உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது? 

பயணங்கள் வாழ்வின் தலைசிறந்த ஆசான். அதுவும் ஆன்மிகப் பயணங்களைப் பொருத்தவரையில்
உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது? 

பயணங்கள் வாழ்வின் தலைசிறந்த ஆசான். அதுவும் ஆன்மிகப் பயணங்களைப் பொருத்தவரையில் இன்னும் ஆழமானவை. காரணம் ஆன்மிகப் பயணம் என்பது சாதாரணமாக இடங்களைச் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. ஒருவரின் ஞானத்தையும் தேடுதலையும் விரிவுபடுத்திவிடும் அற்புதத்தன்மை உடையவை பயணங்கள்.

புத்தம் என்பது மதமல்ல அது மகிழ்ச்சியை கண்டடையும் நல்வழி என்கிறார் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வரும் புத்தத் துறவியான கேயல்வா துகம்பா (Gyalwa Dokhampa). 'உங்களுடைய வாழ்வின் சந்தோஷத்தை கொண்டு வருவதில் பொருட்களின் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் 21 நூற்றாண்டில் தன் இளமையின் பெரும் பகுதியைக் கழித்த இந்த இளம் துறவி.

புத்தம் என்பது சூழலியல் சார்ந்தது. மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஆண் பெண் சமத்துவத்தையும் வலியுறுத்துவது என்ற கருத்தை வெளிப்படுத்தியவர் கேயல்வாங் திருபா என்ற பெளத்த துறவி. கேயல்வாங் திருபா, கேயல்வாங் திருபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர். திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமாவால் ஒன்பதாம் கேயல்வா துகம்பா என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.

'பெரும்பாலோருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். வெற்றியாளராக வலம் வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். ஏன் வெற்றியாளராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியுமா? காரணம் ஒருவர் வெற்றியை அடைந்துவிட்டால் பிற்சேர்க்கையாக சந்தோஷமும் உடன் வரும் வசதி வாய்ப்புக்கள் என எல்லாம் கிடைக்கும் என்பதற்காக வெற்றியை மகிழ்ச்சியின் இலக்காக நினைக்கிறார்கள்.

ஆனால் சந்தோஷத்தை அப்படியெல்லாம் துரத்திச் சென்றுவிட முடியாது. இது எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி ஒன்றைத் துரத்தி செல்வோம் அதை அடைந்துவிடுவோம். ஆனால் அது போதாது. அது நம்மை முழுமையாக சந்தோஷப்படுத்தாது. வேறு ஒன்று நமக்கு தேவைப்படும். அதையும் நம்மால் அடைந்துவிட முடியும்...ஆனால் மறுபடியும் இன்னொன்று தேவையாக இருக்கும்.

ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக பெரும் புகழ் அல்லது பொருள் கிடைக்கும் என்றால் அதனை விட்டுக் கொடுப்பீர்களா? மன மகிழ்ச்சி என்பது நட்பில், அன்பில், திருப்தி உணர்வில், மற்றவர்களுடைய தவறுகளை பொறுத்துக் கொள்வதில் என சில விஷயங்களில் அடங்கியுள்ளது. 

இளைஞர்கள் சிலர் நினைக்கலாம் வெற்றி பெற்ற சில முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. வயதானால் என்ன? அவர்களும் தாம் முக்கியமாக கருதும் ஏதோ ஒன்றை இன்னும் கூட துரத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி வாழ்நாள் முழுதும் அடையவே முடியாத ஏதோ ஒன்றினை துரத்தியபடி இருக்கிறார்கள். 

இந்தப் போராட்டத்தில் அவர்கள் இழப்பது அவர்கள் முதலில் தேடிய சந்தோஷத்தைதான். அதன் பின் நட்பு, சிரிப்பு, ஆரோக்கியம் என நீளும் இந்தப் பட்டியல், இறுதியில் வாழ்க்கையையே தொலைக்கச் செய்துவிடும். எல்லாவற்றையும் இழந்து எதைப் பெறத் துடிக்கிறோம், இப்படி ஒன்றுமே பெற முடியாதவர்களாகி விடுவதற்காகவா இந்த வாழ்க்கை’ என்று கேள்வி எழுப்புகிறார் இந்த 36 வயதான குரு.

நேபாள் மற்றும் பூடானில் பெரும்பாலும் வசிக்கும் கேயல்வா துகம்பா தான் கற்றத் தேர்ந்த பழமையான பெளத்தம் சார்ந்த பாடங்களை மிகவும் எளிமைப்படுத்தி புதிய பார்வையுடன் எடுத்துரைக்கிறார். ஒருவருடைய சந்தோஷத்துக்கும் துயரத்துக்கு காரணம் அவரவர் மனம்தான் என்கிறார் இவர். மகிழ்ச்சி அல்லது திருப்தி வெளியிலிருந்து வருகிறதா அல்லது உள்ளிருந்தா என்று கவனித்துப் பாருங்கள் என்று வலியுறுத்துகிறார்.

'யாரேனும் உங்களுக்கு மில்லியன் டாலர்கள் தந்தால், உங்களுக்கு உடனே மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏன் அவ்வளவு சந்தோஷம் கொள்கிறீர்கள்? காரணத்தை நீங்களே சொல்வீர்கள் நான் இப்போது மில்லினியர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கேன்சர் வந்துவிட்டது. அதை குணப்படுத்த ஒரு மில்லியன் தேவை என்றால் அந்தப் பணத்தை என்ன செய்வீர்கள்? அந்த ஒரு மில்லியனை சந்தோஷத்துடன் கொடுத்து விடுவீர்கள் அல்லவா? 

இதிலிருந்து ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சந்தோஷம் என்பது அந்த ஒரு மில்லியன் டாலரில் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது திருப்தி உணர்வில் கிடைத்ததா? ஒரு மில்லியன் டாலர் கையில் இருந்தால் ஒருவர் வெற்றியாளராகிவிட முடியுமா? அனைவருக்குமே வெற்றியாளராக வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அனைவராலும் பில்லியனாரவோ மில்லியனராகவோ முடியாது என்பது தானே உண்மை. அதற்காக நாம் என்ன தோல்வியுற்றவர்கள் ஆகிவிடுவோமா என்ன? இவ்விதமான வெற்றி என்பது புற வயமானது. உள்ளார்ந்த மகிழ்ச்சி தேவை எனில் வாழ்க்கையில் திருப்தியும் நிறைவும் இருக்க வேண்டும். அதற்கு இந்தத் தருணம் விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி’

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வருபவர் கேயல்வா துகம்பா. சூழல் பற்றிய விழிப்புணர்வு குறித்து இளைஞர்களிடம் கலந்துரையாடுவதை விரும்புகிறவர். கேயல்வா துகாம்பரைப் பொருத்தவரையில் இமாலயம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக் ஆகிய இடங்கள் இந்தியாவுடன் 300 வருட காலத்துக்கும் மேலாக ஆழமான சரித்திர தொடர்புடையவை. 'இமய மலைப்பகுதி மற்றும் லடாக்கில் நாங்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பயணிகள் அதிகளவு குப்பை கூளங்களைப் போட்டுவிட்டு சென்றதைப் பார்த்தோம். அந்தக் குப்பைகள் அங்குள்ள ஆறு, குளம் மற்றும் சிற்றோடைகளில் விழுந்து அந்த நீர்நிலைகளை மாசுபடுத்திவிடுகிறது. இந்த ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் தான் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகித உலக மக்களின் நீராதாராமாக விளங்குகிறது. எங்களுடைய பணி இந்தக் குப்பைகளை அகற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது’ என்று கூறியுள்ளார் கேயல்வா துகம்பா.

ஆன்மிக தலைவராக மட்டும் இல்லாமல் செயல்வீரராகவும் இருப்பவர் கேயல்வா துகாம்பர். அவருடைய வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் டார்ஜிலிங்கில் கழித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம், மலேஷியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் உரையாற்றி, நல்ல பல கருத்துக்களை கூறி வருகிறார். தீவிரமான ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். 

அவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் ‘தி ரெஸ்ட்ஃபுல் மைண்ட் - எ நியூ வே ஆஃப் திங்கிங், எ நியூ வே ஆஃப் லைஃப்’ (The Restful Mind - A New Way of Thinking, A New Way of Life). இந்தப் புத்தகம் நவீன வாழ்க்கையின் அழுத்தங்களையும் அதிலிருந்து மீள வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. தவிர இப்புத்தகம் மனத்தை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான ஒரு கையேடு எனலாம். 

It isn't about never being angry or upset, but about how much we hold on to such restless emotions.

"The Restful Mind", by His Eminence Gyalwa Dokhampa

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com