இரவில் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்!

இரவில் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்!

நம்மில் பலர் வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் காலையில் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு,

நம்மில் பலர் வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் காலையில் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு, மதிய நேரம் டிபன் பாக்ஸில் அடைக்கப்பட்ட சாப்பாட்டை வேகமாக விழுங்குபவர்களாகவே இருக்கிறோம். உணவு விஷயத்தில் இத்தனை அலட்சியமாக இருக்கும் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். இத்தனை ஓட்டமாய் ஓடி சம்பாதிப்பதே உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடத்தான். ஆனால் ஒரு வாய் சாப்பாட்டைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு நமக்கு நேரம் இருப்பதில்லை. அல்லது நாம் அதை சரியாக நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளவில்லை.

இந்த நேரத்தில் இதைத் தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் துல்லியமாக வரையறைத்து வைத்துள்ளார்கள். சந்தி நேரத்துல எதையும் சாப்பிடக் கூடாது என்று நம் பாட்டிமார்கள் அறிவுறுத்துவார்கள். அதாவது ஆறு மணிக்கு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. சூரியன் அல்லது சந்திரக் கிரணத்தின் போது எந்தவொரு உணவையும் சாப்பிடக் கூடாது என்று அன்றே சொல்லி வைத்தார்கள். அதற்கான காரணம் அறிவியல்பூர்வமாக இன்று நமக்குத் தெரிந்தாலும், அன்றே அதைப் பற்றி சொன்ன நம்முடைய முன்னோர்களின் அறிவை வியக்காமல் இருக்க முடியாது. 

காலை மதிய வேளைகளில் தான் வேலையின் கட்டாயத்தில் உணவை அதற்குரிய மரியாதை தராமல் ஏனோ தானோவென்று சாப்பிட்டு விடுகிறோம். இரவு உணவையாவது ஒழுங்கமைத்துக் சரியாகச் சாப்பிட்டால் தான் இரவு தூக்கம் சரியாக இருக்கும். படுக்கையில் படுத்த சிறிது நேரத்திலேயே வயிற்றில் கடமுடா சத்தம் கேட்டால் இரவு உணவையும் நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

தொலைக்காட்சியை வெறித்தபடியோ, அல்லது அவசரப்பசிக்கு என்று வேறு எதாவது குப்பை உணவுகளையோ சாப்பிட்டால் அதன் தாக்கம் நள்ளிரவு வரை நீடித்து, செரிமானப் பிரச்னை அல்லது நெஞ்சரிச்செல் என அவதிப்பட வேண்டியிருக்கும். எனவே இரவு எட்டு மணிக்குள் மிதமான  உணவைட் சாப்பிட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்ல சீரான தூக்கம் வரும். நிம்மதியாக ஓய்வெடுத்து அடுத்த நாள் வேலைக்குத் தெம்புடன் புறப்படலாம். இரவு நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற பட்டியல் இதோ :

1. சாக்லெட்

சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா என்ன. ஸ்வீட் எடு கொண்டாடு என்று நம் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தவை இனிப்பும் சாக்லெட்டும்தான். சந்தையில் கிடைக்கும் விதவிதமான சாக்லெட்டுகளை எல்லாம் வாங்கிக் குவித்து அதன் சுவையில் தன்னை மறந்து இரவில் சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டால் என்னவாகும்? நிச்சயம் நல்ல தூக்கம் வராது.

சாக்லெட்டில் கஃபைன் உள்ளது. இதை மதியம் அல்லது மாலை சாப்பிட்டால் உடலை சற்று புத்துணர்வாக்குவது உண்மைதான். ஆனால் இரவில் டார்க் சால்லெட்டை சாப்பிட்டுவிட்டு தூங்க முயற்சி செய்தால் நிச்சயம் தூக்கம் வராது. காரணம் சாக்லெட்டில் உள்ள தியோப்ரோமைன் எனும் அமிலம் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். அதற்குப் பிறகு தூக்கம் எங்கே வரப் போகிறது. சாக்லெட்டின் சுவைக்கு அடிமையானவர்கள் தினமும் இரவில் அதை சாப்பிட்டப் பின்னரே தூங்க செல்வார்கள். ஆனால் இது கெட்ட பழக்கம். தவிர்க்க முடியாத சமயங்களில் டார்க் சாக்லெட்டுக்குப் பதில் வொயிட் சாக்லெட் சாப்பிடலாம். (இது உண்மையில் சாக்லெட் கிடையாது. சாக்லெட் மாதிரி.)

2. காரசாரமான உணவுகள்

நாம் மட்டும் இரவில் ஓய்வெடுப்பதில்லை. நம்முடைய உடலும் ஜீரண உறுப்புக்கள் உட்பட அதன் உள் உறுப்புக்களும்  இரவில் ஓய்வெடுக்கும். எனவே அதற்கு அளவுக்கு அதிகமான வேலையைக் கொடுக்க கூடாது. எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகளை மட்டுமே தூங்கப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிட வேண்டும்.

சிலர் காரசாரமான உணவு வகைகளை இரவில் விரும்பிச் சாப்பிடுவார்கள். இரவில் அதிகமான காரமும் மசாலாப் பொருட்களும் சேர்ந்த உணவைச் சாப்பிடுவதால் உடலில் சில அசெளரியங்கள் ஏற்படும். நிச்சயம் தூக்கப்  பிரச்னைகள் ஏற்படும். ஜீரண உறுப்புக்களும் அதிகப்படியான வேலை செய்ய வேண்டியிருப்பதால் தூக்கத்து இடையில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிக்கவோ அல்லது நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டோ தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும். இத்தகைய உணவை இரவு சாப்பிடுவதால் கெட்ட கனவு வரும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எதற்கு வம்பு, இத்தகைய உணவுகளை தவிர்த்து நிம்மதியாகத் தூங்குங்கள்.

3. காபி

சிலருக்கு அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். பகலில் காபி குடிப்பதில் பிரச்னையில்லை. ஆனால் இரவு நேரத்தில் காபி குடிக்கக் கூடாது. சாக்லெட் சாப்பிடுவதில் உள்ள பிரச்னை போலவே தான், காபியில் காஃபின் இருப்பதால் அது நரம்புகளில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, அட்ரினல் சுரப்பியை தூண்டிவிடும். இதனால் மூளை சுறுசுறுப்படைந்து தூக்கம் காணாமல் போய்விடும்.

16 அவுன்ஸ் அளவுள்ள ஒரு கோப்பை காபியில் சுமார் 500 மில்லி கிராம் கஃபைன் உள்ளது. காபி குடித்து பல மணி நேரம் அதன் தாக்கம் உடலில் தங்கி இருக்கும். எனவே தூங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பு வரை காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். (கஃபைன் இல்லாத காபி என்று விளம்பரப்படுத்டியிருந்தாலும் அதிலும் சற்று கஃபைன் இருக்கத் தான் செய்யும்) எனவே கவனமாக காபியை இரவில் தவிர்ப்பது தான் நல்ல தூக்கத்துக்கும் கியாரண்டி.

4. மதுபானம் (ஆல்கஹால்)

ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் வைன் குடித்தால் தான் எனக்குத் தூக்கம் வரும் என்று பெருமையாக சொல்பவரா நீங்கள்? இந்த  ஆராய்ச்சி சொல்லும் தகவல் உங்களுக்குத்தான். மது வகை எதுவானாலும் அதைக் குடித்துவிட்டு உடனே தூங்கப் போவதால் அடிக்கடி விழிப்பு வரும் என்பதுதான். 2013-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சொல்கிறது. தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கான முக்கிய காரணம் குடிப்பழக்கம் என்று கண்டு அறியப்பட்டது.

தினமும் இரவு ஆழந்த உறக்கத்தின் போது தான் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும். உடலில் புதிய செல்கள் உருவாகும். இரவு REM என்னும் ஆழ்ந்த உறக்கப் பொழுதில் தான் உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் நீங்கி, உடல் புடம் போட்ட தங்கம் போல மாறும். குடிப்பழக்கத்தால் அடிக்கடி இந்த நேரத்தில் எழுந்து கொள்ள நேர்ந்தால் உடல் புத்துணர்வு பெறாமல் போவதுடன் கடும் சோர்வுக்கும் ஆளாக நேரிடும். தவிர்க்க முடியாமல் மது அருந்தியே ஆகவேண்டிய நிலையில் நீங்கள் இருந்தால், தூங்குவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னால் குடித்துவிட்டு, அந்த போதையும் தெளிவானவுடன் உறங்கச் செல்லுங்கள்.  

5. கொழுப்புச் சத்துள்ள உணவுகள்

நம்மில் சிலர் பீட்சா அல்லது பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். உணவு குறித்த சில தீவிர பரிசோதனைகள் செய்த பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவ்விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை நள்ளிரவு சாப்பிடுவதால் தூக்கம் தடைபடுவதுடன் அடுத்த நாள் பகலில் கடுமையான சோர்வு ஏற்படும் என்கிறார்கள்.

மூளையில் சுரக்கும் ஒரு அமிலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தான் இது ஏற்படுகிறது. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் தான் மூளையில் உள்ள ஒரிக்ஸின் அளவுகளை குறைய வைத்து தூக்கப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். எனவே இரவில் மிதமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

6. சிவப்பிறைச்சி (Red Meat)

சிவப்பு இறைச்சியில் அதிகமான புரதச் சத்து உள்ளது. புரதம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. எடை குறைக்க உதவுவதுடன் தசை வளர்சிக்கும் நல்லது . ஆனால் இரவில் இதை சாப்பிடும் போது தான் பிரச்னை. செரிமான மண்டலத்தில் அதிகப்படியான வேலை கொடுப்பதால் உடலுக்கு ஓய்வு குறைந்து, தூக்கம் தொலைந்து போகும்.

இறைச்சியில் டைரோஸைன் எனும் அமினோ அமிலம் உள்ளது. இது மூளையைத் தூண்டக் கூடியது. தவிர இறைச்சியில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளது. அதுவும் எளிதில் ஜீரணம் ஆகாமல் தூக்கத்துக்கு கேடு விளைவிக்கும். புரதத்துடன் மாவுச் சத்தும் சேர்ந்த உணவினை சாப்பிட்டால் ஓரளவு சமநிலை ஏற்பட்டு செரிமானம் எளிதில் நடைபெறும்.

7. தண்ணீர்

நீராலான நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியமாக இருக்க அதன் நீர்ச்சத்து குறையாது இருக்க வேண்டும். நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடித்தால் தான் உடலில் வளர்சிதை மாற்றங்கள் நிகழும், நீர்ச்சத்து பாதிப்படையாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலர் இரவில் தலையணைக்கு அருகே ஒரு சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருப்பார்கள். அவசர தாகத்துக்கு அப்படி வைத்துக் கொள்வது சரிதான். ஆனால் இரவு அடிக்கடி தண்ணீர் குடிப்பது ஆழமான தூக்கத்துக்கு எதிரி. காரணம் சிறிநீர்ப் பை நிரம்பி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிவரும். நல்ல தூக்கத்திலிருந்து உடலே நம்மை எழுப்பி டாய்லெட் பக்கம் அனுப்பிவிடும். நல்ல தூக்கத்தின் நடுவில் எழுந்துவிட்டால் சிலருக்கு மறுபடியும் தூக்கம் வராது. இதையெல்லாம் தவிர்க்க, தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே தண்ணீர் குடித்துவிட வேண்டும். 

8. சோடா

கார்பனேட்டட் பானங்களில் ஆசிட், அதிகப்படியான சர்க்கரை மற்றும் கஃபைன் உள்ளது. இவை எல்லாமே நல்ல உறக்கத்துக்கு எதிரி. அதிகப்படியான இனிப்பு உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் தூக்கம் கெட்டுவிடுவது உறுதி. சுகர் ஃப்ரீ மற்றும் டயட் ஃப்ரீ சோடா என்று விற்கப்படும் சோடாக்களில் கூட ஆஸ்பர்டேம் (Aspartame) எனும் வேதிப்பொருள் உள்ளது. இது உறக்கக் குளறுபடிகளை விளைவிக்கும் ரசாயனமான ஃபினைலாலைனைத் தூண்டி விடும்.

தூக்கப் பிரச்னைகளைத் தவிர்த்து உடல் நலத்துக்கும் இது ஏற்றதல்ல. தவிர காபியிலும், சாக்லெட்டிலும் காணப்படும் கஃபைன் சோடாவிலும் உள்ளது. இது இனிமையான தூக்கத்துக்குக் காரணமான செரோடனின் மற்றும் மெலோடொனின் ஹார்மோன்களுடன் வினை புரிந்து தூக்கத்தை கெடுத்துவிடும். சோடா போன்ற செயற்கை பானங்களை குடிப்பதையே தவிர்ப்பது நல்லது. அதுவும் இரவில் கட்டாயம் குடிக்கக் கூடாது.

இவை தவிர கேக், பாஸ்தா, பச்சை மிளகாய் கலந்த தயிர் சாதம், சிப்ஸ், வறுத்த பொறித்த உணவு வகைகள், ரவா உப்புமா, அடை போன்ற உணவு வகைகளையும் இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். 

உணவு குறித்த விழிப்புணர்வோடு வாழப் பழகினால் எந்நேரமும் உற்சாகத்துடன் இருக்கலாம். தினமும் காய்கறி பழங்களை சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம் அல்லது சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு, மனத்துக்குப் பிடித்த இசையை சிறிது நேரம் கேட்டுவிட்டு, படுக்கச் சென்றால் உறக்கம் என்பது உற்ற தோழனாகிவிடும். அடுத்த நாள் அதிகாலையில் தான் நீங்கள் எழுந்திருக்கும் போது நல்ல தூக்கத்தின் திருப்தி நம் முகத்தில் தென்படும். நாம் சொன்னதை தான் நம் உடல் கேட்கவேண்டும். அதற்கு நாம் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. சரிதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com