மக்களை சரியான திசையில் செலுத்த என்ன வழி?

'கோபப்படுவதால் ஏதேனும் செயல் நடந்தால், ஏன் கோபப்படக் கூடாது?! புரட்சி நடக்கணும்னா
மக்களை சரியான திசையில் செலுத்த என்ன வழி?

'கோபப்படுவதால் ஏதேனும் செயல் நடந்தால், ஏன் கோபப்படக் கூடாது?! புரட்சி நடக்கணும்னா கோபம் அவசியம்தானே!' இது ஏதோ சரியான வாதம்போல தோன்றலாம்! அப்படித்தான் நடிகர் சித்தார்த்தும் கோபம் தொடர்பான தனது முதல் கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார். ஆனால் சத்குரு கூறிய பதிலோ முற்றிலும் மாறுபட்டது. அந்த பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்!

சித்தார்த்: இன்றைய தலைப்பு 'இளைஞர்களும் உண்மையும்.' எந்த பகுதி இளைஞர், எந்த பகுதி உண்மை என்று நாம் சற்று முன் விவாதித்துக் கொண்டிருந்தோம். 

சத்குரு: நீங்கள் இளைஞர், நான் உண்மை! சித்தார்த்: அப்போ இந்த மாலையில் நான் இளைஞனாக இருக்கிறேன். 

சத்குரு: ஆனால் நான் இளைஞனும் ஆவேன். 

சித்தார்த்: இளைஞன் என்று உங்களை சொல்வது குறைத்து மதிப்பிடுவது ஆகிவிடும் சத்குரு. இளைஞர்களுக்கு கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த தேசத்தில் ஒரு இளைஞனாக எனக்கு இருக்கும் ஒரு அடிப்படை கேள்வி கோபம் குறித்தது. எங்களில் பலருக்கும் அதிகமாக கோபம் இருக்கிறது. இறுதியில் அதை வைத்து என்ன செய்வதென்றும் தெரிவதில்லை.

'நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்' என்பேன் நான். ஒருவரின் உள்நிலை என்ற ரீதியில் பார்த்தால் கோபத்தின் பங்கு என்ன?  எனக்கு இருக்கும் அடிப்படை புரிதல் என்ன என்றால் இந்த தேசத்தில் இப்பொழுது இளைஞர்களுக்கு இருக்கும் கோபம் போதாது, இன்னும் அதிகமாக கோபம் தேவை, கோபம் வெளிப்பட வேண்டும் என்பதே. நெறிப்படுத்தப்பட்ட கோபம் வெளிப்பட்டால் இந்திய தேசத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க தீர்வுகள் கிடைக்குமா?

சத்குரு: இளைஞர்கள் ஆவேசத்தில் இருப்பது ஒரு தீர்வு இல்லை. தொழில், வேலை, பணம் போன்ற அம்சங்களை பார்த்து இளைஞர்கள் வளரும் காலகட்டம் இது. சே குவேரா, 'நீங்கள் ஆவேசத்தில் இருந்தால் எங்களில் ஒருவர்' என்றார். ஆனால், 'நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்' என்பேன் நான். ஏனென்றால் கோபம் கொள்ளும் பொழுது நீங்கள் உலகத்தை பிரிக்கிறீர்கள். ஏதோ ஒன்றின் மீது கோபம் கொண்டால் பாதி உலகத்தை, ஏன் முழு உலகத்தையும் அழித்துவிட நினைப்பீர்கள். இது தீர்வு அல்ல! இது ஒரு வலுவிழந்த மனிதனின் கருவி. சிறிது காலத்துக்கு பின் இது எந்த பலனும் இல்லாது குளிர்ந்து போகும். 

சித்தார்த்: உதவி செய்யும் தேவையில் எழும் கோபம் விளைவு ஏற்படுத்துமா? 

சத்குரு: ஒரு சூழ்நிலையை உங்களால் கையாள முடியவில்லை என்று வரும்பொழுதுதான் கோபம் வருகிறது. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், உங்கள் கோபத்தால் சில விஷயங்கள் நடப்பதை, மனிதர்கள் செயல்படுவதை நீங்கள் ருசித்துவிட்டீர்கள். எனவே இதுவே வழி என்று நினைத்து விட்டீர்கள். உங்களுக்கு ஏதோ ஒன்றை யாரோ கோபமாக சொன்னால் பிடிப்பதில்லை. ஆனால் உலகத்துக்கான தீர்வாக இந்த கோபத்தை நினைக்கிறீர்கள். அது ஒரு ஆற்றல் இல்லாத மனிதனின் கடைசி அஸ்திரம் அவ்வளவுதான்.

கோபம் இல்லாமல் இருக்க நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வாக இருந்தால் இணைத்து கொள்வீர்கள். இணைத்துக் கொள்ளும் பொழுது நீங்களே ஒரு தீர்வுதான். நமது புத்திசாலிதனத்தை தீர்வுகள் தேடுவதில் செலவு செய்வதில்லை, அதை பிரச்சனைகள் உருவாக்குவதில் உபயோகப்படுத்துகிறோம்.

உதாரணமாக, டெல்லி சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் அது. அந்த நிகழ்வு பலரை ஆவேசத்தில் தள்ளியது. தினமும் அது போல ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தாலும் தலைநகரில் இது போல ஒரு கொடுமை நடந்தது சகித்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் ஆவேசம் அடைந்தனர். ஒட்டு மொத்த தேசத்தின் கவனம் இதை நோக்கி திரும்பியது. உணர்வினால் மக்கள் எழுச்சி அடையாமல், ஆவேசத்தால் மக்கள் எழுச்சி அடைந்தனர். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அந்த ஆவேசத்தால், அதனால் நிகழ்ந்த போராட்டத்தால், விளைவு மோசமாக இருந்திருக்க கூடும். பலர் இறந்திருக்க கூடும். 

எனவே ஒரு பிரச்சனை உருவாக்கி மற்றொரு பிரச்சனைக்கு தீர்வு காண முயல வேண்டாம். உணர்வுகளால் எழுச்சி கொள்வது அற்றுப் போனதால் கோபத்தை ஒரு அறமாக கருத ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது ஒரு அறம் அல்ல. மனிதனின் தரத்தை தாழ்த்துவது ஆகும். சமூகத்தில் நிலவும் உணர்ச்சி இன்மையால் மனிதன் தரம் தாழ்வது அறம் போல தோன்ற ஆரம்பித்து விட்டது.

*****

கடந்த வாரம்… 'கோபத்தால் இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்குமா?' என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்த சித்தார்த், கோபத்தினால்தான் மக்களை தட்டி எழுப்ப முடியும் என்கிறார். இதற்கு சத்குரு என்ன விளக்கம் அளித்தார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்…

சித்தார்த்: கோபத்தை விடும் ஒருவர் உங்களில் ஒருவர் என்று சொன்னீர்கள். நான் கோபத்தை விட்டு விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எரியும் பிரச்சனைகள் பல எனக்கு இருக்கிறது. பல கோடி மக்கள் நிறைந்த தேசத்தில், உங்களைப் போன்ற ஒருவர் இதை எப்படி முடிவாக மாற்றுவார். மக்களை தட்டி எழுப்ப பல ஆண்டுகள் ஆனது போல அவர்களை அமைதிபடுத்தவும் இன்னொரு நூற்றாண்டு ஆகுமா?

சத்குரு: மக்களை தட்டி எழுப்ப முடியும் என்றால் அதை கோபத்தினால் மட்டுமே செய்ய முடியும் என்ற தவறான புரிதல் உங்கள் மனதில், ஏன் பலரின் மனத்திலும் நிலை கொண்டிருக்கிறது. எழுச்சி என்றால் இன்னும் விழிப்பாக இருப்பது தானே. உறக்கம், எழுவது இரண்டுக்கும் உள்ள வித்யாசமே விழிப்புணர்வுதான். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், உங்களை கொசு கடிக்கிறது. அது உங்களுக்கு தெரிவதில்லை. அதே ஒரு முதலை கடித்தால் உடனே தெரிந்துவிடும். அப்படியென்றால் நீங்கள் விழிப்பாகதான் இருக்கிறீர்கள் ஆனால் கொசுவை தெரியும் அளவுக்கு விழிப்பாக இல்லை.

அதனால் உறக்கத்தில் இருந்து விழிப்பு என்பது ஒரு ஒரு விதமான விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு நிலைக்கு கடந்து செல்வது. எழுவது என்பது எப்பொழுதும் விழிப்புணர்வு நோக்கி நகர்வதாகவே இருக்க வேண்டும். ஆனால் கோபப்படும் பொழுது நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதில்லை. முட்டாள்தனமான காரியங்களை செய்கிறீர்கள். இல்லையா?

சித்தார்த்: நான் சில சமயம் கோபத்தில் நல்ல விஷயங்கள் செய்திருக்கிறேன், அது போல அமைதியாக இருந்த ஒரு சில தருணங்களில் மோசமான விஷயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இது எனது தனிப்பட்ட அனுபவம்.

சத்குரு: நீங்கள் கோபப்படும் பொழுது உங்களிடம் ஒரு வேகம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, தீவிரம் இருக்கிறது. இதற்கு கணிசமான மருத்துவ, அறிவியல் சான்றுகள் மற்றும் மனிதர்கள் அனுபவங்கள் இருக்கிறது. நீங்கள் கோபப்படும் பொழுது இருக்கும் தீவிரத்தோடு அல்லது அதையும் விட பல நூறு மடங்கு தீவிரத்துடன், ஒரு அமைதியான மனதோடு இங்கே இருந்தால் பல அற்புதமான விஷயங்களை நிகழ்த்த முடியும். மக்களை சரியான திசையில் செலுத்த முடியும்.

நன்றி : ஈஷா மையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com