மழைக்காலத்தில் இதையெல்லாம் சாப்பிடாதீங்க! 

பருவ மாற்றத்தைப் பற்றி நினைக்கும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது என்ன?
மழைக்காலத்தில் இதையெல்லாம் சாப்பிடாதீங்க! 
Published on
Updated on
3 min read


பருவ மாற்றத்தைப் பற்றி நினைக்கும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது என்ன? மழை, ஆம், நன்றாக மழை பொழியும்போது ஜன்னலோரம் அமர்ந்து சூடான ஒரு தேநீரையும், அதைவிட சூடான ஒரு பஜ்ஜியும் சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும். இந்த இரண்டும் ஒரு நல்ல இணை உணவுகள் என்று உணவுப் பிரியர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்றாலும், இந்த பருவத்தில் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க சிலவகை உணவுகளை உட்கொள்ளும்போது மிகவும் கவனத்துடன் சாப்பிடவேண்டும் என்பதையும் மறக்காதீர்கள்.

மழைக்காலம் மனதுக்கு மகிழ்ச்சியளித்தாலும், உங்கள் கவனக் குறைவால் அது நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சலை வரவழைத்துவிடலாம். அதனால்தான் நாம் உட்கொள்ளும் உணவின் தன்மையை அறிந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மிக முக்கியமானது. 

அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகள், கடைகளில் கிடைக்கும் குப்பை உணவுகள், அதிகமான எண்ணெய் பயன்படுத்தி வறுக்கப்பட்ட தின்பண்டங்களை உட்கொள்வதால் செரிமானப் பிரச்னைகள் ஏற்படுகிறது. இது அஜீரணம், வயிற்று வலி போன்றவற்றுக்கு வழிவகுத்துவிடும். இத்தகைய உணவுகளை மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் போது அவுஉணவு செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரமாகும். ஜீரண உறுப்புக்கள் அதன் முழுத் திறனில் இயங்காது. எனவே மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய சில குறிப்பிட்ட உணவுகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

இந்த மழைக்காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் சில உணவுப் பொருட்களை தவிர்த்துவிடுங்கள். அவை,

குளிர் பானங்கள்

செயற்கைக் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மழைக்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் அவை தவிர்க்கப்பட வேண்டும். குளிர் பானங்கள் செரிமான அமைப்பை பலவீனப்படுத்தக் கூடும், மேலும் உடலில் உள்ள தாதுக்களையும் குறைக்கும். செயற்கை குளிர்பானங்களுக்கு பதிலாக பானகம், க்ரீன் டீ அல்லது இஞ்சி டீ போன்றவற்றை தேர்வு செய்து குடிக்கலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை உதவும்.

பழச்சாறுகள்

பருவகாலத்தில் கிடைக்கூடிய இயற்கையான பழச்சாறுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழச்சாறை குடிக்கக் கூடாது. முன்கூட்டியே வெட்டப்பட்ட பழங்களிலிருந்து எடுக்கப்படும் சாறு ஆரோக்கியமானதல்ல, ஏனெனில் நுண்கிருமிகள் அதில் வேகமாக பரவும். அப்போதைக்கு அப்போது தயாரிக்கப்படும் பழச்சாறுகளைத் தேர்ந்தெடுத்து பருக வேண்டும். கடைகளில் வாங்கும்போது, அது உங்கள் கண் பார்வையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்த பின்னரே பருக வேண்டும்.

புளிப்பு உணவுகள்

சட்னி, ஊறுகாய், புளி போன்ற உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன. மேலும் இவை நீர் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் உடலிலுள்ள சமன்நிலை பாதிக்கப்பட்டு, நீங்கள் நோய் வாய்ப்படலாம். அவை தொண்டை பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும், சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.

பால் பொருட்கள்
பால் பொருட்கள்

பால் பொருட்கள்

மழைக்காலத்தில் பால் பொருட்களை மிதமாக உட்கொள்ள வேண்டும், ஏனெனில் பால் பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும். மேலும் நெய், பனீர், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது மந்தமான உணர்வு ஏற்படும். இதனால் உடல் இயக்கம் குறையும் அல்லது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். சைனசிடிஸால் பாதிக்கப்படுபவர்கள் தயிர் போன்ற பால் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், கார்ணம் இருமல் மற்றும் சளித் தொல்லைகளை அதிகரிக்கும்.

காளான்
காளான்

காளான்

காளான் மண்ணில் வளரும் ஒருவகை தாவரம். இதனை எப்போதும் கவனமாகத்தான் சமைக்க வேண்டும். சமைக்கும் முன் நன்றாக சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவ வேண்டும். மழைக்காலத்தில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம், அதனால்தான் காளானை நன்றாக சுத்தப்படுத்துவது நல்லது.

காய்கறிகள்

ப்ரோக்கோலியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குரோமியத்தையும் கொண்டுள்ளது, இது ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அவை மிகவும் ஆரோக்கியமானவை என்று கருதப்பட்டாலும், பச்சை இலைக் காய்கறிகளை இந்த வானிலையில் கவனமாக உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இவற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் கிருமிகளுக்கு சரியான இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகிறது. கிருமிகள் பெரும்பாலும் முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் காணப்படுகின்றன, அவற்றைக் கண்டறிவது கடினம். எனவே, அவற்றை கொதிக்க வைப்பது அல்லது சமைப்பதற்கு முன் மீண்டும் மீண்டும் வெதுவெதுப்பான நீரில் அலசி எடுப்பது நல்லது.

கடல் உணவு

பருவமழை என்பது மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகளை உட்கொள்வதற்கு ஏற்ற பருவமல்ல, மீன்களுக்கு பதிலாக கோழியை தேர்வு செய்யலாம். நீங்கள் மீனை உட்கொள்ள விரும்பினால், அதை நன்கு கழுவ வேண்டும் அதன் பின்னரே சமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com