ஃபேஸ்புக்கில் தேவையா?

சமீப காலங்களாக மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சுருங்கிப் போய்விட்டது. பெரும்பாலான
ஃபேஸ்புக்கில் தேவையா?

சமீப காலங்களாக மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சுருங்கிப் போய்விட்டது. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மொபைல் போனில் புதைந்து போய் விட்டனர். வெளியுலகில் நடமாடினாலும் மெய் நிகர் உலகில் தான் அவர்களின் இருப்பு. தொழில்நுட்பம் ஒன்றிற்கு இந்தளவுக்கு அவர்கள் அடிமையாகிப் போனது பெரும் சோகம். நான் இப்போது பூமியிலிருது 30,000 அடி உயரத்தில் இருக்கிறேன், இப்படி திருமண வாழ்வில் சிக்கிக் கொண்டாலும் சந்தோஷமாகவே இருக்கிறேன்...இன்று எனக்குத் மண நாள், இன்று சாப்பிட்ட தாஹி பூரியில் தயிர் ஒரே புளிப்பு, தோழிகளுடன் கடைகளுக்கு சென்று நான்கு கம்மல் வாங்கினேன் - இப்படி இன்னும் பல தகவல்கள் சொந்த விஷயங்களை ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் பதிவிடுவதில் என்ன கிடைக்கிறது?

நம் மனங்களில் எழும் எண்ணங்கள் அனைத்தையும் ஃபேஸ்புக் அல்லது வலைத்தளத்தில் பதிந்தாக வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை? மகத்தான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போதும், புதிய சிந்தனை அலைகளை எழுப்ப முடிகிறது எனில் அதை வெளிப்படுத்த இத்தகைய ஊடகத்தைப் பயன்படுத்தலாம். தவிர செய்திகளை மின்னல் வேகத்தில் தெரிவிக்கவும் ஒரு செய்தியைப் பற்றிய நமது பார்வையை பதிவிடவும் ஆக்கபூர்வமான விஷயங்களை எழுதுவதற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் நல்லது. ஆனால் நொடிக்கொருதரம் புகைப்படத்தை பகிரவும், மேற்கூறிய அர்த்தமற்ற, பயனற்ற குறிப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் நமக்கு பிரத்யேகமான டைரி போதுமானது, ஃபேஸ்புக் எதற்கு. பொருளற்ற பதிவுகளை எழுதிவிட்டு அதற்கு லைக்ஸ் வரவில்லை என்றால் மனம் உடைந்து போகிறவர்கள் எத்தனை எத்தனை பேர்? 

சமூக இணையதளங்களில் எழுதுவதன் மூலமும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவதன் மூலமும் ஒவ்வொரு நபரும் ஒரு நடமாடும் ஊடகமாகவே தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால் ஊடகம் என்பது ஒரு மாபெரும் சக்தி. தனி மனிதனாக ஒரு ஊடக வேலையை யாரும் செய்துவிட முடியாது. டிவிட்டர் மற்றும் முகநூல் பதிவர்களுள் காணப்படும் ஒரு நோய்க்கூறு எதையும் ஆராயமல் அப்படியே ஒரு விஷயத்தை வலையேற்றிவிடுவார்கள். இன்னார் இறந்தார் என்று எங்கேனும் ஒரு புரளி கேட்டால் போதும் தாங்கள் தான் முதன்முதலில் அந்தச் செய்தியை தரவேண்டும் என்ற அவசரத்தில் அச்செய்தியை உறுதி செய்யாமலேயே பதிவிட்டுவிடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கதறி மறுப்பு தெரிவித்தாலும் இவர்களைப் பொருத்தவரை போட்ட பதிவை அழிப்பார்களே தவிர அதற்கான மன்னிப்பு கோருதலோ அல்லது மனம் வருந்துவதோ இல்லை. எல்லாவற்றையும் செய்தியாகப் பார்ப்பதும், இன்று எதைப் பற்றி எழுதலாம் என்று சப்ஜெக்ட் தேடுவதும் இவர்களுக்கு பொழுதுபோக்கு. ஊடகம் செய்யும் வேலையை தனி நபர்கள் செய்ய முனையும் போது இத்தகைய அபத்தங்கள் நிகழ்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, வைரல் என்ற வார்த்தை சமீப காலமாக மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதென்ன வைரல் என்று பார்த்தால் ஒரே விஷயத்தை சுற்றி சுற்றி வலைத்தளம் முழுக்க பரவ வைப்பதும், அதிகம் லைக் ஷேர் வாங்கிய ஒரு பதிவு ட்ரெண்ட் ஆகி அனைவரும் படிக்கப்பட்ட அல்ல பார்க்கப்பட்ட ஒரு பகிர்வு தான் வைரலாகிறது. முன்பெல்லாம் ஊடகங்கள் பிரபலங்களிடம் தேதி வாங்கி அவர்களின் நேர்காணலை சில எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களுடன் தங்கள் பத்திரிகையில் வெளியிடுவார்கள். இப்போதெல்லாம் பிரபலங்களே தங்கள் டிவிட்டர் / இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தங்களைப் பற்றி அவ்வப்போது செய்திகளையும் நிறைய புகைப்படங்களையும் வெளியிட்டு நெட்டிசன்களின் தேவைகளை நேரடியாகப் பூர்த்தி செய்துவிடுகிறார்கள். பத்திரிகைகளுக்கு வேறு வழியில்லாமல் பிரபலங்கள் வெளியிட்ட அதே புகைப்படங்களை மறு வெளியீடு செய்து இணைய வசதியில்லாத வாசகர்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வருவதை கடமையாகச் செய்கிறார்கள். 

நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் நம் கவனம் இருக்க வேண்டுமே தவிர தேவையற்ற விஷயங்களில் சிக்கி, அடுத்தவர்களையும் அதைப் படிக்க வைப்பது எந்த வகையிலும் சரியில்லை. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதம். நம்முடைய அனுபவங்கள் நமக்கானது மற்றவர்களுடையதும் அவ்வாறே. எனவே அடுத்தவர்களின் அனுபவங்களைப் படித்து நம் நேரத்தை ஏன் வீண் செய்யவேண்டும்? நம்முடைய வாழ்வானுபவத்தின் அளவு, நாம் எந்த அளவுக்கு ஒரு விஷயத்தை தீவிரத்துடன் அணுகிறோம் என்பதைப் பொருத்து அமைவது. தீவிரம் என்பது தன்னால் வராது. நம் வாழ்க்கையின் மின்சாரத்தை உயர்த்தாமல், நாம் விழிப்புணர்வுள்ளவர்களாக மாறமுடியாது. அப்படிப்பட்ட தீவிரத்தை அதிகரிக்க, நாம் முயற்சி செய்ய வேண்டியது தான் முக்கியமே தவிர முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மல்லு கட்டுவது அல்ல. அது நம்மை நீர்த்துப் போகச் செய்துவிடும். எழுதலாம், நிச்சயம் அதில் தவறு இல்லை. ஆனால் நாம் எழுதியதை நாமே சிலாகித்துக் கொண்டு அதைப் படிப்பவர்களை நண்பர்களாகவும் படிக்காதவர்களை முட்டாள் என்றும், எதிர்ப்பவர்களை எதிரி என்றும் நினைக்கும் மனநிலை ஆபத்தானது. உளரீதியான பிரச்னைகளுக்குள் நம்மை அமிழ்த்திவிடும். விரைவில் மனச் சோர்வு ஏற்பட்டு வாழ்க்கையே சலித்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் சலிக்காத வாழ்க்கை நிலையினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள் நம்மை நம்மிலிருந்து வேறுபடுத்திவிடும் மெய்நிகர் உலகம் தேவைதானா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com