இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்!

சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான்.
இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்!
Published on
Updated on
2 min read

சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.

தூங்குவதில் கூடவா பிரச்னை? ஆம் உலகளாவிய பிரச்னை இது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ஆன்ட்ரூ வீல்  தியானம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். தூக்கமின்மை பிரச்னைக்கான எளிதான ஒரு தீர்வை முன் வைக்கிறார். மூச்சில் கவனம் வைத்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும் என்கிறார் டாக்டர் வீல். உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை விடும் போது மூளையானது தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு அமைதியான நிலைக்கு தானாகவே வரும்.

மேலும் அவர் கூறுகையில், 'மூக்கின் வழியே சுவாசம் நான்கு நிமிடங்கள் உள் எடுக்கவும். ஏழு அல்லது எட்டு நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியே எட்டு நொடிகள் வெளி மூச்சை விட வேண்டும். இப்படி செய்யும் போது மூளை புத்துணர்ச்சி பெறுவதுடன் தூக்கமும் நன்றாக வரும்’ என்கிறார் டாக்டர் வீல்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால், இதயத்துக்கும் மிக நல்லது. தேவையற்ற பதற்றங்கள், ரத்த அழுத்தங்கள் குறைந்து மன அமைதி ஏற்படும். ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தால் தான் இதை நன்கு உணரமுடியும்.

இவ்வாறு மூக்கின் வழியே உள்மூச்சு எடுத்து, சில நொடிகள் உள்ளே மூச்சை நிறுத்தி அதன் பின் வாய் வழியே வெளிமூச்சை விடும் செயலை நாலு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாகச் செய்யும் போது, மூச்சை கவனித்தபடியே நீங்கள் உறக்கத்தில் விழுவீர்கள். 60 நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தினுள் அமிழ்வீர்கள் என்பது உறுதி.

ஆரம்பக் கட்டத்தில் இது வேலை செய்யாதது போல தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறிய பின் மந்திரம் போட்டது போல், அல்லது ஸ்விட்ச்சை அணைத்தது போல் மூச்சுப் பயிற்சியின் இசையில் தூக்கம் கண்களை சுழற்றும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com