எது சிறந்தது? சைவமா? அசைவமா? 

உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
எது சிறந்தது? சைவமா? அசைவமா? 
Updated on
2 min read

உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். சரியான விகிதத்தில் இயற்கை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்கு சக்தியை தருவதாக, செயல்களில் ஈடுபட உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு விழிப்புணர்வை பெறுவதற்கான அணுகுமுறைதான். நான் சொல்வது உணவுமுறை பற்றிய போதனை அல்ல. உணர்வு பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பெறுகிற வழி.

சைவ உணவினால் என்ன பயன்? அதை ஒருவரின் வாழ்வில் எளிதாக செயல்முறைப் படுத்துவது எப்படி? 

தான் எதையெல்லாம் உண்ணலாம், எதையெல்லாம் உண்ணக் கூடாது என்பதை ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும் நன்றாகவே அறியும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியமே தவிர, அந்த உணவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நியாயதர்மம் என்ன சொல்கிறது என்பதெல்லாம் அல்ல. 

‘உணவு’ என்பது உடலைப் பற்றியது. அதைப் பற்றி உங்கள் மருத்துவரோ, உணவியல் வல்லுனரோ என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை… எப்படியும் அவர்கள் அவ்வப்போது தங்கள் அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் ‘உணவு’ என்று வரும்போது, எந்த வகையான உணவு உங்கள் உடலை சுறுசுறுப்பாக, உற்சாகமாக வைக்கிறது என்பதை அதனிடமே கேளுங்கள். வெவ்வேறு உணவு வகைகளை உட்கொண்டு, அதை உண்ட பின் உடலளவில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்கள் உடல் நன்றாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாக உணர்கிறது என்றால், அது ஆனந்தமாக இருக்கிறது என்று அர்த்தம். இதுவே உங்கள் உடல் மந்தமாகி, அதற்கு புத்துணர்ச்சி ஊட்ட, காஃபியோ, டீயோ, சிகரெட்டோ தேவைப்படுகிறது என்றால் உங்கள் உடல் சந்தோஷமாக இல்லை என்றுதானே அர்த்தம்? 

உங்கள் உடலைக் கேளுங்கள் உங்கள் உடலை கவனித்தாலே, எந்த வகையான உணவு அதற்கு வேண்டுமென்று அது தெளிவாய் உணர்த்திவிடும். ஆனால் இப்போது உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நீங்கள் நடக்கிறீர்கள். அதுவோ சற்றும் சளைக்காமல் பொய் சொல்லிக் கொண்டே போகிறது. உண்மைதானே? இதற்கு முன் அது உங்களிடம் பொய் சொல்லியதில்லை? இன்று ‘இது தான் சரி’ என்கிறது. நாளையே ‘அதுவல்ல… இதுதான் சரி. அதைப் போய் உண்மை என்று நினைத்தாயே… முட்டாள்!’ என்று உங்களையே வெட்கப்பட வைக்கிறது. அதனால் மனம் சொல்வதைக் கேட்காமல், உங்கள் உடல் என்ன சொல்கிறது என்று கவனிக்கப் பழகுங்கள். 

தான் எதையெல்லாம் உண்ணலாம், எதையெல்லாம் உண்ணக் கூடாது என்பதை ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும் நன்றாகவே அறியும். ஆனால் இப்பூமியிலேயே அறிவுக்கூர்மை நிறைந்த படைப்பாகக் கருதப்படும் மனித இனத்திற்கு மட்டும், அவர்கள் எவ்வகை உணவை உண்ண வேண்டுமென்று தெரியவில்லை. எப்படி இருப்பது என்பதை விடுங்கள், என்ன உண்பது என்பதும் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. உடல் என்ன கூறுகிறது என்பதைக் கேட்பதற்கு ஒரு கவனம் வேண்டும். அது இருந்தால், எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கே புரியும். 

எது சிறந்தது? சைவமா? அசைவமா? 

நீங்கள் உயிர் வாழ, பிற உயிர்கள் தங்களை மாய்த்துக்கொண்டு உங்களுக்கு உணவாகிறது. உணவின் தரம் என்று பார்த்தால், அசைவ உணவை விட சைவ உணவு பல மடங்கு சிறந்தது. இதை ‘சரி – தவறு’ என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்க்கவில்லை. நம் உடலமைப்பிற்கு எது பொருந்தும் என்று பார்த்து, நம் உடலை சவுகர்யமாக வைக்கக் கூடிய உணவுவகைகளை உண்ண நினைக்கிறோம்… அவ்வளவுதான்! 

எந்த ஒரு செயலைச் சரியாக செய்ய வேண்டும் என்றாலும் – அது தொழிலோ, படிப்போ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதற்கு நம் உடல் எவ்வித சோர்வுமின்றி நன்னிலையில் இயங்குவது அத்தியாவசியம். அதனால் எவ்வகையான உணவு உடலை வருத்தாமல், எளிதாக செரிமானம் ஆகி ஊட்டச் சத்து அளிக்கிறதோ, அவ்வகையான உணவை நாம் உண்ண வேண்டும். 

இதை நீங்கள் சிறிது பரிசோதனை செய்து பாருங்கள்… உயிரோட்டமுள்ள சைவ உணவு சாப்பிடும்போது உங்கள் உடல் செயல்படும் விதம் எப்படி மாறிப்போகிறது என்று! நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் உணவில் எந்த அளவிற்கு உயிரோட்டமுள்ள உணவை சேர்த்துக் கொள்ளமுடிகிறதோ அந்த அளவிற்கு சேர்த்துக் கொள்வதுதான். இது ஏனெனில், உயிரோட்டமான நிலையில் இருக்கும் உயிரணுக்கள், நாம் உயிர் வாழ்வதற்கு பக்கபலமாக அமையும். உயிரோட்டம் நிறைந்த உயிரணுக்களை உண்ணும்போது, உடலின் ‘ஆரோக்கியம்’ என்பது நீங்கள் முன்பெப்போதும் உணர்ந்ததை விட மிக வித்தியாசமாக இருக்கும். 

நாம் உணவை சமைக்கும்போது, அதில் இருக்கும் உயிரோட்டத்தை நாம் அழித்துவிடுகிறோம். ‘அழிக்கப்பட்ட’ நிலையில் இருக்கும் உணவு அதே அளவிற்கு சக்தியை நம் உடலிற்கு வழங்காது. ஆனால் உயிரோட்டம் நிறைந்த உணவினை உண்ணும்போது, அது நம்முள் முற்றிலும் வேறு நிலையிலான உயிரோட்டத்தை உண்டுசெய்யும். 

முளைவிட்ட தானியங்கள், பழங்கள், சமைக்காத பச்சைக் காய்கறிகள் போன்ற உயிரோட்டம் நிறைந்த உணவுவகைகளை சாப்பிட்டால், அதாவது, உங்கள் உணவின் 30-40% இது போன்றதாக நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் உயிர்சக்திக்கு பக்கபலமாய் அமையும். 

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உண்ணும் உணவுதான் உங்கள் உயிர்சக்தி. உங்கள் உயிரை வளர்த்துக்கொள்ள, மற்ற உயிர் வகைகளை நீங்கள் உணவாக உண்கிறீர்கள். அதாவது, நீங்கள் உயிர் வாழ, பிற உயிர்கள் தங்களை மாய்த்துக்கொண்டு உங்களுக்கு உணவாகிறது. அதனால் தங்கள் உயிரை விட்டு, நீங்கள் உயிர்வாழ வழிசெய்யும் அந்த உயிர் வகைகளுக்கு பெருக்கெடுக்கும் நன்றிவுணர்வோடு அதை நீங்கள் உண்டால், அது முற்றிலும் வேறு விதமாக உங்கள் உடலில் செயல்படும்.

நன்றி : ஈஷா 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com