
இன்று முதல் உலக தாய்ப்பால் வாரம் தொடங்குகிறது.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் - என்றார் திருவள்ளுவர்
மழலைகள் வெளிப்படுத்தும் குரலை விட இனிமையானது உலகில் வேறேதுமில்லை. குஷியாக இருந்தால் கெக்கேபிக்கே என்று பொக்கைவாய் தெரிய சிரிக்கும் குட்டீஸ்கள் பசியென்றால் 'ங்கா' என்று குரல் எடுத்து சிணுங்க தொடங்குகிறது.
குழந்தை பிறந்ததில் இருந்து குறைந்தது ஆறு மாதம் எந்தவித இடையூறுமின்றி தாய்பால் தரவேண்டும் என்கிறது அமெரிக்கன் அகடமி ஆப் பீடியாட்ரிக்ஸ். தாய்பால்தான் குழந்தையின் அடிப்படை வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குகிறது. முதல் ஆறுமாதத்தில் தான் எலும்புகளின் உறுதித்தன்மை மற்றும் மூளை வளர்ச்சி சீரடைகிறது. இதற்கு அடிப்படை தாய்ப்பால்.
நவீன உலகில் பரபரப்பான சூழலில் பணிக்கு செல்லும் பல பெண்கள் தாய்பால் தருவதில் சிறிதான சுணக்கம் காட்டுகின்றனர். இது தவிர குழந்தைக்கு தாய்ப்பால் தந்தால் அழகு கெட்டுவிடும், வயதான தோற்றம் வந்துவிடும் என்ற தவறான புரிதலும் பல பெண்களிடைடையே நிலவுகிறது. இவை மட்டுமின்றி கர்ப்பகாலங்களில் உரிய சத்துணவை எடுக்காத காரணத்தினால் பல தாய்மார்கள் தாய்பால் பற்றாக்குறைக்கு உள்ளாகின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தாய்பாலின் மகத்துவத்தை எடுத்துரைக்க உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்பால் தினத்தை கொண்டாடுகிறது.
இந்த தினத்தின் நோக்கம் தாய்பால் குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் தாய்மார்கள் இடையே உருவாக்குவது. ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்தில் உருவாக்குவது. இவ்வாண்டு UNICEF நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க பல்வேறு கொள்கைகளையும் வரைவுகளையும் உருவாக்கியிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. அவற்றில் முக்கியமான சில
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பாக குறைந்தபட்சம் 18 வாரங்கள் வழங்கப்படவேண்டும்.
ஆண்களும் தாய்பால் குறித்த விழிப்புணர்வை பெறவேண்டும். அவர்களும் தங்கள் மனைவிக்கு உதவியாக இருக்க Paid Paternity Leave வழங்கப்படவேண்டும்.
பாலுட்டும் தாய்மார்கள் எந்தவிதமான சங்கோஜமும் இன்றி பணிபுரியும் வகையில் அவர்களுக்கு பணியிடங்களில் வசதிகள் செய்து தரப்படவேண்டும்.
தாய்பால் புகட்டுவதை ஒரு கடமையாக செய்யாமல் உள்ளார்ந்த உணர்வுடன், தாய்மை எனும் தெய்வீக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே முக்கிய நோக்கம். உண்மைதான்! நவீன நுட்பங்கள் பெருகும் முன்பு நமது முன்னோர்கள் இதனை ஒரு பேரன்புடன் செய்ததால்தான் நாம் இன்று ஆரோக்கியமாக உலவுகிறோம். இதே ஆரோக்கியம் அடுத்த தலைமுறைக்கும் செல்ல இக்கால தாய்மார்கள் தவறாமல் உங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுங்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.