நீ தனி ஆளா?

குருஜி கூறுகிறார், ‘ நீ ஒரு தனி ஆள் அல்ல. நீ ஒரு கும்பல் தான். ‘நான்’ என்று கூறும்போது கூட
Published on
Updated on
2 min read

குருஜி கூறுகிறார், ‘ நீ ஒரு தனி ஆள் அல்ல. நீ ஒரு கும்பல் தான். ‘நான்’ என்று கூறும்போது கூட அங்கு ஒரு ‘நான்’ இல்லை. பல ‘நான்கள்’ உனக்குள் இருக்கிறார்கள். காலையில் ஒரு நான். மதியம் ஒரு நான். மாலையில் ஒரு நான். இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உங்களிடம் இருப்பதில்லை.

கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும் போது மட்டுமே அமைதி சாத்தியம்!

நீங்கள் ஒரு கும்பல். ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும். என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை. எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில் தான் இருக்கும். லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்துவிட முடியும். எனவே தான் ந்க்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை. நட்பாக இருக்க முடிவதில்லை. நண்பர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நட்பு இருப்பதில்லை. யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.

அன்பு காட்டுவோம்!

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிரைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.

அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான். ஒரு அடர்ந்தக் காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில், ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?

ஆனாலும் அவை மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைத்தவிர அவற்றுக்கு வேறொன்றும் தெரியாது. அவை எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டே தான் இருக்கும்!

நீங்கள் அன்புக்காகப் பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.

பிறகு, நீங்கள் உங்கள் ஆழ்மனத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்புப் பரிமாற்றம் எப்படி ஏற்படும்?

அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்!

இந்த அதிகாரச் சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

- ஓஷோ

(நன்றி – பிரணாயாமம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com