம்மை மனத்துயர்களிலிருந்து விடுவிக்கும் சக்தி உண்டு. கார்த்திக், விஷ்ணு நீங்க இதை உணர்ந்திருக்கீங்களா? 

கார்த்திக் : நான் நிறைய தடவை உணர்ந்திருக்கேன் சார். தோட்டத்துல அன்னைக்குப் பூத்தப் பூவை பார்க்கும் போதும், என் நாய் குட்டி மணியோட விளையாடும் போதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். உடம்பும் மனசும் எவ்வளவு களைப்பா இருந்தாலும் பார்க்குக்குப் போய் விளையாடிட்டு வந்ததும் ரொம்ப சுறுசுறுப்பாகிடுவேன் .

அறிவொளி :  சரியா சொன்ன கார்த்திக். மனிதர்களோட உடலமைப்பு இயற்கையை ஒட்டி வாழும் விதமாவே அமைக்கப்பட்டிருக்கு. காடுகளிலும், குகைகளிலும் இயற்கையோடு ஒன்றித்திருந்த மனிதன்  நாகரிக வளர்ச்சியால செயற்கையான கான்க்ரீட் காடுகளில் வாழத் தொடங்கி உணவு பழக்க வழக்க மாற்றங்களாலும், ரசாயனப் பொருள்களின் அதிகமான பயன்பாட்டாலும் புதுப்புது நோய்களோட இன்னைக்குப் போராடிக்கிட்டிருக்கான்.

சந்தோஷ் :  உண்மைதான் சார், சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில்  ஒன்றான நற்றிணையில் 'மரஞ் சா மருந்தும் கொள்ளார்' என்று ஒரு வரி வருது. ஒரு மரத்தைக் கொன்று அதிலிருந்து கிடைக்கும் மருந்தினால் தான் தன்னால் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையிலும் கூட மரத்தைக் கொல்லத் துணியாதவரே சிறந்த மனிதர் என்று என்பது அந்த பாட்டோட பொருள். தன் உயிரை விட ஒரு மரத்தோட உயிர் முக்கியம்னு அந்த காலத்தில் நினைச்சிருக்காங்க. இன்னைக்கு நிலைமை தலை கீழாகிடுச்சு.  

உலகம் தோன்றியது முதல் இன்னைக்கு வரைக்கும் இரண்டு விதமானப் போராட்டங்களைப் பார்க்குறோம். வெய்யில், மழை, குளிர் என இயற்கையிலிருந்து தன்னைக் காப்பாத்திக்க மனிதன் போராடியது முதல் வகை. இயற்கையை விட்டு விலகிப் போய் தன் பேராசை மிகுந்த செயல்களோட விளைவுகளான ஓசோன் ஓட்டை, பசுமை இல்லா விளைவு, அமிலமழை, அணு ஆயுதம், பூமி வெப்பமயமாதல் போன்றவற்றின் பாதிப்புகளை உணர்ந்ததால் மனிதனிடமிருந்து இயற்கையைக் காப்பாற்ற மனிதனே போராடுவது இரண்டாவது வகை. இந்த இரண்டாவது போராட்டம் வெற்றி பெற்றால் தான் உலகம் தப்பிப் பிழைக்கும்.

சந்தோஷ் :  இன்னைக்கு நகரத்துல வாழும் பிள்ளைகளுக்கு இயற்கை சார்ந்த அறிவு ரொம்ப குறைவாதான் இருக்கு. போன வாரம் சென்னையிலிருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன் . அந்த வீட்டுக் குழந்தையோட பேசிக்கிட்டு இருந்தப்போ நமக்கு அரிசி எப்படி கிடைக்குதுன்னு கேட்டா மளிகை கடையிலிருந்து கிடைக்குதுன்னு சொல்றான்.

அறிவொளி :  குழந்தையைக் குறை சொல்லி பயனில்லை சந்தோஷ். நெல் விளையும் நிலத்தையே பார்த்திருக்காது அந்தக் குழந்தை. அரிசியை  மளிகைக் கடையில் மட்டுமே பார்த்திருக்குன்னா அதைத் தானே சொல்லும். அது குழந்தையோட தப்பில்லையே . அம்மா அப்பா குழந்தைகளை விடுமுறையில தாத்தா, பாட்டி, சொந்தங்கள் வாழும் கிராமங்களுக்கு கூட்டிட்டு போனா, இந்தப் பிரச்னை இருக்காது. நானும் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகளை கல்விச் சுற்றுலாவுக்கும், களப்பயணங்களுக்கும் அழைச்சிட்டுப் போக திட்டம் வச்சிருக்கேன்.

விஷ்ணு : ஜாலி ! எப்ப, எங்க சார் கூட்டிட்டுப் போவீங்க ? 

அறிவொளி :  ஒவ்வொரு வகுப்பிலயும் அவங்களுக்கு பாடத் திட்டத்துக்கு ஏற்ற மாதிரி இடங்களுக்கு கூட்டிப் போக நினைச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் சொல்றேன்.

சந்தோஷ் :  பள்ளியிலிருந்து கூட்டிட்டுப் போக கூடிய இடங்களுக்குக் பிள்ளைகளை கூட்டிட்டுப் போகலாம். நடைமுறையில் கூட்டிப் போக முடியாத இடங்களைப் பற்றி தகவல் சேகரிக்கச் சொல்லி குழு விவாதம் செய்யலாம். உதாரணமா வரலாற்றுப் பாடத்தில் கற்காலம், இரும்புக்காலம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலத்து நாகரீகம், திராவிட ஆரிய நாகரிகம் எனப் பலவித நாகரிகங்களைப் பற்றி படிக்கிறாங்க. தேர்வில் மதிப்பெண் வாங்குறதுக்காக மட்டும் இதையெல்லாம் படிக்குறதால என்னப் பிரயோசனம்?

மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு நாகரிகம் எனத் தலைப்புக் கொடுத்து அக்காலத்து மனிதர்களின் உணவு, உடை, பழக்கவழக்கம், வழிபாடு, இயற்கையோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம், சமுதாய அமைப்பு ஆகியவைப் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்வோம். பிறகு குழுத் தலைவர்களை வகுப்பில் அது பற்றி பேசச் செய்யலாம். கடைசியில் ஆசிரியர்  அக்கால  நாகரிகங்களோடு இன்றைய சமுதாயத்தை ஒப்பிட்டு குறை நிறைகளை ஆராய்ந்து இன்றைய உணவுப் பழக்கம், கலாச்சார சீரழிவு, சுற்றுச் சூழல் மாசு ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக் காட்டலாம் இதன் மூலம் மனிதன் இயற்கைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்த முடியும்.

அறிவொளி :  ரொம்ப சிறப்பா சொன்னீங்க சந்தோஷ். பிள்ளைகளை வன்முறையும் ஆபாசமும் நிறைந்த சினிமாக்களுக்கோ, நுகர்வுக் கலாச்சாரத்தை அதிகரிக்கும் ஷாப்பிங் மால்களுக்கோ, வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தீம் பார்க்குகளுக்கோ கூட்டிகிட்டுப் போவதைவிட உயிரியல் பூங்கா, வனவிலங்கு காப்பகம் போன்ற இடங்களுக்கு அழைச்சிட்டுப் போகலாம். விலங்குகளும், தாவரங்களும் எப்படி வேறுபடுகின்றன? பறவைகளுக்கும், ஊர்வன, நடப்பனவற்றிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன? அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை எப்படிப் பட்டது? என்பதையெல்லாம் புத்தகங்களில் படித்தோ, ஆசிரியர் சொல்வதைக் கேட்டோ புரிஞ்சுக்குறதை விட நேரில் பார்த்து அனுபவ பாடமா  தெரிஞ்சுக்குறது அவங்க அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

உலகத்துலேயே பயோ டைவர்சிட்டினு சொல்லக் கூடிய பல்லுயிர் மிகுந்திருக்கும் பதினெட்டு இடங்களில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றுன்னு எத்தனை பேருக்குத் தெரியும்? இதையெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை.

சந்தோஷ் :  இந்தப் பெருமையையெல்லாம் நம்மோட வருங்காலத் தலைமுறை பார்க்க முடியாதோன்னு வருத்தப்படும் அளவு இயற்கை சீரழிவு நடந்துக்கிட்டிருக்கு. நாலு கால்கள் இருக்கும் சிந்திக்கத் தெரியாத மிருகங்கள் கூட இயற்கைக்கு ஏற்றபடி தன்னை மாத்திக்குதுங்க. சிந்திக்கத் தெரிந்த, இரண்டு கைகளுடைய மனிதன், தான் கண்டுபிடிச்ச கருவிகளோட பலத்தால இயற்கையை தனக்கேத்தபடி மாத்திக்கிட்டிருக்கான்.

இயற்கை தான் சிறந்த ஆசான். இயற்கையிலிருந்து நாம் கத்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கு. உள்ளுக்குள் தகிக்கும் வெப்பமும், அழுத்தமும் எரிமலைக் குழம்பா பீறிட்டாலும் அது குளிர்ந்த பிறகு கனிமப் பாறைகளா மனிதருக்குப் பயன்படுது. சூரியனும், மழையும் பிரதிபலன் எதிர்பார்க்காத பொதுநலத்தைக் கற்றுக் கொடுக்குதுங்க. இது மாதிரி இயற்கை நமக்கு வேறென்ன கத்துக் குடுக்குதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்  தம்பிங்களா!    

கார்த்திக் :  எறும்பும், தேனீயும் சுறுசுறுப்பைக் கத்துக்குடுக்குதுங்க.

விஷ்ணு :  திரும்பத்திரும்ப முயற்சி செய்யும் கடல் அலையும், சிலந்தியும் விடா முயற்சியைக் கத்துக் குடுக்குதுங்க.

கார்த்திக் :  வெட்டுப்பட்டாலும் மறுபடியும் வளரும் பல்லியின் வால் நம்பிக்கையையும்,  தனக்குக் கிடைச்ச கொஞ்ச சாப்பாட்டையும் பகிர்ந்து சாப்பிடும் காக்கா ஒற்றுமையையும் நமக்குக்  கத்துக் குடுக்குதுங்க சார். 

விஷ்ணு :  ஒவ்வொரு மரமும் ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு வாழ இடம் குடுத்து உதவும் குணத்தை நமக்குக் கத்துக்க குடுக்குதுங்க. எப்பவும் வகுப்புக்குள்ளேயே பாடம் நடத்தாம  அப்பப்ப மரத்தடியில பாடம் நடத்துனா எங்களுக்கெல்லாம் சந்தோஷமா இருக்கும் சார்.

அறிவொளி : சரி கார்த்திக், நிச்சயமா இனி நம்ம பள்ளியில மரத்தடி வகுப்புகள் நடக்கும். சரி, இயற்கையிலிருந்து பாடம் படிக்க ஒரு பயிற்சி சொல்லிக் கொடுக்கவா?

கார்த்திக் :  ஓ! சொல்லுங்க சார் காத்திருக்கோம்.

(என்ன பயிற்சி எனத் தெரிந்து கொள்ள நாமும் காத்திருப்போமா!)

தொடரும்...

பிரியசகி 

ஓவியம் நன்றி : அஜிம் சூலஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com